பன்றிக் காய்ச்சல்: மேலும் 7 பேர் பலி

நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு சனிக்கிழமை 7 பேர் பலியாயினர். இதையடுத்து பன்றிக் காய்ச்சல் மற்றும் இது தொடர்பான நோய்க்கு பலியானோர் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சேகர் (45) என்பவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.

மகாராஷ்டிர மாநிலம், புணேவில் 19-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாபன் ஹங்குலே (60) என்பவர் சனிக்கிழமை காலை இறந்தார்.

இவரைத் தவிர, மும்பையில் 2 மாத குழந்தை, 12 வயதுச் சிறுமி, 37 வயதுப் பெண், ஜெய்ப்பூரில் 26 வயதுப் பெண் ஆகியோர் வெள்ளிக்கிழமை இரவு இறந்தனர்.

பெங்களூரில் இருந்து கோவாவுக்கு வெள்ளிக்கிழமை வந்த சிவமூர்த்தி (67) என்பவர் கடும் காய்ச்சலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.

தில்லியில்...: தில்லியில் சிகிச்சை பெற்றுவரும் 7 பேரில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அசாமில்...: அசாமில் 4 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, 18 வயதுப் பெண் ஒருவர் சனிக்கிழமை உயிரிழந்தார். எனினும், பத்திரிகைகளில் குறிப்பிட்டதுபோல அந்தப் பெண் பன்றிக் காய்ச்சல் காரணமாக இறக்கவில்லை என மாநில முதல்வர் தருண் கோகோய் கூறினார்.

இதுவரை மகாராஷ்டிரத்தில் 34 பேரும் (புணேவில் மட்டும் 20), கர்நாடகத்தில் 12 பேரும், குஜராத்தில் 5 பேரும், தமிழகம் மற்றும் சத்தீஸ்கரில் தலா 3 பேரும், தில்லியில் 2 பேரும், கேரளம், உத்தரகாண்ட், கோவா, ராஜஸ்தான் ஆகியவற்றில் தலா ஒருவரும் பன்றிக் காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர்.

நாடு முழுவதும் தற்போது 2,600 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புணேவில் கடந்த ஒரு வாரமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails