சாம்சங் தரும் புதிய வசதிகளும் போன்களும்

இரண்டு சிம் பயன்படுத்தக் கூடிய இரண்டு மாடல் மொபைல்களை சாம்சங் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இவை B 5722 (இரண்டு ஜி.எஸ்.எம்.) டச்ஸ்கிரீன் மற்றும் டூயோஸ் 259 (ஜி.எஸ்.எம்+ சி.டி.எம்.ஏ) மல்ட்டி மீடியா ஆகும்.

ஜி.எஸ்.எம் மற்றும் சி.டி.எம்.ஏ. ஆகிய இரண்டு பிரிவுகளிலும் இரண்டு சிம் பயன்படுத்தக் கூடிய போன்களுக்கு மக்களிடையே ஆதரவு பெருகிவருவதால், சாம்சங் இவற்றை வடிவமைத்து வெளியிட்டுள்ளது.

சாம்சங் நிறுவனப் போன்களைப் பொறுத்த வரையில் இரண்டு சிம்களும் ஒரே நேரத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக சிம்1 மூலம் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கையில், சிம்2 மூலம் வரும் அழைப்பு யாரிடமிருந்து என்பதை பேசியவாறே பார்த்து, அவரிடமும் பேச முடியும்.

B 5722 போனில் சிம்களுக் கிடையே மாறுவதற் காகவே தனி கீ ஒன்று தரப்பட்டுள்ளது. 2.8 அங்குல அகல டச் ஸ்கிரீன் உள்ளது. அத்துடன் ரெகார்டிங் வசதி கொண்ட ஸ்டீரியோ எப்.எம்.,13 மணி நேரத்திற்கும் மேலாக பேச சக்தி தரும் 1200 mAH பேட்டரி, 8 ஜிபி வரை அதிகப்படுத்தக் கூடிய மெமரி, அட்வான்ஸ்டு மொபைல் ட்ரேக்கர் வசதி ஆகியவை தரப்பட்டுள்ளன. இதன் குறியீட்டு விலை ரூ.10,650.

டூயோஸ் 259 போனில் ஒரு ஜி.எஸ்.எம். மற்றும் ஒரு சி.டி.எம்.ஏ. சிம்களைப் பயன்படுத்தலாம். இதில் 2.2 அங்குல திரை, 1.3 எம்பி கேமரா, ரெகார்டிங் வசதியுடன் கூடிய ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, அதிக சக்தி கொண்ட 1140 mAH பேட்டரி, 8 ஜிபி வரை அதிகப்படுத்தக் கூடிய மெமரி ஆகிய வசதிகள் கொண்டுள்ளது. இதன் குறியீட்டு விலை ரூ. 7,799.

மொபைல் போன் பயன்படுத்துபவர்கள், தங்கள் விருப்பத்திற்கும் வசதிக்கும் ஏற்ப பல அப்ளிகேஷன்களை, இணயத்தில் உள்ள மொபைல் போன் நிறுவனத் தளங்களிலிருந்து டவுண்லோட் செய்து பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர்.

சாம்சங் நிறுவனமும் தன் வாடிக்கையாளர்களுக்காக சாம்சங் ஃபன் கிளப் ஒன்றை இயக்குகிறது. கேம்ஸ், மியூசிக், ரிங் டோன், வால்பேப்பர், வீடியோ கிளிப் எனப் பல வசதிகளை இதிலிருந்து பெறலாம்.

தற்போதைக்கு சாம்சங் நிறுவனத்தின் உயர்ரக போன்களுக்கு (கார்பி,மெட்ரோ,ஸ்டார் சிரீஸ்) இவை கிடைக்கின்றன. தற்போது 40 அப்ளிகேஷன்கள் இந்த கிளப்பில் கிடைக்கின்றன. இந்திய புரோகிராம் டெவலப்பர்களைக் கொண்டு, இந்திய வாடிக்கையாளர்கள் விரும்பும் அப்ளிகேஷன்களை வடிவமைத்துத் தரவும் சாம்சங் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails