பங்குச் சந்தையைப் பாதித்த பருவமழை! - 93 புள்ளிகள் சரிவு

நாட்டின் பல பகுதிகளில் தாமதமாகவும், மிகக் குறைவாகவும் பெய்துள்ள பருவமழை பங்குச் சந்தையை பாதித்தது. செவ்வாய்க்கிழமை 93 புள்ளிகள் குறைந்ததால் குறியீட்டெண் 15,830 புள்ளிகளாகச் சரிந்தது.

கடந்த மூன்று தினங்களில் 750 புள்ளிகள் வரை உயர்ந்த பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை சரிவைச் சந்தித்தது. திங்கள்கிழமை 16 ஆயிரம் புள்ளிகளை நெருங்கியதன் மூலம் 14 மாத கால உயர்வை எட்டிய பங்குச் சந்தையில் அதே நிலைமை ஒரு நாள் கூட நீடிக்கவில்லை.

தேசிய பங்குச் சந்தையிலும் 30 புள்ளிகள் குறைந்ததால் குறியீட்டெண் 4,680 புள்ளிகளாகச் சரிந்தது. பருவ மழை வழக்கத்துக்கும் குறைவாக இருக்கும் என்ற வானிலை ஆராய்ச்சியாளர்களின் தகவலால் பங்குச் சந்தை பாதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பெரும்பாலான நிறுவனங்களின் முதல் காலாண்டு செயல்பாடு திருப்திகரமாக இருந்ததால் கடந்த மூன்று தினங்களில் அவற்றின் பங்கு விலைகள் சற்று உயர்ந்தன என்று வர்த்தகர்கள் குறிப்பிட்டனர்.

ரூபாய்க்கு நிகரான டாலரின் மதிப்பு சரிந்ததால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு விற்பனை அதிகமாக இருந்தது. இன்ஃபோசிஸ், விப்ரோ, பாட்னி கம்ப்யூட்டர்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிக அளவில் விற்பனையாயின.

முக்கியமான 30 நிறுவனங்களின் பங்குகளில் 19 நிறுவனங்களின் பங்கு விலைகள் சரிவையே சந்தித்தன. 11 நிறுவனங்களின் பங்கு விலைகள் கணிசமான உயர்வை கண்டன.

இதில் அதிகபட்சமான இழப்பைச் சந்தித்த நிறுவனங்களின் பட்டியலில் இன்ஃபோசிஸ், ஓஎன்ஜிசி, டாடா பவர், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஐசிஐசிஐ வங்கி ஆகியன அடங்கும்.

ஆசிய பங்குச் சந்தையில் மந்தமான தொடக்கம், ஐரோப்பிய சந்தைகளில் நிலவிய மந்த நிலை ஆகியன முதலீட்டாளர்களை பெரிதும் பாதித்தது.

இருப்பினும் ஹிண்டால்கோ, யூனிலீவர், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மாருதி சுஸýகி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் அதிகம் விற்பனையானதால் பெருமளவு வீழ்ச்சி தவிர்க்கப்பட்டது.

தொழிற்சாலைகளின் பங்கு விலை 1.41 சதவீதமும், மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பங்கு விலை 1.36 சதவீதமும், மின் துறை நிறுவனங்களின் பங்கு 1.28 சதவீதமும், கட்டுமான நிறுவனங்களின் பங்கு 1.20 சதவீதமும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு 1.10 சதவீதமும், வங்கிகளின் பங்கு 0.71 சதவீதமும், உலோக நிறுவனங்களின் பங்கு 0.32 சதவீதமும் சரிவைச் சந்தித்தன.

நுகர்வோர், ஆட்டோமொபைல், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கணிசமான உயர்வைச் சந்தித்தன.

அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்ததால் சரிவு கட்டுக்குள் வந்தது. திங்கள்கிழமை வரை அன்னிய நிறுவனங்கள் ரூ. 347.01 கோடி முதலீடு செய்துள்ளன.

டாடா பவர் நிறுவனப் பங்கு விலை 4.42 சதவீதமும், ஓஎன்ஜிசி 2.98 சதவீதமும், ரிலையன்ஸ் இன்பிராஸ்டிரக்சர் 2.78 சதவீதமும், பார்தி ஏர்டெல் 2.57 சதவீதமும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 2.55 சதவீதமும், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் பங்குகள் 2.33 சதவீதமும் சரிவைச் சந்தித்தன.

ஹிண்டால்கோ பங்கு 4.39%, ஹிந்துஸ்தான் யூனிலீவர் 3.30%, டாடா மோட்டார்ஸ் 2.72%, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 1.30%, மாருதி சுஸýகி 1.19% அளவுக்கு உயர்ந்தன

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails