Thursday, August 13, 2009

பங்குச் சந்தையில் எழுச்சி

நேரடி வரி விதிப்புக்கான புதிய விதிமுறைகள், தொழில்துறை உற்பத்தி அதிகரிப்பு, ஆசியானுடன் வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட நடவடிக்கைகள் பங்குச் சந்தை முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதனால் பங்குச் சந்தை வியாழக்கிழமை ஒரே நாளில் 498 புள்ளிகள் வரை உயர்ந்தது.

கடந்த சில நாள்களாக பன்றிக்காய்ச்சல் நோய் அதிகரிப்பு பீதி, பருவமழை பொய்த்துப் போனது உள்ளிட்ட காரணங்களால் பங்குச் சந்தை சரிவைச் சந்தித்து வந்தது. ஆனால் வியாழக்கிழமை ஒரே நாளில் 498 புள்ளிகள் உயர்ந்ததால் குறியீட்டெண் 15,518 புள்ளிகளாக உயர்ந்தது. கடந்த மே 27-ம் தேதிக்குப் பிறகு ஒரே நாளில் இத்தனை புள்ளிகள் உயர்ந்தது இதுவே முதல் முறையாகும்.

தேசிய பங்குச் சந்தையில் 147 புள்ளிகள் உயர்ந்ததால் குறியீட்டெண் 4,605 புள்ளிகளானது.

நிறுவன வரி 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகக் குறைக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி புதன்கிழமை அறிவித்தார். இதுவும் புள்ளிகள் உயர்வுக்குக் காரணமாக அமைந்தது.

ஆசிய பங்குச் சந்தையில் ஏற்பட்ட உயர்வு மற்றும் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கி வெளியிட்ட அறிவிப்பு ஆகியன முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்தது.

வங்கிகளின் பங்குகள் அதிக விலைக்கு விற்பனையாயின. ஐசிஐசிஐ வங்கி பங்கு 6.53 சதவீதம் அதிகரித்து ரூ. 756.95-க்கு விற்பனையானது. யெஸ் வங்கி பங்கு 6.92 சதவீதம் அதிகரித்து ரூ. 160.75-க்கும், பாரத ஸ்டேட் வங்கியின் பங்கு விலை 5.68 சதவீதம் உயர்ந்து ரூ. 1,799.05-க்கும், பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்கு 4.12 சதவீதம் அதிகரித்து ரூ. 702.05-க்கும் விற்பனையானது. அலகாபாத் பங்கு விலை 4.27 சதவீதமும், பாங்க் ஆஃப் பரோடா பங்கு விலை 3.65 சதவீதமும், பாங்க் ஆஃப் இந்தியா பங்கு விலை 3.58 சதவீதமும், ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் பங்கு விலை 3.20 சதவீதமும் உயர்ந்தன.

கோடக் வங்கி பங்கு 5.64 சதவீதமும், ஐடிபிஐ வங்கிப் பங்கு 5.46 சதவீதமும், எச்டிஎஃப்சி வங்கி பங்கு 1.65 சதவீதமும், இண்டஸ்இந்த் வங்கிப் பங்கு 3.39 சதவீதமும் உயர்ந்தன.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட வங்கிகளில் 18 வங்கிகளின் பங்கு விலை கணிசமாக உயர்ந்தன.

உள்ளூர் முதலீட்டு நிறுவனங்கள் புதன்கிழமை முதலீடு செய்த தொகை ரூ. 190.50 கோடியாகும்.

மொத்தம் 2,215 நிறுவனங்களின் பங்கு விலைகள் கூடுதல் விலைக்கு விற்பனையானது. 517 நிறுவனப் பங்குகள் முன்தின விலையைக் காட்டிலும் குறைந்த விலைக்கு விற்பனையானது

No comments:

Post a Comment

மன்மதன் அம்புக்காக கமல்ஹாசன் எழுதிய பாடல்

டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன், சங்கீதா நடிக்கும் படம் மன்மதன் அம்பு. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் உருவாக...