ஒரே நாளில் 390 புள்ளிகள் சரிவு

மும்பை பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்தது. ஒரே நாளில் 390 புள்ளிகள் சரிந்ததால் குறியீட்டெண் 15,514 புள்ளிகளாகச் சரிந்தது.

புதன்கிழமை நம்பிக்கையளிக்கும் வகையில் முன்னேற்றம் கண்ட பங்குச் சந்தை ஒரே நாளில் கிடுகிடுவென சரிந்து முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.

என்எச்பிசி நிறுவனப் பங்கு வெளியீட்டில் முதலீடு செய்வதற்காக பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்கள் வசம் இருந்த பங்குகளை விற்பனை செய்ததால் பங்கு விற்பனை சரிந்ததாக பங்குத் தரகர்கள் தெரிவித்தனர். என்எச்பிசி பங்கு வெளியீடு வெள்ளிக்கிழமை தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

முக்கியமான 30 நிறுவனப் பங்குகளில் 28 நிறுவனங்களின் பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன.

தேசிய பங்குச் சந்தையில் 108 புள்ளிகள் சரிந்ததால் குறியீட்டெண் 4,585 புள்ளிகளாக வீழ்ந்தது. ஆட்டோமொபைல், உலோகம் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு விலைகள் கடுமையான சரிவைச் சந்தித்தன.

நாட்டின் பண வீக்க விகிதத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படாததும் பங்குச் சந்தை சரிவுக்கு முக்கியக் காரணம் என நிபுணர்கள் குறிப்பிட்டனர்.

இது தவிர, புதன்கிழமையன்று அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 690 கோடி வரை பங்குகளை விற்பனை செய்ததும் சரிவுக்குப் பிரதான காரணமாக அமைந்தது.

சீனா, சிங்கப்பூர் தவிர்த்த பிற ஆசிய பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டபோதிலும் அது மும்பை பங்குச் சந்தையில் பிரதிபலிக்கவில்லை. பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் பங்குச் சந்தை ஏற்றமடைந்தது. ஆனால் அது மும்பை பங்குச் சந்தை உயர்வுக்கு வழிவகுக்கவில்லை.

டாடா மோட்டார்ஸ் நிறுவனப் பங்கு மிக அதிகபட்சமாக 6.93 சதவீதமும், ஹிண்டால்கோ 6.50 சதவீதமும், மாருதி சுஸýகி 5.34 சதவீதமும், ஹீரோ ஹோண்டா 5.25 சதவீதமும், ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் 4.79 சதவீதமும், ஓஎன்ஜிசி 3.32 சதவீதமும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 3.31 சதவீதமும் சரிவைச் சந்தித்தது.

சன் பார்மா, விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு விலைகள் கணிசமான ஏற்றத்தைக் கண்டன.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails