இன்று திருவள்ளுவர் சிலை திறப்பு

பெங்களூரில் கடந்த 18 ஆண்டுகளாக மூடியிருந்த திருவள்ளுவர் சிலையை கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தலைமையில் தமிழக முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கிறார்.

திருவள்ளுவர் சிலை பெங்களூர் அல்சூர் கங்காதர ஷெட்டி சாலை நீலகண்டன் சர்க்கிளில் ஒடுக்கத்தூர் மடத்தின் முன்பகுதியில் அமைந்துள்ளது. இதுவரை மூடப்பட்டிருந்த திருவள்ளுவரின் பைபர் சிலை அகற்றப்பட்டு, வெண்கலத்தாலான சிலை நிறுவப்பட்டுள்ளது. சிலை உள்ள இடத்தில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

சிலை திறப்பு விழா அருகேயுள்ள ஆர்பிஏஎன்எம்எஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக அந்த மைதானத்தில் பிரமாண்ட மேடை மற்றும் மழை வந்தால் பொதுமக்கள் நனையாமல் இருக்க தகரத் தகடுகளால் ஆன மேற்கூரையுடன் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

காலை 11 மணிக்கு விழா துவங்குகிறது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமை தாங்குகிறார். விழாவில் கருணாநிதி கலந்து கொண்டு, ரிமோட் கண்ட்ரோல் மூலம் சிலையைத் திறந்துவைத்து உரையாற்றுகிறார்.

விழாவில் பெங்களூர் தவிர கர்நாடகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தமிழர்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என பெங்களூர்த் தமிழ்ச்சங்கத் தலைவர் மீனாட்சிசுந்தரம் அழைப்பு விடுத்துள்ளார்.

எனவே, விழாவில் லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவள்ளுவர் சிலை திறப்புக்கு சில கன்னட அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து இருப்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
தமிழில் அழைப்பிதழ்... கர்நாடக அரசு சார்பில் நடத்தப்படும் இந்த விழாவுக்கான அழைப்பிதழ் கன்னடம் மற்றும் தமிழில் அச்சடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அழைப்பிதழில் இரு மாநில முதல்வர்கள் பெயருடன் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, சிவாஜிநகர் சட்டப்பேரவை உறுப்பினர் ரோஷன் பெய்க், மக்களவை உறுப்பினர் பி.சி.மோகன் ஆகியோரது பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளது.

விழா நடைபெறும் மைதானத்தைச் சுற்றிலும் இரு மாநில முதல்வர்களையும் வரவேற்று அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. விழாவை மிகச் சிறப்பாக நடத்த முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டிருப்பதால் ஏற்பாடுகள் மிக பிரமாண்டமாக நடந்து வருகின்றன.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails