நோய்க்கு மூலகாரணம்

தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகளுக்காக ரூ. 20 கோடி மருந்துகள் வாங்கும் உத்தரவை வழங்க ரூ. 8.53 லட்சம் லஞ்சம் பெற்றதாக ஊரக மருத்துவப் பணிகள் மற்றும் திட்ட இயக்குநர் எழிலரசியை தமிழக லஞ்ச ஒழிப்புப் போலீஸôர் கைது செய்தனர். இதில் இதுவரை இல்லாதவகையில் பாராட்டக்கூடிய நடைமுறை என்னவென்றால், லஞ்சம் கொடுத்த மருந்து நிறுவனங்களைச் சேர்ந்தவர்களையும் கைது செய்திருப்பதும், தங்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவல் அடிப்படையில் இதை நடத்தியிருப்பதும்தான்.

லஞ்சம் கொடுத்த மருந்து நிறுவனங்களின் பெயர்களும், அவர்களது பிரதிகளின் பெயரும் தெரிவிக்கப்பட்டபோதிலும் ஊடகங்கள் அதைப் பெரிதுபடுத்தவில்லை என்பதும், அரசும் இந்த மருந்து நிறுவனங்களின் மற்ற வியாபாரம், இவர்கள் ஏற்கெனவே விநியோகிக்கும் மருந்துகளின் தரம் ஆகியவற்றை உடனடியாக ஆய்வு செய்யாதிருப்பதும்தான் ஏமாற்றம் அளிக்கிறது.

வரிஏய்ப்பு, கடத்தல், போலிச் சான்றிதழ் போன்ற லஞ்ச ஊழல்களில் நாட்டின் வருவாய்க்கு கேடு விளையும். சில விஷயங்கள் நாட்டின் பாதுகாப்புக்குக் குந்தகமாக அமையும். ஆனால் உணவுக் கலப்படம், மருந்துகளில் லஞ்ச ஊழல் என்பது அப்பாவி மக்களின் உயிருக்கே கேடு விளைவிக்கும். இந்த மிகக் கொடிய செய்கையை இந்தியாவில் நிகழ்த்திக் கொண்டிருப்பவை பெரும்பாலான மருந்து நிறுவனங்கள்தான். இவர்களை அரசு எந்த அளவுக்குக் கண்காணித்து, கட்டுக்குள் வைக்கிறதோ அந்த அளவுக்கு மக்களின் மருத்துவச் செலவும் குறைவாக இருக்கும்.

நிகழாண்டில், ஒரு ஆங்கில மாதஇதழின் ஆசியப் பதிப்பில் வெளியான செய்தி, ""94 சதவீத டாக்டர்கள் மருந்துக் கம்பெனிகள் தரும் பரிசுப் பொருள்களை வாங்கிக்கொண்டு, அவர்கள் சொல்லும் மருந்துகளை நோயாளிக்கு எழுதித் தருகிறார்கள்'' என்று சொல்கிறது.

முன்பெல்லாம், மருத்துவர்கள் எழுதித் தரும் மருந்துகளை நோயாளிகள் கடைகளில்தான் வாங்கி வந்தனர். இப்போதெல்லாம் பெரும்பாலான டாக்டர்கள் தங்களிடமே மருந்தை வாங்கச் சொல்கிறார்கள். அவர்களே மருந்துக் கடை நடத்துகிறார்கள். இதற்குக் காரணம் மருந்து நிறுவனங்கள் டாக்டர்கள் மனதில் விதைத்திருக்கும் விஷ விதைதான்.

"மருந்தை நீங்களே விற்கலாமே', "ஸ்கேன் இயந்திரத்தை நீங்களே வாங்கிப் போட்டுக்கொள்ளலாமே', "இசிஜி நீங்களே வைத்துக் கொள்ளலாமே' என்று ஒவ்வொரு கருவியாகக் கொண்டுவந்து திணிக்கிறார்கள். அவர்களே அதற்கான தவணையைத் தீர்மானிக்கிறார்கள். போட்ட முதலையும் நூறு சதவீத லாபத்தையும் இரு ஆண்டுகளில் பெறுவது எப்படி, அதற்கு ஒரு நாளைக்கு எத்தனை நோயாளிகளை கட்டாயமாக இந்தக் கருவியின் பயன்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும், எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அட்டவணை போட்டுத் தருகிறார்கள்.

இன்றைய மருத்துவச் செலவு அதிகரிப்பதற்கு மிக முக்கியமான காரணம் கொள்ளை லாபம் அடையும் மருந்து தயாரிப்பு மற்றும் மருத்துவக் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்கள்தான்.

அரசு மருத்துவமனைக்கு விற்கப்படும் ஒரு பாராசிட்டமால் விலை அதிகபட்சம் 10 காசுகள்தான். ஆனால் மருந்துக் கடைகளில் இதன் விலை ஒரு ரூபாய்க்குக் குறையாது. இதே நடைமுறைதான் எல்லா வகை மருந்துகளிலும்!. ஒரே அடிப்படை மூலக்கூறினை இவர்கள் வெவ்வேறு பெயர்களில் மாற்றி, மாற்றிப் பெயர் வைத்து விற்க இந்திய அரசு அனுமதிக்கிறது. அது போதாதா? புதிய புதிய பெயர்களில் மருந்துகளை வேறு சில மூலக்கூறுகளைச் சேர்த்து, அல்லது நீக்கித் தயாரித்து, அதையே நோயாளிக்கு எழுதித் தரும்படி மருத்துவர்களை வசியம் செய்கிறார்கள்.

இதற்காக மருத்துவர்களுக்குப் பரிசுகள் தரப்படுகின்றன. மாதம் ஒருமுறை ஓய்வான சந்திப்பு என்ற பெயரில் விருந்து கொடுக்கிறார்கள். சில நேரங்களில் மருத்துவர் சங்க மாதாந்திரக் கூட்டச் செலவு, கருத்தரங்கச் செலவு, பயிற்சிமுகாம் செலவு ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இது மட்டுமா? ஊட்டி, கொடைக்கானல் போன்ற கோடைவாசஸ்தலங்களில் ரிசார்ட்களை ஆண்டு முழுமைக்கும் வாடகைக்கு எடுத்து, அவர்களை குடும்பத்துடன் வந்து தங்கியிருக்கச் செய்யும் சேவையையும் இந்த மருந்து நிறுவனங்கள் செய்கின்றன.

""டாக்டர் சார், ஒரு ஆஞ்சியோகிராம் செய்து பாத்துடுவோமா?'' என்று நோயாளியே கேட்டாலும், ""தேவையில்ல, ரெண்டு மாடி சிரமமில்லாம ஏறி வர முடியுதே, உங்களுக்கு ஒண்ணுமில்ல'' என்று சொன்ன தெய்வங்கள் வாழ்ந்த இந்திய மருத்துவ உலகை, பணப்பேய்களின் கூடாரமாக்கிய பெருமை இந்த மருந்து நிறுவனங்களுக்கே உரித்தானது. மருத்துவ உலகின் மோசமான வைரஸ்- மருந்து, மருத்துவக் கருவி தயாரிக்கும் நிறுவனங்கள்தான்.

இந்தியாவில் ஏழைக்கும் ஏற்கும் வகையில் மருத்துவச் செலவை குறைக்க வேண்டும் என்றால், இத்தகைய லஞ்சம் கொடுப்பதில் ஈடுபடும் மருந்து நிறுவனங்களின் அனைத்து குறுக்குவழிகளையும் அடைத்து, இவர்களது லாபவெறிக்கு விலங்கு போட்டால்தான் முடியும்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails