பைல்களை அழிக்க முடியவில்லையா?

ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும். பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும்.

அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம் செய்கிறது? என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும்.

சில வேளைகளில் காரணங்களும் காட்டப்படும். ஹார்ட் டிஸ்க்கில் போதுமான இடம் இல்லை. அதனால் அழிக்க முடியவில்லை என்று காரணம் கிடைக்கலாம். இது இன்னும் அதிகமான குழப்பத்தில் உங்களை சிக்க வைக்கும். ஏனென்றால் அதிக இடம் வேண்டும் என்பதற்காகத்தானே நீங்கள் பைலை அழிக்க முயற்சிக்கிறீர்கள்.

சில பைல்களுக்கு இந்த பைலை இன்னொருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அல்லது இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அழிக்க முடியாது என்று காரணம் வரலாம்.

எனவே அழிப்பதாக இருந்தால் அந்த பைலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் புரோகிராமை முதலில் நிறுத்து என்று செய்தி கிடைக்கும். இப்ப என்னதான் செய்றது? என்ற பெரிய கேள்விக் குறியுடன் நீங்கள் மானிட்டரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்துவிடுவீர்கள், இல்லையா? கீழே சில டிப்ஸ்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் இந்த பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்

முதலில் நீங்கள் அழித்திட எண்ணும் பைல் கம்ப்யூட்டரில் எங்கே உள்ளது என்று சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக “myessay. txt” என்னும் பைல் என்னும் போல்டரில் இருக்கலாம். இதனுடைய சரியான முகவரி C:\Documents and Settings\ User Name \ My Documents என்பது. பைலின் பெயரையும் இந்த முகவரியையும் ஒரு பேப்பரில் குறித்துக் கொள்ளுங்கள்.

இனி கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடுங்கள். கம்ப்யூட்டர் பூட் ஆகும் போது எப்8 கீயை அழுத்துங்கள். அப்போது திரையில் Advanced Boot Options Menu மெனு கிடைக்கும். அந்த மெனுவில் Safe Mode with Command Prompt என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.

இனி டாஸ் ப்ராம்ப்ட்டில் கம்ப்யூட்டர் பூட் ஆகி நிற்கும். இனி டாஸ் மோடில் துடிக்கும் புள்ளியில் cd C:\Documents and Settings\Your Name\My Documents என டைப் செய்திடவும் இதில cd என்பது Change Directory என்பதைக் குறிக்கிறது.

டைப் செய்து என்டர் அழுத்தியவுடன் டாஸ்கர்சர் உங்கள் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இனி del myessay.txt என டைப் செய்து என்டர் தட்டினால் நீங்கள் பல வழிகளில் டெலீட் செய்திட முயன்று தோற்றுப் போன பைல் இப்போது நீக்கப்பட்டுவிடும்.

எக்ஸெல் பங்ஷன் கீகள்

F1 விண்டோ பேனல் எதுவானாலும் அதற்கான உதவிக் குறிப்புகள் பெற

F2 எந்த செல்லையும் எடிட் செய்திட கீ அழுத்த

F3 பார்முலாவில் பெயரை செருக

F4 முந்தைய கட்டளையை திரும்ப செயல்படுத்த

F5 Go to டயலாக் பாக்ஸ் செயல்படுத்த

F6 ஒர்க்ஷீட்டில் பேனல்களுக்கு இடையே செல்ல

F7 ஒர்க் ஷீட்டில் ஸ்பெல்லிங் செக் செய்திட

F8 ஸ்டேட்டஸ் லைனில் எக்ஸ்டென்டட் மோட் பெற

F9 ஒர்க் ஷீட்டில் கால்குலேஷன் மேற்கொள்ள

F10 மெயின் மெனு பார் தேர்ந்தெடுக்க

F11 அப்போது உள்ள ஒர்க்ஷீட்டில் சார்ட் ஒன்றை செருக

F12 save அண் டயலாக் பாக்ஸ் செயல்படுத்த

டெஸ்க்டாப் ஐகானில் டெக்ஸ்ட்

நம் வாழ்நாளில் ஒருவரை வெகுநேரம் பார்த்துக் கொண்டிருப்பது யார் என்றால், இன்றைய உலகில் அது நம் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரின் மானிட்டர் தான். எனவே தான் இதனை நம் மனதிற்குப் பிடித்த வகையில் அமைக்க பல வசதிகள் உள்ளன.

ஐகான் வரிசை, பின்புலத் தோற்றம், ஸ்கிரீன் சேவர் என இதனை மாற்றிக் கொண்டே இருக்கிறோம். இதில் உள்ள டெஸ்க்டாப் ஐகான்களின் தோற்றத்தையும் மாற்ற சிலர் முயற்சிக்கின்றனர். அவர்களில் பலர், ஐகான் படம் மட்டும் போதுமே;

அதில் ஏன் டெக்ஸ்ட் உள்ளது. படத்தைப் பார்த்து நாம் புரிந்து கொள்ள முடியாதா? என்றெல்லாம் வினா எழுப்புகின்றனர். இவர்களுக்காகவே, ஐகானில் உள்ள டெக்ஸ்ட்டை எப்படி நீக்குவது என்று பார்க்கலாம்.

இது மிக எளிதானதுதானே, ஐகானில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனு பட்டியலில் Rename தேர்ந்தெடுத்து, அதில் உள்ள டெக்ஸ்ட்டை அழித்துவிட்டால் போதுமே என்று எண்ணலாம். டெக்ஸ்ட்டை நீக்கிவிட்டால், பின் அதனை டெக்ஸ்ட் எதுவும் இல்லாமல், அதாவது பெயர் எதுவும் இல்லாமல் சேவ் செய்திட விண்டோஸ் இடம் கொடுக்காது.

ஆனால் இதில் ஒரு ஆச்சரியத்தக்க விஷயம் என்னவென்றால், விண்டோஸ் இதில் ஸ்பேஸ் ஒன்றை அமைத்தால் இடம் கொடுக்கிறது. அதனையும் ஆஸ்க்கி முறையில் கொடுக்க வேண்டும்.

முதலில் ஐகான் கீழாக இருக்கும் டெக்ஸ்ட் அனைத்தையும் நீக்கிவிடுங்கள். பின் ஸ்பேஸ் அமைப்பதற்கான ஆஸ்கி எண்ணை அமைத்திடுங்கள். இதற்கு ஆல்ட் கீ அழுத்திக் கொண்டு, நம்பர் பேடில் நம் லாக் ஆன் செய்து, அதிலிருந்து 0160 என்ற எண்ணை அழுத்துங்கள். அடுத்து என்டர் செய்து இதனை சேவ் செய்திடுங்கள். இனி ஐகான் வெறும் படமாகக் காட்சி அளிக்கும்.

சரி, அடுத்த ஐகானுக்குச் செல்கையில் இதே வழியைக் கையாண்டால், விண்டோஸ் ஏற்கனவே இந்த பெயர் வேறு ஒரு பைலுக்கு உள்ளது என்று காட்டுமே? என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகிறதா? இந்த சிக்கலைத் தீர்க்க, ஆஸ்க்கி எண்ணை இருமுறை அழுத்தவும்.

அடுத்த ஐகானுக்கு மூன்று முறை அழுத்தவும். இப்படியே டெஸ்க்டாப்பில் உள்ள ஐகான்கள் முழுவதற்கும், அவற்றில் உள்ள டெக்ஸ்ட்டை நீக்கி அமைக்கலாம்.

மைக்ரோசாப்ட்மொபைல் போன்

மொபைல் போன்கள் வரத்தொடங்கிய இந்த ஆண்டுகளில் பலவகைத் தொழில் நுட்பங்களை உள்ளடக்கியதாகவும், பல்வேறு அளவுகளிலும் வந்து, நம் பாக்கெட்டுக்கும் பர்ஸுக்கும் ஏற்ற வகையில் கிடைக்கத் தொடங்கிவிட்டன.

கம்ப்யூட்டர் புரோகிராமிங் மூலம் உலகின் கவனத்தையும், சிந்தனைப் போக்கினையும் திசை திருப்பிய மைக்ரோசாப்ட், தற்போது இந்த மொபைல் போன் பிரிவிலும் தனக்கே உரித்தான தனித்துவத்துடன் இறங்கியுள்ளது.

18 முதல் 35 வயதுள்ள இளைஞர்களையும் மற்றவர்களையும் குறி வைத்து, அவர்களின் தேவைகள் அனைத் தையும் நிறை வேற்றும் வகையில் மொபைல் போன் ஒன்றை வடிவமைத்து கின் (KIN) என்ற பெயரில் மேற்கு நாடுகளில் வெளியிட்டுள்ளது.

இன்றைய இளைஞர்கள் தங்களின் நண்பர்கள் வட்டத்தினை சோஷியல் நெட்வொர்க் தளங்கள் மூலம் எந்நேரமும் தொடர்பு கொள்ள ஆவலாய் உள்ளனர். அத்துடன் இசை, பாடல்கள், படங்கள், விளையாட்டுக்கள் எனப் பொழுது போக்கு அம்சங்களையும் தொடர்ந்து மேற்கொண்டு அனுபவித்து வருகின்றனர். இந்த ஆசைகளை நிறைவேற்றும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

கின் (Kin1, Kin2) இரண்டு மாடல்களில் வந்துள்ளது. இதன் ஹார்ட்வேர் பகுதிகள்,ஷார்ப் நிறுவனத்தின் துணையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. டச் ஸ்கிரீன் மற்றும் ஸ்லைடிங் கீ போர்டுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதனால் சிறியதாக பாக்கெட்டில் இதனை எடுத்துச் செல்லலாம். Kin2மாடலில் பெரிய திரை, கீ போர்டு, கூடுதல் மெமரி, ஹை டெபனிஷன் பார்மட்டில் படம் பிடிக்கும் திறன் கொண்ட, அதிக ரெசல்யூசனில் இயங்கும் கேமரா, ( Kin1 ல் 5 எம்பி, Kin2 ல் 8 எம்பி திறன்) ஆகியவை இவற்றில் உள்ளன.

இதன் ஹோம் பேஜ் கின் லூப் (Kin Loop) என அழைக்கப்படுகிறது. இதில் சோஷியல் நெட்வொர்க் தளங்கள், தொடர்புகள் எப்போதும் அப்டேட் செய்யப்பட்டே கிடைக்கின்றன. பேஸ்புக், மை ஸ்பேஸ் மற்றும் ட்விட்டர் தளங்களும் இதில் கிடைக்கின்றன.

புரோகிராம்களைத் திறக்காமல், கம்ப்யூட்டரில் பைல்களில் கிளிக் செய்து திறப்பது போல, இதில் ஒருவரின் படத்தின் மீது தொட்டு அவர் தொடர்பு உள்ள தளங்களைத் திறந்து தொடர்பு கொள்ளலாம். இந்த தொடர்பு கொள்ளும் இடம் கின் ஸ்பாட் (Kin Spot)என அழைக்கப்படுகிறது.

ஆன்லைன் போன் இதில் கின் ஸ்டுடியோ (Kin Studio) என அழைக்கப்படுகிறது. போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் ஆன்லைன் விசுவல் விருந்தாகக் கிடைக்கின்றன. கின் ஸ்டுடியோவில் படங்கள், வீடியோக்கள்,அழைப்பு நேரம், டெக்ஸ்ட், காண்டாக்ட் என அனைத்தும் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படுகின்றன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் மொபைல் போன் சேவை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு மைக்ரோசாப்ட் கின் மொபைல் போனை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும்.

பைல்களைப் பிரித்தலும் சேர்த்தலும்

நம் அன்றாடக் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் பி.டி.எப். பைல்களை அடிக்கடி கையாள்கிறோம். படிப்பதற்கு பாண்ட் பைல் இல்லாமல் எந்த சிஸ்டத்திலும் படிக்கக் கூடிய வசதியை இவை தருகின்றன.

அதே போல ஆடியோ மற்றும் வீடியோ பைல்களும் எந்த சிஸ்டத்திலும் பயன்படுத்தலாம். ஆனால் இந்த பைல்கள் மிகப் பெரிதாக இருக்கையில், இவற்றை அனுப்ப முயற்சிக்கையில், இந்த பைல்களை நாம் சுருக்க வேண்டியுள்ளது.

பின் அவற்றை இணைக்கும் வழிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. மேலும் இந்த பைல்களில், குறிப்பாக ஆடியோ மற்றும் வீடியோ பைல்களில், குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் பிரித்தெடுக்க விரும்புகையில், பைல்களின் பகுதிகளைப் பிரிக்க தனித் திறன் கொண்ட சாப்ட்வேர் புரோகிராம்கள் தேவைப்படுகின்றன. இந்த தேவையை மனதில் கொண்டு தேடுகையில் கிடைத்த சில தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.


1. Gios PSM:

பி.டி.எப். பைல்களைப் பிரிப்பதற்கும் இணைப்பதற்குமான அருமையான ஒரு புரோகிராம் Gios PSM (GiosPdf Splitter and Merger) என்பது. பி.டி.எப். பைல்களைக் கையாள ஓப்பன் சோர்ஸ் முறையில் அமைக்கப்பட்ட புரோகிராம் இது. இது 145 கேபி அளவிலான சிறிய எக்ஸிகியூட்டபிள் பைல். போர்ட்டபிள் வகையாக இதனைப் பயன்படுத்தலாம்.

டாட் நெட் பிரேமில் செயல்படுகிறது. இந்த புரோகிராமினை இயக்கிவிட்டு, பி.டி.எப். பைல்களை ட்ராக் அண்ட் ட்ராப் முறையில், இழுத்துச் சென்று இந்த புரோகிராமின் லிஸ்ட்டில் விட்டுவிடலாம். எத்தனை பி.டி.எப். பைல்களை வேண்டுமானாலும், மொத்தமாகப் பட்டியலிட்டு இணைத்து ஒரு பைலாக மாற்றலாம்.

குறிப்பிட்ட பக்கங்களை மட்டும் ஒவ்வொரு பைலிலும் தேர்ந்தெடுத்து இணைக்க விரும்பினாலும், இந்த புரோகிராம் அதற்கான வழிகளைத் தருகிறது. இந்த புரோகிராமைப் பயன்படுத்துவதில் இருக்கின்ற ஒரு சின்ன சிக்கலைச் சொல்லியே ஆக வேண்டும். சில நேரங்களில் பைல்களை இணைக்கையில் இது கிராஷ் ஆகிறது.

ஆனால், இதனால் எந்த பிரச்னையும் ஏற்பட்டதில்லை. இதனை இலவசமாக டவுண்லோட் செய்திடhttp://www.paologios.com/products/?type=bin என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.


2. Split Files 1.6:

உங்கள் நண்பருக்கு ஏதேனும் ஒரு பெரிய இ–புக் ஒன்றை அனுப்ப முயற்சிக்கிறீர்கள். நிச்சயம் அதனை மின் அஞ்சலில் அட்டாச் செய்து அனுப்புகையில், பிரச்னை எழும். பைல் அளவு பெரிதாக இருப்பதால், இணைக்க முடியாது. இந்த நேரத்தில், அதனைப் பிரித்து அனுப்ப உதவ, இந்த புரோகிராம் உதவும்.

இதனை http://www.softpedia.com/get/System/FileManagement/SplitFiles.shtml என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்து இயக்கவும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், நீங்கள் பிரிக்க விரும்பும் பைலை, அது உங்கள் கம்ப்யூட்டரில் எங்கு இருக்கிறது என்று சுட்டிக் காட்ட வேண்டியதுதான்.

அடுத்து ஸ்பிளிட் (Split) என்ற பட்டனைக் கிளிக் செய்தால், உடனே எந்த வகையில் பிரிக்க வேண்டும் என உங்களிடம் கேட்கப்படும். நீங்கள் வகைகளைக் கொடுத்த பின்னர், பைல் பிரிக்கப்படும். நீங்கள் பிரித்த பைல்களை இணைக்க வேண்டுமாயின் Combine என்ற பட்டனில் கிளிக் செய்து காரியத்தை முடிக்கலாம்.


3. Adolix Split and Merge PDF:

ஒரு பி.டி.எப். பைலை பிரிக்க வேண்டிய சூழ்நிலையும், ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை இணைக்க வேண்டிய சூழ்நிலையும் எப்போதும் நமக்கு ஏற்படும். இந்த இரண்டு பணிகளிலும் நமக்கு உதவுவது Adolix Split and Merge PDF என்ற பைலாகும். இதனைhttp://www.adolix. com/splitmergepdf/ / என்ற தளத்தில் பெறலாம்.

பெற்று டவுண்லோட் செய்து, பின் இன்ஸ்டால் செய்த பின், இந்த வேலைகளுக்கு நம்மை எளிதாக வழி நடத்திச் செல்லும் வகையில், இந்த புரோகிராமில் யூசர் இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது. இந்த புரோகிராமின் உள்ளாக அமைக்கப்பட்டுள்ள மெனு, விண்டோஸ் எக்ஸ்புளோரரில் வேலை செய்கிறது. மிக எளிதாக பைல்களைத் தேர்ந்தெடுக்கவும், பிரிக்கவும், இணைக்கவும் வழி தருகிறது. இந்த பைல் அளவு 2.7 எம்.பி மட்டுமே.


4. HJ split:

இதனைப் பெற http://www.freebyte.com/hjsplit/#win 32 என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். இதனைப் பயன்படுத்தி 10 ஜிபி அளவில் உள்ள பைலையும் பிரிக்க முடியும் என இந்த தளத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு போர்ட்டபிள் சாப்ட்வேர்.

எளிதாக சிடி, பென் டிரைவ்களில் எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. ஆனால் பிரிக்கப்பட்ட பைல்களை இணைக்க, உங்கள் நண்பரிடமும் இந்த பைல் தேவைப்படும்.


5.GSplit: :

இந்த புரோகிராமும் பைல்களைப் பிரிக்கவும் இணைக்கவும் பயன்படுகிறது. இணைக்கும் இடத்திலும் இந்த புரோகிராம் தேவைப்படும். இதனைப் பெற http://www.gdgsoft.com/gsplit/ / என்ற முகவரிக்குச் செல்லவும்.


6. .JR Split:

http://www.spadixbd.com/ freetools/jsplit.htm என்ற தளத்தில் கிடைக்கும் JR Splitஎன்ற பைலும் இந்த வகையில் சிறந்த ஒன்றாக உள்ளது.


7. MP3cut:

எம்பி3 பைல் பிரிக்கப் பல சாப்ட்வேர் தொகுப்புகள் இருந்தாலும், வேறு கம்ப்யூட்டர்களில் இருந்து அவற்றை இயக்க முடியாது. மேலும் அதே கம்ப்யூட்டரில் வேறு சாப்ட்வேர்களைப் பதியவும் முடியாது. இந்த சூழ்நிலையில் நமக்கு உதவ MP3 cut உதவுகிறது. இயக்குவதற்கு எளிய புரோகிராம் இது.

எந்தப் பிரச்னையும் இன்றி எம்பி3 பைல்களை, நம் தேவைக்கேற்றபடி பிரிக்க உதவுகிறது. இந்த(MP3Cut.net) தளத்திற்குச் சென்று நாம் பிரிக்க வேண்டிய பைலை அப்லோட் செய்திட வேண்டும். எந்த இடத்தில் பிரிக்க வேண்டும் என குறிக்க, ஸ்லைடர்கள் தரப்பட்டுள்ளன.

இடது ஸ்லைடர் பிரிவு தொடங்கும் இடத்திலும் வலது ஸ்லைடர் பிரிவு முடியும் இடத்திலும் இருக்க வேண்டும். பிரிவுகளைக் குறித்த பின்னர் split and download என்பதில் கிளிக் செய்திட வேண்டும். பைல் நீங்கள் குறிப்பிட்ட இடத்தை அடையாளம் வைத்துப் பிரித்து தனி பைலாக்கும். பின்னர் அந்த பைலை டவுண்லோட் செய்திட வேண்டும்.

இதிலேயே எம்பி 3 பைலை இயக்கவும் வசதி உள்ளது. இதன் மூலம் பிரிக்க வேண்டிய இடங்களைக் குறித்திட எளிதாக உள்ளது. இதன் மூலம் உங்களுக்குப் பிடித்த பாடலில் உள்ள, உங்களுக்குப் பிடித்த இசை/பாடல் உள்ள இடத்தைப் பிரித்து, மொபைல் போனில் ரிங் டோனாக அமைத்துக் கொள்ளலாம். இதனால் எந்த சாப்ட்வேர் தொகுப்பினையும் உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்திடாமல், பாடல் பைல்களைப் பிரிக்க முடிகிறது.
Related Posts with Thumbnails