15 ஆண்டுகள் பழமையான வர்த்தக வாகனங்களுக்கு உரிமத்தை ரத்து செய்யும் மேற்குவங்க மாநில அரசின் முடிவை கடுமையாக எதிர்த்து கோல்கத்தா நகரில் அண்மையில் மிகப்பெரிய அளவில் வேலைநிறுத்தம் நடைபெற்றது.
புகையைக் கக்கும் வாகனங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் யாருக்கும் எந்தவிதமான கருத்து வேற்றுமையும் இருக்கவே முடியாது. ஏனென்றால் வாகனப் புகையால் வெளிச்சூழலில் பரவுகிற துகள்கள் எண்ணிக்கையும், சுவாசிக்கும் காற்றின் மூலம் நுரையீரலுக்கு உள்ளே செல்லும் துகள்களின் எண்ணிக்கையும் 140 : 60 என்ற விகிதாசாரம்வரை இருக்கலாம். இதில் உள்ளே செல்லும் துகள்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அந்தச் சூழலில் வாழ்வோருக்கு மார்பக நோய்கள், ஆஸ்த்மா ஆகியவை ஏற்படுகின்றன.
கோல்கத்தா நகரில் உள்ள மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் ஏதோ ஒரு வகை நுரையீரல் நோய்க்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் மையம் ஆய்வு நடத்தி அறிவித்திருக்கிறது. இந்த அறிக்கையை வைத்துப் பார்க்கும்போது இந்தத் தடை மிகவும் நியாயமானது எனத் தோன்றும்.
ஆனால், இந்தச் சட்டம் எல்லா வாகனங்களுக்கும் பொருந்துமா என்பதும், வர்த்தக வாகனங்களுக்கும்கூட இதை இப்போதுள்ளபடியே அமல்படுத்துவது சரியா என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.
15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் அனைத்தையும் தடை செய்ய மேற்குவங்க மாநில அரசு முடிவு செய்திருந்தாலும், நீதிமன்றம்தான் இதனை வர்த்தக வாகனங்களுக்கு மட்டும் அனுமதிக்கலாம் என்று கூறியது. இதை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது என்பது வேறு விஷயம்.
ஒரு வாகனத்தை வாங்குவோர் 15 ஆண்டுகளில் பயன்படுத்தித் தூக்கி எறிய வேண்டும் என்பது மேற்கத்திய கலாசாரம். இந்தியாவில் ஒரு வாகனத்தை வாங்குவது என்பது ஒரு குடும்பத்தின் கனவு. அதிலும் ஆட்டோ, சரக்கு லாரி போன்ற வர்த்தக வாகனம் என்பது குடும்பத்தின் முதலீடு. கடன்பட்டுத்தான் வாங்குகிறார்கள். அந்த வாகனத்தை குடும்பத்துக்கு சோறு போடும் வாகனமாக வணங்குவதுதான் இந்தியப் பண்பாடு. அவர்களால் ஒரே நாளில் தூக்கியெறிய முடியாது. ஒரு வாகனத்தை 15 ஆண்டுகளில் குப்பையில் வீசிவிட்டு வேறு வாகனம் வாங்குவதற்கான பொருளாதார சக்தி அனைத்து மக்களிடமும் இல்லை.
வர்த்தக வாகனங்கள் சரக்குப் போக்குவரத்து அல்லது மனித சவாரிகள் மூலம் கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கை 15 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய வாகனம் வாங்குவதற்கான சேமிப்பாக ஒதுக்க வேண்டும் என்று சொல்லப்படும் வாதங்கள் எழுத்தில் படிக்க நன்றாக இருக்கும். வாழ்க்கையின் தேவையும் நடைமுறையும் வேறானவை.
15 ஆண்டுகள் பழமையான வாகனத்தை ஒழிக்க வேண்டும் என்ற முடிவை ஓர் அரசு எடுக்குமானால் அதற்கான மாற்று வழிகள் குறித்தும் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும் அதைச் செய்யும் நடைமுறைகளை யோசித்துவிட்டு இந்தப் பிரச்னையை கையில் எடுக்க வேண்டும்.
காப்பீட்டு நிறுவனங்களுடன் அரசு ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்தி, 15 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய வாகனம் வழங்கும் வகையிலான காப்பீட்டுத் திட்டத்தையும் அதற்காக வாகன உரிமையாளர் செலுத்தும் பிரீமியத் தொகைக்கு ஒரு சமபங்கு தொகையை அரசும் செலுத்தும் திட்டத்தை முன்னதாகவே ஏற்படுத்தி, இத்தகைய பழைய வாகனங்களை மெல்ல ஒழிக்கும் திட்டத்தைக் கொண்டுவந்திருக்க வேண்டும்.
அல்லது, இத்தகைய புகை கக்கும் பழைய வாகனங்களை எடுத்துக் கொண்டு சலுகை விலையில் புதிய வாகனம் அளிக்கும்படி, ஆட்டோ, கார், சரக்கு வாகன உற்பத்தியாளர்களை அரசு நிர்பந்திக்குமானால், அல்லது அதற்கான மானியத் தொகை அளிக்க முன்வருமானால், இப்பிரச்னை சிக்கலின்றி அமலாகும்.
அதைவிடுத்து, கடன்பட்டு வாங்கிய சரக்கு வாகனங்களையும் ஆட்டோக்களையும், இன்னமும் முதலீட்டைக்கூட கண்ணில் காணாத நிலையில், திடீரென தூக்கியெறி என்றால் எப்படி சாத்தியமாகும்? புதிய வாகனம் வாங்கும் சக்தி இல்லை என்பது ஒருபுறம், வாங்கிய வாகனத்தின் கடனே அடைபடவில்லை என்பது மறுபுறம்.
அதிக புகை கக்கும் வாகனங்களைக் கண்டுபிடித்து, அவற்றை எரிவாயுவில் இயங்கச் செய்யும் சலுகை அல்லது மானியத் திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தலாம். இவர்கள் வாழ்வாதாரம் சீர்குலையாமல் மெல்ல புதிய மாற்றத்துக்கு வித்திடலாம்.
அதேபோன்று, வர்த்தகப் பயன்பாட்டுக்கு அல்லாத தனிநபர் வாகனங்கள், புகை கக்கும் பிரச்னை இல்லாத வரையில் அதை பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஏனெனில், வர்த்தக வாகனங்களைவிட தனிநபர் வாகனங்கள் ஓராண்டுக்கு ஓடும் தூரம் மிகக் குறைவாகத்தான் இருக்கும்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு எத்தகைய மாசு ஏற்படும், எவ்வளவு மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணராமலேயே லட்சக் கணக்கான வாகன உற்பத்தியை அனுமதித்து வாகன உரிமங்கள் வழங்கிய அரசின் தவறுக்கு மக்களைத் தண்டிப்பதா?
தற்போது கோல்கத்தாவில் நடைபெறும் பிரச்னைக்கான அடிப்படைக் காரணங்கள் சென்னை மாநகருக்கும் பொருந்தும். இதே நெருக்கடி தமிழக அரசுக்கும் நேரிடும். இப்போதே தமிழக அரசு ஆலோசனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. வரும் முன் காப்பதுதான் புத்திசாலித்தனம்.
0 comments:
Post a Comment