சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை

பங்குச் சந்தையில் திங்கள்கிழமை ஏற்பட்ட சரிவின் சுவடு அடுத்த நாளே மறைந்துபோனது. செவ்வாய்க்கிழமை 250 புள்ளிகள் உயர்ந்து குறியீட்டெண் 15,035 ஆக அதிகரித்தது.

இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 71 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டெண் 4,458 ஆக உயர்ந்தது.

ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தையில் காணப்பட்ட மீட்சி பிற்பகலில் மும்பை பங்குச் சந்தையில் புள்ளிகள் உயர வழிவகுத்தது.

தகவல் தொழில்நுட்பம், மின்சாரம், உலோகம், ஆட்டோமொபைல் நிறுவன பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்தன.

வெளிநாட்டு நிறுவனங்கள் ரூ. 1,030 கோடி அளவுக்கு ஆகஸ்ட் 14-ல் முதலீடு செய்துள்ளதாக வெளியான தகவலும் பங்குச் சந்தை உயர்வுக்குக் காரணமாக அமைந்தது.

ஹிண்டால்கோ நிறுவன பங்கு விலை 6.08 சதவீதமும், ஜெய்பிராஷ் அசோசியேட்ஸ் 4.73 சதவீதமும், எல் அன்ட் டி 4.66 சதவீதமும், ஹிந்துஸ்தான் யூனிலீவர் 3.45 சதவீதமும், டாடா ஸ்டீல் 3.14 சதவீதமும், எச்டிஎஃப்சி 3.06 சதவீதமும் அதிகரித்தன.

எச்சிஎல் டெக்னாலஜீஸ், யுனிடெக், டாடா கம்யூனிகேஷன்ஸ், இன்ஃபோசிஸ் டெக்னாலஜீஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவைச் சந்தித்தன.

கட்டுமான நிறுவனங்களின் பங்கு விலைகள் கணிசமான சரிவைச் சந்தித்தன. அதில் குறிப்பாக டிஎல்எஃப் நிறுவனப் பங்கு விலை 8 சதவீதம் சரிந்தது. இந்நிறுவனப் பங்கு விலை ரூ. 364.40-க்கு விற்பனையானது.

ஃபோனிக்ஸ் மில் நிறுவனப் பங்கு விலை 12 சதவீதம் சரிந்து ரூ. 124.85-க்கு விற்பனையானது. இதேபோல எச்டிஐஎல் 9 சதவீதம் சரிந்து ரூ. 268.20-க்கு விற்பனையானது.

யூனிடெக் நிறுவனப் பங்கு விலை 7 சதவீதம் சரிந்து ரூ. 85.70-க்கும், பர்சாவந்த் பங்குகள் 8 சதவீதம் குறைந்து ரூ. 110.15-க்கும் விற்பனையாயின.

இண்டியாபுல்ஸ் பங்கு 7.57 சதவீதம் சரிந்து ரூ. 218.65-க்கும், மஹிந்திரா லைஃப் 5 சதவீதம் குறைந்து ரூ. 298.90க்கும் விற்பனையானது.

இவை தவிர அன்சால் இன்பிராஸ்டிரக்சர், ஷோபா டெவலப்பர்ஸ், ஆனந்த் ராஜ், ஆர்பிட்கோ, ஓமாக்ஸ், பென்லாண்ட், ஆகுருதி ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் சரிவிலிருந்து தப்பவில்லை. மொத்தம் 1,741 நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்தன. 896 நிறுவனப் பங்கு விலைகள் சரிவைச் சந்தித்தன.

செவ்வாய்க்கிழமை மொத்தம் ரூ. 94,599.56 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தக அளவு ரூ. 91,347.93 கோடியாகும். இதில் தேசிய பங்குச் சந்தை வர்த்தகம் ரூ. 15,775.98 கோடியாகும்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails