சினிமா தியேட்டர்களில் பகல் காட்சிக்கு தடை

இந்தியா முழுவதும் பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய்க்கு சென்னையில் இதுவரை 3 பேர் பலியாகி விட்டனர். அரசு பொது மருத்துவமனையில் மேலும் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார். பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்தாலும், இந்த நோய் இன்னும் பரவிக் கொண்டுதான் உள்ளது.

இதுவரை 185 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பரவியதில் 92 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி விட்டனர். இன்னும் 93 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தினமும் சளி, இருமல், காய்ச்சலுடன் பலர் ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள்.

விமான நிலையம், ரெயில் நிலையம், துறைமுகம் பகுதிகளில் அனைத்து பயணிகளையும் சோதனை நடத்திய பின்னரே அனுமதிக்கின்றனர். முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் வேகமாக எடுக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி சுகாதார துறை இயக்குனர் இளங்கோ “மாலைமலர்” நிருபரிடம் கூறியதாவது:-

பன்றிக்காய்ச்சல் நோய் வடமாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் வருபவர்கள் மூலம்தான் பரவியது. இந்த நோய் வந்தவர்கள் தயங்காமல் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற்று குணம் அடையலாம். டாமிபுளு மாத்திரை தேவையான அளவு இருப்பு உள்ளது.

பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தேவையான முன்எச்சரிக்கையை அரசு எடுத்து வருகிறது.

பல ஊர்களில் இருந்து வருபவர்கள் சினிமா தியேட்டருக்கு செல்கிறார்கள். சில தியேட்டர்களில் ஆங்காங்கே எச்சில் துப்பி வைக்கிறார்கள். இது சுகாதார சீர்கேடாகும். இதை தவிர்க்க வேண்டும்.

தியேட்டர்களுக்கு வருபவர்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த துண்டு பிரசுரம் ஆங்காங்கே ஒட்டப்படும்.

முடிந்தவரை பகல் காட்சி சினிமாவை தவிர்ப்பது நல்லது. பகல் காட்சிகளை ரத்து செய்ய சொல்லலாமா என்றும் ஆலோசனை நடந்து வருகிறது.

இதேபோல் ஏ.சி. ஓட்டல்களில், கூட்ட அரங்குகளில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்ப்பது நல்லது. திறந்த வெளி ஹால்களில் கூட்டம் நடத்துவது நல்லது.

பன்றிக்காய்ச்சல் ஏ.சி. அறைகளில் வேகமாக பரவும் என்பதால் முன்பின் தெரியாதவர்கள் ஒன்று கூடும் கூட்ட அரங்குகளில் பங்கேற்பதில் கவனமுடன் இருக்க வேண்டும்.

29-ந்தேதி நடைபெற உள்ள வேளாங்கண்ணி திருவிழாவுக்கு வெளியூர்களில் இருந்து லட்சக்கணக்கில் பொது மக்கள் வருவார்கள்.

இதனால் வேளாங்கண்ணி நகருக்குள் நுழையும் அனைத்து பாதைகளையும் “சீல்” வைத்து அனைவரையும் பரிசோதித்து அனுப்ப டாக்டர்கள் குழுவினர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக 40-க்கும் மேற்பட்ட டாக்டர்கள், அங்கு நியமிக்கப்பட உள்ளனர். ஆம்புலன்ஸ் வசதி, பரிசோதனை மையம், 20 படுக்கை கொண்ட தற்காலிக ஆஸ்பத்திரியும் அங்கு உருவாக்கப்படுகிறது.

இதேபோல திருவண்ணாமலை ஆசிரமங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆட்கள் வருவதால் அங்குள்ள ரமணா ஆசிரமம், வேதகிரி ஆசிரமங்களை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பன்றிக் காய்ச்சல் நோய் காற்று மூலம் வேகமாக பரவும் என்பதால் பலபேர் கூடும் அரங்கங்களில் மணிக்கணக்கில் இருப்பதை தவிர்ப்பது நல்லது. அதிலும் ஏ.சி. அறைகளை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும்.

பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதால் பொது மக்களும் இதற்கு ஒத்துழைக்க வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறு இளங்கோ கூறினார்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails