ஏறுமுகத்தில் மும்பை பங்குச் சந்தை

பங்குச் சந்தையில் ஸ்திரமற்ற நிலை நிலவியபோதிலும் புதன்கிழமை 73 புள்ளிகள் உயர்ந்ததை அடுத்து குறியீட்டெண் 15,973 புள்ளிகளாக அதிகரித்தது.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட உயர்வு காரணமாக முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் பங்குகளை வாங்க குறியீட்டெண் சிறிதளவு உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையிலும் 13 புள்ளிகள் உயர குறியீட்டெண் 4,717-ஐத் தொட்டது.

நிறுவனங்களின் முதல் காலாண்டு நிதி நிலை அறிக்கை வெளியானதால் பல நிறுவனங்களின் பங்கு விலைகள் அதிகரித்து 8.1 சதவீதம் வரை கடந்த மாதம் உயர்ந்தது.

அன்னிய முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு அதிகரித்ததைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டது. கடந்த திங்கள்கிழமை வரை அன்னிய முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு ரூ. 476 கோடியாக உயர்ந்தது.

ஆசிய பங்குச் சந்தை மற்றும் ஜப்பான் பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு பிற்பகலில் மும்பை பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியதால் புள்ளிகள் உயர்வு குறைந்தது.

மிகவும் விரும்பக்கூடிய பங்குகளில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கு 1.67 சதவீதம் உயர்ந்து ரூ. 2,075 ஆக அதிகரித்தது. இதற்கு அடுத்தபடியாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு 2.49 சதவீதம் அதிகரித்து ரூ. 2,094.55-க்கு விற்பனையானது. இவ்விரு நிறுவனப் பங்கு விற்பனை பங்குச் சந்தையில் 26 சதவீத உயர்வுக்குக் காரணமாக அமைந்தது.

இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தற்போதைய தேக்க நிலையிலும் வெளிநாட்டில் ஆர்டர் பெற்றுள்ளதால் அந்நிறுவனப் பங்கு விலை உயர்வுக்குக் காரணமாக அமைந்தது.

இன்ஃபோசிஸ் நிறுவனம் பிரிட்டனைச் சேர்ந்த டி-மொபைல் நிறுவனத்துக்கு சாஃப்ட்வேர் பணியை மேற்கொள்வதற்கான ஆர்டரைப் பெற்றுள்ளது. விப்ரோ நிறுவனப் பங்கு விலை 3.25 சதவீதம் அதிகரித்துரூ. 498.05-க்கு விற்பனையானது. இந்நிறுவனம் அமெரிக்காவைச் சேர்ந்த "சார்மிங் ஷாப்பர்ஸ்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததைத் தொடர்ந்து இந்நிறுவனப் பங்கு விலை கணிசமாக உயர்ந்தது.

ரிலையன்ஸ் பெட்ரோ, ரிலையன்ஸ் நேச்சுரல் ரிசோர்ஸஸ், ஓஎன்ஜிசி ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்தன. இருப்பினும் அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் தயாரிப்புப் பொருள்கள் மற்றும் வங்கி, மின்துறை நிறுவனப் பங்கு விலைகள் சரிவைச் சந்தித்தன

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails