வெளிச்சம் போடும் விளக்குகள்

மின்சாரத்தைச் சேமிக்க வேண்டும் என்பதை பல்வேறு விளம்பரங்கள் மூலம் நாள்தோறும் மக்களுக்கு அரசு அறிவுறுத்துகிறது. புளோரசன்ட் பல்புகளுக்கு மாறுவதன் மூலம் மின்பயன்பாட்டையும் மின்கட்டணத்தையும் குறைத்துக்கொள்ள முடியும் என்றும் சொல்கிறது. ஆனால், இதில் அரசு எத்தகைய முனைப்பைக் காட்டுகிறது என்று பார்த்தால், ஒன்றுமே இல்லை என்று சொல்லிவிடலாம்.

தெருவிளக்குகள் அனைத்தும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் வருகின்றன. தெருவிளக்குகளின் எண்ணிக்கை மற்றும் அதில் பயன்படுத்தப்படும் விளக்குகளின் வகைப்பாட்டை பொருத்து, சலுகையுடன் கூடிய மின்கட்டணத்தை மின்வாரியம் நிர்ணயிக்கிறது. தெருவிளக்குகள் பராமரிப்பின்றி எரியாமல் இருந்தாலும், அல்லது பகல் நேரத்தில் தேவையில்லாமல் எரிந்தாலும் ஒரே கட்டணம்தான்.

மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 30 மீட்டர் இடைவெளியில் தெருவிளக்குகளை அமைத்து மக்களுக்கு வெளிச்சம் தரும் கொள்கையைக் கொண்டுள்ளது தமிழக அரசு. ஆண்டுதோறும் தெருவிளக்குகள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இரவு நேரத்திலும் மக்கள் சிரமமின்றி நடமாட வேண்டும் என்பதற்காகத்தான் தெருவிளக்குகள். ஓர் இடத்தை இரவு நேரத்தில் கடந்துசெல்லும் மக்கள் எண்ணிக்கை மற்றும் வாகனங்களின் எண்ணிக்கையை வைத்தே அந்த இடத்தில் சாதாரண குழல்விளக்கு கொண்ட மின்கம்பம் போதுமா, அல்லது சோடியம் விளக்கு தேவையா, அல்லது உயர்கோபுர மின்விளக்கு தேவையா என்பதைத் தொடர்புடைய அதிகாரிகள் தீர்மானிக்க வேண்டும்

ஆனால் தேவையான இடத்தில், தேவைப்படும் விளக்குகள் அமைக்கப்படுவதே இல்லை. உள்ளூர் அரசியல் பிரமுகரின் கட்டாயத்தின் பேரில் அவர் சொல்லும் இடத்தில் தெருவிளக்குகள், அல்லது உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்படுகின்றன. அரசியல்வாதிகளின் பெருமைக்காக இவை தீர்மானிக்கப்படுகிறதே தவிர மக்களின் தேவைக்காக அல்ல.

ஒரு குழல்விளக்கு அல்லது சோடியம் விளக்கு கொண்ட மின்கம்பம் அமைக்க ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை செலவாகிறது என்றால், ஒரு உயர்கோபுர மின்விளக்கு அமைக்க அதன் உயரத்துக்கு ஏற்ப, ரூ. 4 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை செலவாகிறது. இதற்கான மின்கட்டணமும் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் ஆகிறது. பராமரிப்புக்கும் இதே அளவு செலவாகிறது. இந்த அபரிமிதமான செலவினத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, சென்னை மாநகராட்சி உயர்கோபுர மின்விளக்குகள் அமைப்பதை நிறுத்திக்கொள்ளத் தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.

அதிமுக்கியமான நான்கு சாலை சந்திப்புகளில், அப்பகுதியின் முழுப்பரப்புக்கும் ஒளிதரும் வகையில்தான் உயர்கோபுர மின்விளக்குகளின் உயரமும், விளக்குகளின் எண்ணிக்கையும் தீர்மானிக்கப்பட வேண்டும். மேலும், இரவு நேரத்தில் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும் பகுதிகளில்தான் அமைக்கப்பட வேண்டும். தேவை இல்லாத இடங்களில் எல்லாம் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்படுகின்றன. இத்தகைய புதிய நடைமுறைக்கு ஈரோடு, திருப்பூர், வேலூர் போன்ற "இளம்' மாநகராட்சிகள் அதிக ஆர்வம் காட்டுவது கவலை அளிப்பதாக இருக்கிறது. சில நகராட்சிகள் கூட தற்போது உயர்கோபுர மின்விளக்குகளை விரும்புகின்றன. இத்தகைய ஆர்வக் "கோளாறுக்கு' காரணம், திட்ட மதிப்பீடு உயரஉயர ""20 சதவீதத்தின் அளவும்'' உயர்கிறது என்பதைத் தவிர வேறொன்றும் கிடையாது.

தெருவிளக்குகள் அமைக்கும்போது வெறும் 30 மீட்டர் இடைவெளியை மட்டும் கருத்தில் கொள்ளாமல், மக்கள் பயன்பாடு வாகனப் புழக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் குழல்விளக்கு, சோடியம்விளக்கு, உயர்கோபுர மின்விளக்கு ஆகியவற்றை அமைப்பதற்கான அடிப்படை நிபந்தனைகளை அரசு நிர்ணயிக்க வேண்டும்.

மேலும், எரியாத விளக்குகளை மாற்றுவதில் உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும் ஊழல் மிகப் பெரிதாக இருக்கிறது. ஏன் இத்தனை விளக்குகள் "ப்யூஸ்' போயின என்று கேட்கவும் முடியாது. ப்யூஸ் போன பல்புகளுக்கு மின்சாதன நிறுவனம் தந்த "வாரண்டி' காலம் எவ்வளவு என்றால் பதில் வராது. உண்மையாக வாங்கியிருந்தால், வாரண்டி காலத்துக்கு முன்னதாக ப்யூஸ் போன பல்புகள் ஒவ்வொன்றுக்கும் மாற்று பல்பு பெற முடியும். ஆனால் உள்ளாட்சித் தணிக்கைத் துறையினரையே குழப்பி அடிக்கிற அளவுக்கு பொய்ரசீதுகள் புழக்கம் இருக்கிறது. இதைக் கணக்கெடுக்கவும், அத்துறை அதிகாரிகளைப் பொறுப்பேற்கச் செய்யவும் புதிய விதிமுறைகளை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails