ஓசைகளுக்கும் ஒலிகளுக்கும் ஒரு தளம்

பிரசன்டேஷன் பைல் ஒன்று தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். குறிப்பிட்ட ஓர் இடத்தில், நீங்கள் விரும்பும் ஒலி அல்லது ஓசை ஒன்றைத் தர விரும்புகிறீர்கள். என்ன செய்கிறீர்கள்?

நான் ஒருமுறை சிறுவர்களுக்கான பிரசன்டேஷன் பைலில் கண்டாமணி சத்தம் (Gong) கொடுத்தால் நன்றாக இருக்கும் என எண்ணி, குறிப்பிட்ட அந்த ஓசைக்கான பைல் எங்கு கிடைக்கும் என்று தேடினேன்.

இத்தகைய விருப்பங்களை நிறைவேற்றவே Soungle என்று ஒரு வெப்சைட் உள்ளது. காடு என்பதற்கான ஆங்கிலச் சொல்லான Jungle மற்றும் ஒலி என்பதற்கான சொல் Sound என இரண்டையும் சேர்த்து இந்த பெயரைத் தந்திருக்க வேண்டும் என நான் எண்ணுகிறேன்.

இந்த தளம் சென்று நான் விரும்பும் ஒலிக்காக Gong என்று டைப் செய்தேன். அந்த தளத்தில் 27 வகையான கண்டாமணி சத்தம் கிடைத்தது.

பக்கத்திலிருந்த ஒரு சிறுவன் கிளாரினட் ஒலி எப்படி இருக்கும் என்று காட்டுமாறு கூறினான். சந்தேகத்துடனேயே Clarinet என டைப் செய்து என்டர் அழுத்த 12 வகையான கிளாரினட் ஒலி கிடைத்தது. ஒற்றை ஒலி முதல் பல சேர்ந்தது வரையிலான ஒலித் தொகுப்பு வரை தரப்பட்டது.

இதனை எப்படி நாம் பயன்படுத்துவது? உங்களுக்குப் பிடித்த ஒலியைத் தேடிக் கண்டறிந்தவுடன், அந்த சாம்பிள் ஒலி அருகே டவுண்லோட் கிளிக் செய்தால், உங்கள் பிரவுசரின் அடிப்படையில் சேவ் அல்லது சேவ் அஸ் கிடைக்கும். பின் இந்த பைலை நீங்கள் விரும்பும் இடத்தில் பயன்படுத்தலாம்.

ஒரே வாத்தியத்தின் பல்வேறு ஒலிகளை (Notes) சேர்த்துப் பெற்றுப் பயன்படுத்துவதும் நன்றாக இருந்தது. இதிலிருந்து ஓசைக்கான பைலை எடுத்துப் பயன்படுத்துகிறீர்களோ இல்லையோ, ஒருமுறை இந்த தளம் சென்று பார்த்துவிடுங்கள். இதற்கான முகவரி http://www.soungle.com.

மெமரி காலியாகிறதா?

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் அதன் மெமரி எந்த அளவிற்கு காலியாகிறது என்பதைப் பொறுத்தே அதன் வேகம் அமையும். அதிகமான இடத்தைப் பிடிக்கும் புரோகிராம்களை இயக்க நிலையில் வைத்திருந்தால், அடுத்து அடுத்து நாம் இயக்க எடுக்கும் புரோகிராம்களுக்கு இடம் இல்லாமல், கம்ப்யூட்டர் திணற ஆரம்பிக்கும்.

அல்லது திடீரென கிராஷ் ஆகி நிற்கும். இந்த பிரச்னையை எதிர்கொள்ளாமல் இருக்க வேண்டுமானால், நம் கம்ப்யூட்டரின் மெமரி எந்த அளவில் பயன்பட்டு வருகிறது என்பதை அறிவது நல்லது. இதனை அறிய பல புரோகிராம்கள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.


1. சிஸ் ட்ரே மீட்டர் (SysTray Meter):

இதனை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடத் தேவையில்லை. இது ஒரு சிறிய டூல். இதனை இயக்கினால், இந்த டூல் சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்து கொண்டு, நம் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் மெமரியின் அளவைக் கண்காணித்துக் கொண்டு இருக்கும்.

அத்துடன் சி.பி.யு.வின் பயன்பாட்டி னையும் பார்த்து நமக்குக் காட்டிக் கொண்டு இருக்கும். வண்ணங்களில் காட்டுவதால் மெமரி பயன்பாட்டினைத் தெளிவாக அறிய முடியும். இந்த டூல் பெறhttp://88.191.26.34/computers_are_ fun/index. php/systraymeter/என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும். இந்த டூல் பைல் அளவு 15 கேபி.

2. மெம் இன்போ (Mem Info):

இந்த புரோகிராமினை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இன்ஸ்டால் செய்த பின்னர், இது கம்ப்யூட்டரின் மெமரி பயன்பாட்டினைத் தொடர்ந்து அளந்து கொண்டிருக்கும். மிக அதிகமாக, நெருக்கடியான நிலையை மெமரி பயன்பாடு அடையப் போகிறது என்றால், உடனே எச்சரிக்கையினை வழங்கும். சிஸ்டம் ட்ரேயில் இது அமர்ந்து கொள்ளும்.

மெமரி டிபிராக் செய்திடவும் இதனைப் பயன்படுத்தலாம். முதலில் சொல்லப்பட்ட சிஸ் ட்ரே மீட்டர் போல இது செயல்பட்டாலும், சில கூடுதல் வசதிகளையும் இந்த டூல் கொண்டுள்ளது. வண்ணம் பூசி முடிவுகளைக் காட்டும். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி:http://www.carthagosoft.net/meminfo.htm3. பெர்பார்மன்ஸ் மானிட்டர் (Performance Monitor):

இந்த டூல் மெமரி பயன்பாட்டினைக் கண்டறிவதுடன், டிஸ்க் மற்றும் நெட்வொர்க் பயன்பாட்டினையும் கண்காணிக்கிறது. உங்கள் திரையின் மேலாக ராம், டிஸ்க் மற்றும் நெட்வொர்க் பயன்பாட்டிற்கான கிராப் ஒன்றைக் காட்டிக் கொண்டே இருக்கும்.

இதனைப் பெற http://www.hexagora.com/en_dw_davperf.asp என்ற முகவரிக்குச் செல்லவும். தற்போது இதன் பதிப்பு 3.9 பல வசதிகளுடன் இலவசமாகவே கிடைக்கிறது.


4. ப்ரீ ராம் எக்ஸ்பி ப்ரோ (FreeRAM XP Pro):

இது சற்று கூடுதலான திறன் கொண்ட புரோகிராம். மெமரி மானிட்டருக்கும் மேலாகப் பல வேலைகளை மேற்கொள்ளக் கூடியது. ராம் மெமரியின் வேகத்தைக் கண்காணித்து அதனைத் திறம்பட நிர்வகிக்கும் திறன் கொண்டது – இது மெமரியைத் தானாகவே விடுவிக்கும், அளவெடுக்கும், நமக்கு ரிப்போர்ட் தரும், மெமரி கம்ப்ரஸ் செய்து காட்டும்.

இதனைப் பெற http://www.yourwaresolutions.com/software. html#framxpro என்ற முகவரி செல்லவும். ஸிப் பைலாக 606 கேபி அளவில் இந்த பைல் கிடைக்கும். விஸ்டா மற்றும் விண்டோஸ் 7ல் இது செயல்படுமா எனத் தெரியவில்லை.

ஹார்ட்வேர் இடத்தில் சாப்ட்வேர்

கம்ப்யூட்டர் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கி சில மாதங்கள் அல்லது வருடங்கள் ஆன பின், சில சின்ன சின்ன விஷயங்கள் உடைந்து செயல்படாமல் போகலாம். கீ போர்டில் சில இயங்காமல் இருக்கலாம்;

மானிட்டரின் பவர் ஸ்விட்ச் உள்ளாக உடைந்து செயல்படாமல் தொல்லை கொடுக்கலாம். இது போன்ற பிரச்னைகளில் நமக்கு சில சாப்ட்வேர் தொகுப்புகள் கை கொடுக்கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.


1. மானிட்டர் ஸ்விட்ச்:

மானிட்டரை நாம் நேரடியாக பவர் பிளக் அல்லது யு.பி.எஸ். ப்ளக்கில் இணைத்திருப் போம். கம்ப்யூட்டரில் வேலை முடியும்போது, மானிட்டருக்கு வரும் மின்சாரத்தை நிறுத்த, மானிட்டரை ஸ்விட்ச் ஆப் செய்திடுவோம். இதற்கான புஷ் பட்டன் ஸ்விட்ச் அனைத்து மானிட்டர்களிலும் அதன் முன்புறத்தில் இருக்கும்.

இதன் தொடர் பயன்பாட்டால், இந்த ஸ்விட்ச் நாளடைவில் இயங்காமல் போய்விடும். அதற்காக நாம் வேறு மானிட்டரை வாங்குவது வீண் செலவு. இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள ஒரு சாப்ட்வேர் Monitor Off என்ற பெயரில் கிடைக்கிறது.

இதன் மூலம் மவுஸ் கர்சரை நகர்த்தியோ, அல்லது கீ போர்டில் ஒரு கீயை அழுத்தியோ மானிட்டருக்கு வரும் மின்சக்தியை நிறுத்தலாம். கூடுதலாக இன்னும் பல வசதிகளையும் இது தருகிறது. இதனை சோதித்துப் பார்க்க இலவசமாய் டவுண்லோட் செய்திடலாம். இணைய தள முகவரி:http://www.rtsoftwares.com/Utilities/TurnOffMonitor/setup.exe2. சிடி ராம் டிரைவ் பட்டன்:


அடுத்ததாக நமக்குத் தொல்லை தருவது சிடி ராம் டிரைவின் பட்டன். பெரும்பாலான டிரைவ்களில் நமக்கு முதல் தொல்லை தருவது, சிடி ட்ரேயினை வெளியே, உள்ளே கொண்டு வரும் பட்டன் தான். பலர் இந்த ட்ரேயினை மூடுகையில் தங்கள் கைகளாலேயே தள்ளி மூடுவார்கள்.


திறக்க மட்டுமே பட்டனைப் பயன்படுத்துவார்கள். இது நாளடைவில் பட்டனை முடக்கிவிடும். அப்போது கம்ப்யூட்டரில் சிடி டிரைவ் ப்ராப்பர்ட்டீஸ் சென்று அந்த மெனுவில் எஜக்ட் பிரிவில் கிளிக் செய்து இதனைத் திறக்கலாம்.


ஆனால் மூடுவதற்கு பட்டன் வேலை செய்யவில்லை என்றால், கைகளால் தான் மூடுகிறோம். இதற்கான ஒரு சாப்ட்வேர் ட்ரே 2.5 (Optical Drive Tray)என்ற பெயரில் கிடைக்கிறது. இந்த பைலின் அளவு 713 கேபி. இதனைப் பயன்படுத்தி ஒன்றுக்கு மேற்பட்ட டிரைவ்களின் கதவுகளை இயக்கலாம். இதனைப் பெற அணுக வேண்டிய இணைய முகவரி: http://www.softpedia.com/prog Download/TrayDownload112476.html3. ஆன் ஸ்கிரீன் கீ போர்டு :

இப்போது பல சாப்ட்வேர் அப்ளிகேஷன்களில் ஆன் ஸ்கிரீன் கீ போர்டு கிடைக்கிறது. இதில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்று கீ போர்டுக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். இந்த வகையில் இன்னும் சில முன்னேற்றங்களுடன் TouchIt 4.3.03 (On Screen Keyboard) என்னும் சாப்ட்வேர் கிடைக்கிறது.

இதன் மூலம் கீ போர்டுக்கான பல வசதிகளைப் பெறலாம். இதனைப் பெற இணையத்தில் http://www.softpedia.com/ progDownload/TouchItDownload29438.html என்ற முகவரிக்குச் செல்லவும்.


4. கீ போர்டு விளக்குகள்:

கீ போர்டில் நம் லாக், ஸ்குரோல் லாக், முக்கியமாக கேப்ஸ் லாக் அழுத்தப் பட்டிருக்கிறதா என்று அறிய, இந்த கீகளுக்கான சிறிய எல்.இ.டி. ஒளி கிடைக்கும்படி கீ போர்டில் தனி இடம் இருக்கும். நாளடைவில் இவை தங்கள் செயல்பாட்டை இழக்கும்.

இந்த விளக்குகளை மானிட்டர் திரையிலேயே காட்டும்படி சாப்ட்வேர் ஒன்று கிடைக்கிறது. இதன் பெயர் டி.கே. கீ போர்டு(DK:Keyboard) இதனை இயக்கிவிட்டால், திரையில் சிறிய பாப் அப் பலூன் குமிழ் விளக்காக, இந்த கீகள் அழுத்தப்படும் போது ஒளிரும். இதனைப் பார்த்த பலரும், கீ போர்டு நன்றாக இயங்கினாலும் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனைப் பெற http://www.softpedia. com/progDownload/DKKeyboardStatusDownload96870.html என்ற முகவரியைப் பயன்படுத்தவும்.


5.மவுஸ்:

உங்கள் மவுஸ் திடீரென உடைந்து போய்விட்டதா? கீழே விழுவதனால் அல்லது தரையில் இருக்கையில் அதனை அறியாமல் மிதித்துவிடுவதனால் உடையும் வாய்ப்புகள் உண்டு. இதனை இன்னொரு மவுஸ் தான் ஈடு கட்ட முடியும்.

