கொலையாளி சிக்கியது எப்படி?- புதிய பரபரப்பு தகவல்கள்

கப்பல் கேப்டன் இளங்கோவன், ரமணி சுட்டுக்கொல்லப்பட்டது எப்படி என்பது பற்றி குண்டு காயம் அடைந்து அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருமகள் வசந்தி, மகன் பிரவீண் ஆகியோர் போலீசாரிடம் விவரமாக கூறினார்கள்.

பிரவீணுக்கு தமிழ், ஆங்கிலம் தெரியவில்லை. பிரான்சில் படித்து வரும் பிரவீண் பிரெஞ்சு மொழியில் சொன்னதை போலீசாரிடம் ஒருவர் மொழி பெயர்த்து கூறினார்.

அதன் விவரம் வருமாறு:-

சுட்டுக்கொல்லப்பட்ட கேப்டன் இளங்கோவனின் மூத்த மகன் வித்யாசங்கர். மனைவி வசந்தி, மகன் பிரவீண், மகள் பிரியங்காவுடன் பிரான்சில் வசித்து வருகிறார். கடந்த வாரம் தான் அவர்கள் சென்னை வந்தனர்.

அவர்களுடன் வசந்தியின் தங்கை சுமதி, அவரது கணவர் ஜெரால்டு அசோகன் ஆகியோரும் பிரான்சில் இருந்து சென்னை வந்துள்ளனர். வித்யாசங்கரின் வெள்ளைக்கார நண்பர்கள் சிலரும் சென்னை வந்திருந்தனர். அவர்களுக்கு இங்குள்ள சுற்றுலா தலங்களை வித்யாசங்கர் சுற்றிக்காண்பித்தார்.

நேற்று மாலை பிரான்ஸ் நாட்டு நண்பர்களை, அவர்கள் நாட்டுக்கு அனுப்ப மதியம் 2.30 மணிக்கு வித்யாசங்கர் மீனம்பாக்கம் விமான நிலையம் சென்றார். அவர் சென்ற 30 நிமிடத்தில் கொலையாளி ராஜன், விட்டுக்குள் புகுந்தார்.

வீட்டுக்குள் இருந்த கேப்டன் இளங்கோவன், ரமணி, வசந்தி, பிரவீண், பிரியங்கா ஆகியோரை துப்பாக்கி முனையில் மிரட்டி, ஒரே அறைக்குள் தள்ளினார். பிறகு குழந்தைகளை மட்டும் விட்டு, விட்டு மற்ற 3 பேரையும் மிரட்டி ஒவ்வொரு அறையாக அழைத்து சென்றார். அங்கிருந்த பீரோக்களில் இருந்த நகை, பணத்தை வாங்கி ஒரு பையில் வைத்துக்கொண்டார்.

கட்டுக்கட்டாக பணம், 50 பவுனுக்கு மேல் நகைகளை இளங்கோவன் குடும்பத்தினர் கொடுத்தனர். நகைகளை வாங்கிய பிறகு, ஒரு பை நிரம்பி விட்டது. அனைத்து அறைகளைப்பார்த்து முடித்த பிறகு இன்னும் உங்களிடம் பணம் இருக்கும் எடுத்துக் கொடு என்று மிரட்டி உள்ளார்.

எல்லாவற்றையும் தந்து விட்டோம். எங்களை ஒன்றும் செய்யாதே விட்டு விடு என்று இளங்கோவன் குடும்பத்தினர் கெஞ்சினார்கள். ஆனால் ராஜன் வெறி பிடித்தவர் போல ரமணியை சுட்டார். தலையில் குண்டு பாய்ந்த அவர் அலறிய படி கீழே விழுந்து செத்தார்.

அப்போது ராஜனை இளங்கோவன் பிடிக்க முயன்றார். அவரையும் ராஜன் சுட்டார். வயிற்றில் குண்டு பாய்ந்து இளங்கோவன் சுருண்டு விழுந்தார்.

இதை பார்த்து வசந்தி தப்பி ஓடினார். அவரையும் ராஜன் குறி பார்த்து சுட்டார். இதில் வசந்தியின் கழுத்து, தோளில் குண்டடி பட்டு பக்கத்து அறைக்குள் ஓடி விட்டார்.

அப்போது தாயை பார்த்து அலறியபடி பிரவீணும், பிரியங்காவும் ஓடி வந்தனர். அவர்களையும் ராஜன் குறி பார்த்து சுட்டார். உடனே பிரியங்கா, கட்டிலுக்கு கீழ் குனிந்து கொண்டார். என்றாலும் காது ஓரத்தில் குண்டுகள் உரசி சென்றன. இதில் பிரியங்காவுக்கு காயம் ஏற்பட்டது.

அடுத்ததாக பிரவீணுக்கு, ராஜன் குறி வைத்துள்ளார். ஆனால் துப்பாக்கியில் குண்டுகள் தீர்ந்து விட்டிருந்தது.

இதனால் ராஜன் சமையல் அறைக்கு ஓடினார். அங்கு கிடந்த கத்தியை எடுத்து வந்து பிரவீணை மிரட்டி மேலும் ஒரு பை எடுத்து வா என்று கூறி உள்ளார்.

