நிதிநிலை அறிக்கை என்பது ஒரு தேசத்தின் அல்லது மாநிலத்தின் பொருளாதார நிலையை வெளிப்படுத்துவதாக மட்டும் அமைவதில்லை. அடுத்த ஓராண்டில், அந்த அரசு எந்தெந்த துறைகளுக்கு முன்னுரிமை அளிக்க இருக்கிறது, என்னென்ன சமுதாய மற்றும் மக்கள் நலப் பணிகளை முன்னிறுத்திச் செயல்பட இருக்கிறது, கனரகத் தொழில், சிறு தொழில்கள், விவசாயம், ஏற்றுமதி, சேவையை முன்னிறுத்தும் தொழில்கள் ஆகியவற்றிற்கு எந்தெந்த அளவுக்கு ஊக்கம் அளிக்கப் போகிறது என்பதை எல்லாமே தெளிவாக்கும் ஓர் "எக்ஸ்ரே'தான் நிதிநிலை அறிக்கை என்பது.
கடந்த முறை தேர்தலுக்கு முன்னால், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஓர் இடைக்கால நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பித்தபோது இருந்த நிலைமையே வேறு. தேர்தலில் வெற்றி பெற்று, கணிசமாகக் கூட்டணி நிர்பந்தங்கள் தளர்ந்து விட்டிருக்கும் நிலையில் ஒரு நிதிநிலை அறிக்கையை பிரணாப் முகர்ஜி சமர்ப்பித்திருக்கிறார்.
நிதிநிலை அறிக்கையைப் படித்துப் பார்த்ததும் பளிச்சென மனதில் பட்ட விஷயங்கள் இரண்டுதான். முதலாவது, பரந்த பாரத தேசத்தின் வருட வரவு செலவு ரூ. பத்து லட்சம் கோடியைத் தாண்டியிருக்கிறது என்பது. அடுத்தது, கடந்த நிதி ஆண்டில் 6.2 சதவீதமாக இருந்த பற்றாக்குறை இந்த ஆண்டு 6.8 சதவீதமாக உயரும் என்பது. பற்றாக்குறை நிதிநிலை அறிக்கை சமர்ப்பிப்பதில் தவறு இல்லைதான். அதேநேரத்தில், நிதிப் பற்றாக்குறை என்பது வளர்ச்சிக்கும், மூலதனத்துக்கும் வழிகோலாமல், விலைவாசியை அதிகரிக்க மட்டுமே உதவும் என்றால், அதைவிட ஆபத்தான விஷயம் எதுவும் இருக்க முடியாது.
தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு கணிசமான நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம். அதற்காக, ரூ. 39,100 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மேலும் 4.74 கோடி குடும்பங்களுக்கு இந்தத் திட்டம் பரவலாக்கப்படுகிறது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதுமட்டுமல்லாமல், கிராமப்புற வீட்டு வசதிக்காக ரூ. 2,000 கோடி தேசிய வீட்டுவசதி வங்கிக்கு ஒதுக்கி இருப்பதும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
அதேபோல, நகர்ப்புற ஏழை எளியவருக்கான வீட்டு வசதிக்காக ரூ. 3,973 கோடி ஒதுக்கி இருப்பதும் நல்லதொரு முயற்சி. இந்த ஒதுக்கீடு தெருவோரவாசிகளையும், குடிசைவாழ் மக்களையும் சுகாதாரமான வசதிகளுடன் கூடிய குடியிருப்புகளில் வாழ வழிகோலுமானால், நிதியமைச்சர் புண்ணியம் கட்டிக் கொள்வார். அரசு, மக்களின் நல்லாதரவைப் பெறும்.
குறித்த காலத்தில் கடனைத் திருப்பி அளிக்கும் விவசாயிகளுக்கு சிறப்புச் சலுகை என்பது, வானம் பார்த்த பூமியில் விவசாயம் செய்யும் சிறு விவசாயிகளைக் கேலி செய்வது போன்றது. குறித்த நேரத்தில் கடனுதவி கிடைக்க வழி செய்வதும், நீர்ப்பாசன வசதி, உரம், விதை போன்றவை கிடைக்க வகை செய்வதும்தான் அவர்களது அத்தியாவசியத் தேவை என்பதை எப்போதுதான் நமது ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளப் போகிறார்களோ, தெரியவில்லை.
தனிநபர் வருமான வரியின் வரம்பைக் கண்துடைப்புக்காக உயர்த்தி இருப்பதும், தனிநபர் வருமான வரியிலான 10 சதவீதம் கூடுதல் வரியை அகற்றி இருப்பதும், அவர்களுக்குத் தரப்பட்டிருக்கும் கண்துடைப்பு சலுகைகளாகும். ஃப்ரின்ஞ் பெனிபிட் வரி எனப்படும் கூடுதல் சலுகைகளுக்கான வரியை அகற்றி இருப்பது, உயர் வருவாய்ப் பிரிவினரின் வரவேற்பைப் பெறும்.
தொழில்துறை வளர்ச்சிக்கு இந்த நிதிநிலை அறிக்கை எந்த அளவுக்குப் பயனளிக்கும் என்பது சந்தேகமாக இருக்கிறது. ஏற்றுமதியை முன்னிறுத்தும் உற்பத்தியாளர்களுக்கு அடுத்த 9 மாதத்துக்கு 2 சதவீதம் வட்டிச் சலுகை என்கிறார் நிதியமைச்சர். தொழிற்சாலையை நடத்தவே தத்தளிக்கிறார்கள் பலர். அவர்களைக் கைதூக்கி விடுவதை விட்டுவிட்டு, ஏற்றுமதியை ஊக்குவிக்க வட்டிச்சலுகை என்பது ஏமாற்று வித்தையல்லவா? அப்படியே வட்டியில் சலுகை தருவதாக இருந்தாலும் குறைந்தது 2 அல்லது 3 ஆண்டுகளுக்குத் தராவிட்டால், எப்படி தொழில் வளர்ச்சி அதிகரித்து பொருளாதாரம் தேக்கத்திலிருந்து விடுபடும்?
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், காப்பீட்டுக் கழகங்களும் தனியார் மயமாகாது என்று கூறியிருக்கிறார். மகிழ்ச்சி. அரசியல் கட்சிகளுக்கான நன்கொடைகளுக்கு முழு வரி விலக்கு அளித்திருக்கிறார். அரசுக்கு இகழ்ச்சி!
சிறிய நகைக் கடைகளும், தனியார் ஆசாரிகளும் தயாரிக்கும் தங்க நகைகளுக்கு வரியுண்டு. ஆனால், பெரிய நிறுவனங்களும், நகைக் கடைகளும் தயாரித்து விற்பனை செய்யும் நகைகளுக்கு வரி கிடையாது. இந்த அறிவிப்பு, சர்வதேச நகை தயாரிப்பாளர்களுக்குப் பட்டுக் கம்பளம் விரிக்கும் முயற்சியோ என்று கருத இடமிருக்கிறது. அடிப்படையே ஆட்டம் காணும் நிலையில் பொருளாதாரம் இருக்கும்போது இப்படி ஒரு முயற்சி தேவைதானா?
அனுபவசாலியின் நிதிநிலை அறிக்கையாயிற்றே; அதுவும், பொருளாதாரத் தேக்கத்திலிருந்து மீண்டு அனைத்துத் துறைகளையும் புத்துணர்வு பெறச் செய்ய வேண்டிய நேரமாயிற்றே; கூட்டணி நிர்பந்தங்களில்லாமல், துணிந்து பல முயற்சிகளையும், புத்திசாலித்தனமான தீர்வுகளையும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்த நிதிநிலை அறிக்கையின் மூலம் முன்வைப்பார் என்று எதிர்பார்த்தால், எதிர்பார்ப்புகள் பொய்த்தனவே...
0 comments:
Post a Comment