இருப்பினும் அவசரத் தேவைக்கு, உங்களிடம் பழைய ஜாய் ஸ்டிக் அல்லது கேம் பேட் (Game Pad) இருந்தால் அதனைப் பயன்படுத்தலாம். இதற்கான சாப்ட்வேர் பெயர் JMouse 1.0. இதனை இயக்கினால் அது இணைக்கப்பட்ட ஜாய் ஸ்டிக் அல்லது கேம் பேடினைப் புரிந்து கொண்டு மவுஸ் இயக்கத்தினைத் தருகிறது.

இந்த சாப்ட்வேர் http://www.softpedia.com/progDownload/JMouseDownload102151.html என்ற இணைய முகவரியில் இலவசமாகக் கிடைக்கிறது.


புதுமையான ஆன்லைன் டிக்ஷனரி

சொற்களுக்குப் பொருள் கூறுதல், அவற்றை உச்சரித்துக் காட்டுதல், அச்சொற்களுக்கு இணையான பொருள் உள்ள சொற்களை எடுத்துக்காட்டல் எனப் பல வகைகளில் டிக்ஷனரிகள் புழக்கத்தில் உள்ளன. சில இணையத்திலும் உள்ளன.

ஆனால் ஒரு சொல்லை அதன் பொருள் குறித்துப் படிப்பதனால் புரிந்து கொள்ளுதலைக் காட்டிலும், அதனைப் பயன்படுத்திப் பார்க்கும் சூழ்நிலை, தொடர்புடைய சொற்களுடன் புரிந்து கொள்ளுதல், அச்சொல்லை மனதில் பதியவைக்கும். இந்த நோக்குடன் இணையத்தில் ஒரு டிக்ஷனரி கிடைக்கிறது.

இதன் பெயர் வேர்ட் நிக் (Wordnik)மேலே கூறப்பட்டவற்றுடன், அந்த சொற்கள் ட்விட்டர் போன்ற தளங்களில் உள்ள இடங்கள், அவற்றின் பொருள், தொடர்பான படங்கள், போட்டோக்கள், ஒன்றுக்குப் பலவாக விளக்கங்கள், பயன்படுத்துவது எப்படி என்ற எடுத்துக்காட்டுகள், தொடர்புள்ள மற்ற சொற்கள், சொற்களின் மூலக்கூறுகள் என அனைத்தையும் இந்த டிக்ஷனரி தருகிறது.

இவற்றுடன் இன்றைய சொல் என்று தினம் ஒரு சொல்லை விளக்கத்துடன் காட்டுகிறது. “எங்கள் இலக்கு ஆங்கில மொழியில் உள்ள சொற்கள் ஒவ்வொன்றுக்கும் அவை சார்ந்த அனைத்தையும் தருவதாகும்.

அத்துடன் சொற்கள் குறித்து அதனைப் படிப்பவர்கள் என்ன எண்ணுகிறார்கள் என்று காட்டுவதும் ஆகும் என இந்த டிக்ஷனரியை உருவாக்கியவர்கள் கூறுகிறார்கள். ஒரு சொல்லின் அதே பொருளைத் தரும் சொற்களை மட்டுமின்றி, அதனுடன் தொடர்புடைய சொற்களையும் இந்த டிக்ஷனரி தருகிறது.

எடுத்துக்காட்டாக Cheeseburger, milkshake மற்றும் doughnut ஆகியவை ஒரே பொருளைக் குறிப்பவை அல்ல. ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை ஆகும். இது போன்ற தொடர்புடைய சொற்களும் இந்த டிக்ஷனரியில் கிடைக்கின்றன.

ஒரு சொல் எப்படி உச்சரிக்கப்பட வேண்டும் என்று காட்டும் வேளையில், உங்கள் உச்சரிப்பினையும் பதிந்து கொள்ள வழி தரப்பட்டுள்ளது. இதன் பன்முகத் தன்மை கிராஸ் வேர்ட் மற்றும் ஸ்க்ராபிள் போன்ற புதிர் விளையாட்டுக்களில் ஈடுபடுபவர்களை ஈர்க்கிறது. இந்த டிக்ஷனரியை உருவாக்கியவர்களில் ஐரோப்பியர்கள் 11 பேருடன் குமணன் ராஜ மாணிக்கம் என்ற தமிழரும் உள்ளார் என்பது இதன் சிறப்பு.

இது முழுக்க முழுக்க இலவசமாகக் கிடைக்கிறது. இந்த டிக்ஷனரியைப் பயன்படுத்தவும், சொற்கள் சார்ந்த உங்கள் கருத்துக்களைப் பதியவும், நீங்கள் எப்படி இதற்கு உதவலாம் என்று கூறவும் நீங்கள் செல்ல வேண்டிய இணைய முகவரி: http://www.wordnik.com.
Related Posts with Thumbnails