பிரவீண் பை கொண்டு வந்து கொடுத்தான். அந்த பைக்குள் லேப்-டாப் மற்றும் விலை உயர்ந்த சாதனங்களை ராஜன் எடுத்து திணித்தார். பிறகு பிரவீண் மீது கத்தியை எடுத்து வீசினான். இதில் பிரவீணின் கன்னம் மீது கத்தி பாய்ந்தது. அவன் அலறியபடி மற்றொரு அறைக்குள் தப்பி ஓடி விட்டான்.

நகை, பணம் அடைத்த பையை வீட்டுக்குள் வைத்து விட்டு, லேப்-டாப் வைத்திருந்த பையை மட்டும் எடுத்து கொண்டு ராஜன் முதலில் வெளியில் வந்தார்.

குண்டு காயத்துடன் சற்று மயங்கிய வசந்தி, பிறகு சுதாரித்துக் கொண்டு குளியல் அறைக்குள் ஓடி நின்று கொண்டார். சிறிது நேரத்தில் வீடு நிசப்தமானது. உடனே அவர் திகைத்தப்படியே வீட்டு முன் கதவை பூட்டினார்.

பிறகு தன் தங்கை சுமதிக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். கொள்ளையன் வீட்டுக்குள் வந்து விட்டான். ஆபத்தில் இருக்கிறேன். ஓடி வாருங்கள் என்று கூறினார்.

சுமதி, அவரது கணவர் அசோகன், இருவரும் கொட்டிவாக்கத்தில் ரமணி தங்கை வீட்டில் இருந்தனர். அவர்கள் அலறியடித்தப்படி காரில் பனையூருக்கு விரைந்தனர். வழியில் ரோட்டு ஓரத்தில் நின்ற சில போலீஸ்காரர்களிடம் இளங்கோவன் வீட்டு முகவரியை கொடுத்து கொள்ளைக்காரர்கள் புகுந்து விட்டனர். உதவிக்கு வாருங்கள் என்று சொல்லி விட்டு சென்றனர்.

சுமதியும், அசோகனும், பனையூர் சென்று சேருவதற்குள் வித்யா சங்கரின் தம்பி முகுந்த் மனைவி நீடாஷா அங்கு வந்திருந்தார். நீடாஷா வீட்டு முன்பு வந்த சமயத்தில் ராஜன் மீண்டும் பிணத்தை எடுக்க வீட்டுக்குள் சென்று கொண்டிருந்தான்.

நீடாஷாவை கண்டதும் ராஜன் உஷாரானார். நீடா ஷாவை மிரட்டி வீட்டுக்கதவை திறக்க சொன்னார்.

இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கும் போதே சுமதி, அசோகன் அங்கு வந்து விட்டனர். ஆட்கள் அதிகரித்ததைப்பார்த்ததும், சிக்கிக்கொள்ளக்கூடாது என்று ராஜன் ஓட ஆரம்பித்தார்.

கடற்கரை வழியாக அவர் தப்பி ஓடினார். உடனே நீடாஷா கொள்ளையன் ஓடுகிறான் பிடியுங்கள் என்று குரல் எழுப்பினார். இதை பார்த்த அசோகனும், அவர் கார் டிரைவர் முருகனும் ராஜனை விரட்டினார்கள்.

அவர்கள் இருவரையும் துப்பாக்கியைக் காட்டி ராஜன் மிரட்டினார். இதனால் பயந்து போன அசோகன், முருகன் இருவரும் சற்று பின் வாங்கினார்கள். அதற்குள் கிழக்கு கடற்கரை சாலைக்கு ராஜன் வந்து விட்டார். என்றாலும் முருகன் மட்டும் பின் தொடர்ந்து விரட்டினார்.

ஒரு மர கிளைக்குள் புகுந்து தப்ப ராஜன் முயன்றார். அப்போது முருகன் துணிச்சலுடன் ராஜனை பிடித்துக்கொண்டார்.

ஆத்திரம் அடைந்த ராஜன் பைக்குள் இருந்து ஒரு கத்தியை எடுத்து குத்த முயன்றார். உஷாரான முருகன் ராஜனை விடாமல் கெட்டியாகப்பிடித்துக்கொண்டார்.

பிறகு கொள்ளையனை பிடித்து விட்டேன், பிடித்து விட்டேன் ஓடி வாருங்கள் என்று குரல் கொடுத்தார். உடனே அந்த பகுதி மக்கள் ஓடி வந்தனர். அந்த பகுதி ஆட்டோ டிரைவர்களும் உதவிக்கு வந்தனர்.

முதலில் அவர்கள் ராஜனை ஒரு கயிற்றால் கட்டிப்போட்டனர். இதற்கிடையே வீட்டுக்குள் சென்று இருந்த சுமதி, நிடாஷாவும் ரத்த வெள்ளத்தில் இளங்கோவன், ரமணி கிடப்பதை பார்த்து அலறி துடித்தனர். பிறகு ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதில் வசந்தி, பிரவீண், பிரியங்கா ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.



0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails