இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு

தீவிரவாதிகள் அச்சுறுத்தலை அடுத்து பெங்களூரில் உள்ள இன்ஃபோசிஸ் சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ் நிறுவனத் தலைமையகத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்.) போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் உள்ள சில மத்திய அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், இன்ஃபோசிஸ் சாஃப்ட்வேர் தொழில் நுட்ப நிறுவனம் போன்றவற்றை குண்டுவைத்து தகர்க்கப்போவதாக தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்திருந்தனர். கடந்த ஆண்டு பெங்களூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள்கூட இன்ஃபோசிஸ் நிறுவனத்தை தாக்க சதித் திட்டம் தீட்டியிருந்தனர்.

இந்நிலையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டுமென அரசுக்கு இன்ஃபோசிஸ் நிறுவனம் கோரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, தனியார் நிறுவனங்களிலேயே முதல் முறையாக இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு சி.ஐ.எஸ்.எஃப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 1969-ல் சிஐஎஸ்எஃப் உருவாக்கப்பட்டதில் இருந்து இதுவரை அரசுத்துறை நிறுவனங்களுக்கு மட்டுமே இந்தப் படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. முதல் முறையாக தனியார் நிறுவனத்துக்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று சிஐஎஸ்எஃப் அதன் ஐ.ஜி. ஆர்.கே.மிஸ்ரா தெரிவித்தார்.

மொத்தம் 101 வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய பாதுகாப்புப் படையின் காவல் பணிக்காக இன்ஃபோசிஸ் நிறுவனம் ஆண்டுக்கு ரூ. 2.5 கோடி செலவிடும்.

மும்பை தாஜ் ஹோட்டலில் கடந்த ஆண்டு நடந்த தீவிரவாத தாக்குதலை அடுத்து தனியார் நிறுவனங்களுக்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பை வழங்க வகை செய்யும் சட்டத் திருத்தம் இந்த ஆண்டு ஜனவரியில் கொண்டுவரப்பட்டது.

ரிலையன்ஸ், டாடா, ஓபராய் உள்ளிட்ட 79 தனியார் கார்பரேட் நிறுவனங்கள் தங்களுக்கு சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது என்றார் அவர்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails