தொழில் நுட்ப உலகில் நிலவும் போட்டிகள்

கம்ப்யூட்டர், இணையம், மொபைல் போன் ஆகிய தகவல் தொடர்பு உலகின் சாதனங்களில் இயங்கும் தொழில் நுட்பத்தில், சில போட்டிகள் மிக சுவராஸ்யமாக இயங்கிக் கொண்டுள்ளன. அவற்றை இங்கு காணலாம்.


1. பிரவுசர் போட்டி:

நெட்ஸ்கேப் கம்யூனிகேட்டரைத் தட்டிவிட்டு, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இடத்தைப் பிடித்தது. ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இலவசமாக இணைத்து வழங்கியதனாலோ, அல்லது நெட்ஸ்கேப் கம்யூனிகேட்டரால் தொடர்ந்து போட்டியிட முடியாததனாலோ, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஓஹோ என பிரவுசர் உலகில் கொடி கட்டிப் பறக்கத் தொடங்கியது.

ஆனால் மொஸில்லாவின் பயர்பாக்ஸ் வந்த பின்னர், இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் வாடிக்கையாளர்கள் சற்று இடம் பெயரத் தொடங்கினார்கள். வைரஸ்கள் மற்றும் மால்வேர்கள் நுழைவதற்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் ஏகப்பட்ட இடம் உள்ளது என உலகிற்குத் தெரியவந்ததுடன், பலரும் பயர்பாக்ஸ் பிரவுசருக்குத் தாவினர்.

இதற்கிடையே கூகுளின் குரோம் பிரவுசர் நுழைந்து தான் அதிக வேகத்தில் இயங்கும் பிரவுசர் என நிரூபித்துக் காட்டியது. இருப்பினும் பயர்பாக்ஸ் கொண்டிருக்கும் இரண்டாவது இடத்தை எட்ட முடியவில்லை. கூகுளின் நோக்கம் வேறு. பயர்பாக்ஸ் அல்லது குரோம் பயன்படுத்துவதைப் பற்றி கவலைப்படவில்லை.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மார்க்கட்டை விட்டு ஒழிய வேண்டும் என விரும்புகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் பதிப்பு 6 குறித்து பலமான எதிர்ப்புகள் வெளியாகி, அது ஒரு முடிவிற்கு வந்துவிட்டது. ஆனால் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 இந்த போராட்டத்தில் பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசருக்குச் சரியான போட்டியைத் தந்து வருகிறது.

இதற்கிடையே இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 வர இருப்பதாகவும், அது எக்ஸ்பியில் சத்தியமாக இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது இன்டர்நெட் எக்ஸ்புளோரரை எதில் கொண்டு போய் நிறுத்தப்போகிறது எனத் தெரியவில்லை.


2. சீனாவில் கூகுள் / நீயா? நானா?:

பல மாதங்களாக நடந்து வரும், தகவல் தொழில் நுட்ப உலகம் தொடர்ந்து கவனித்து வரும், பல நாடுகளின் கவனத்தை ஈர்த்து வரும் போட்டி கூகுள் நிறுவனத்திற்கும், சீன அரசாங்கத்திற்கும் தான். இது வெறும் தொழில் நுட்ப போட்டி மட்டுமல்ல; மனித உரிமை, வர்த்தக இடம், நிறுவன பொருளாதாரம் எனப் பல கோணங்களில் பார்க்கப்பட வேண்டிய போட்டியாக உள்ளது.

இந்த போட்டியைச் சுருக்கமாகச் சொல்வதென்றால், சீன அரசாங்கம் கூகுள் நிறுவனத்தை, அதன் சர்ச் இஞ்சின் சீன நாட்டு தகவல்கள் குறித்து கிடைக்கும் டேட்டாவை, அவர்கள் சொல்கிற வகையில் வடிகட்டி வெளியிடு என்று சொல்கிறது.

ஆனால் இது மனித உரிமையில் தலையிடும் விவகாரம் என்று சொல்லி கூகுள் அடி பணிய மறுக்கிறது. விளைவு கூகுள் சீனாவை விட்டு வெளியேறத் தொடங்கி உள்ளது. ஏற்கனவே தன் சீன சர்வருக்கு வரும் தேடல் கேள்விகளை, ஹாங்காங் சர்வருக்கு திருப்பி அனுப்புகிறது.

கிடைக்கும் தகவல்களைச் சிறிது கூட வடிகட்டாமல் அப்படியே வெளியிடத் தொடங்கி உள்ளது. சீனா கம்ப்யூட்டர், இன்டர்நெட் மற்றும் மொபைல் பயன்பாட்டில் முன்னணியில் உள்ள நாடு. இதன் மூலம் கூகுள் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 60 கோடி டாலருக்கு மேல் வருமானம் கிடைத்து வந்தது.

பேச்சு சுதந்திரமே எங்களுக்குப் பெரிசு, வருமானம் பெரிதல்ல என்று கூறி கூகுள் வெளியேற முடிவெடுத்துள்ளது. ஆனால் சீனா இது பற்றி கவலைப்படவில்லை. வரும் ஏப்ரலில் கூகுள் வெளியேறுவது முழுமையாகும்.


3. ஆண்ட்ராய்ட் / ஐ போன்:

இந்த இரண்டு மட்டுமின்றி இன்னும் பல ஸ்மார்ட் போன்கள் மொபைல் சந்தையில் உலா வருகின்றன. ஆனால் போட்டி என்னமோ இவை இரண்டுக்கிடையில்தான். ஏனென்றால் இது போன்களுக்கிடையே மட்டுமல்ல.

இரு பெரும் நிறுவனங்களுக்கிடையே ஆகும். அவை கூகுள் மற்றும் ஆப்பிள். ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் போன்களைப் பெருமளவில் தயாரிக்கும் எச்.டி.சி. மீது பெரும் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த பின்னணியில் சண்டையிடும் பெரும் நிறுவனங்கள் கூகுள் மற்றும் ஆப்பிள் அடுத்து எப்படி போட்டியைத் தொடரப் போகின்றன என்று காத்திருந்து பார்க்கலாம்.


4. கிண்டில் / ஐ–பேட்:

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கிண்டில் சாதனம் அறிமுகமாகி இ–ரீடர் எனத் தனக்கென ஓர் இடம் பிடித்தது. ஆனால் ஆரவாரத்துடன் அறிமுகமான ஐ–பேட் இந்த இடத்தை அசைக்கப் பார்க்கிறது. இவை இரண்டுமே பிற நிறுவனங்களின் அப்ளிகேஷன்களை ஏற்று செயல்படுவதால், வாடிக்கையாளர் களைக் கவர்வதில் இரண்டுமே சம பலத்துடன் போட்டியிடும் என எதிர்பார்க்கலாம்.


5. எச்.டி.எம்.எல் 5 /பிளாஷ்:

சென்ற ஆண்டில் புதிய தொழில் நுட்பமான எச்.டி.எம்.எல். 5 மெதுவாகப் பல சிஸ்டம் பிளாட்பாரங்களில் தன் இடத்தைப் பதியவைத்துக் கொண்டது. அத்துடன் தீவிரமாக தன் பல புதிய வளைந்து செல்லும் பாங்கினால், பிளாஷ் நுட்பத்தினை தூர அடிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.

இரண்டு தொழில் நுட்பத்திற்கும் உலகில் தீவிர ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த இரண்டு குழுவும் தங்கள் பக்கத்திற்கான ஆதாரத்தை எடுத்து வைத்து, இவற்றின் வெற்றியை உறுதி செய்து வருகின்றனர். இந்த ஆண்டில் இது இன்னும் தீவிரமாகி ஒவ்வொன்றின் இடம் தெரியவரும். அடோப் தன் அனைத்து சாதனங்களிலும் பிளாஷ் குறித்து தீவிரமாய் செயல்படுவதைப் பொறுத்து இது அமையும்.


6. கூகுள் டாக்ஸ்/மைக்ரோசாப்ட் ஆபீஸ்:

கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் கிடைப்பதால், கூகுள் டாக்ஸ் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வாடிக்கையாளர்களைப் பெற்றது. இதனை உணர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனமும், தன் ஆபீஸ் தொகுப்பை கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் வழங்கத் தொடங்கியுள்ளது.

அத்துடன் மூன்றாவது பிரிவு நிறுவனங்களின் அப்ளிகேஷன்களும் இதே வகையில் கிடைக்கத் தொடங்கி உள்ளன. இனிமேல் தான் இந்தப் போட்டி மட்டும் தொடருமா? அல்லது ஒன்று வெல்லுமா என்பது தெரிய வரும்.

மேலே குறிப்பிட்டது போக இன்னும் சில தொழில் நுட்ப சண்டைகள் நடந்து கொண்டு வருகின்றன. ஆனால் அனைவரையும் பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்படுவது மேலே உள்ளவை தான். இந்த ஆண்டில் இவை எப்படி தொடர்கின்றன என்பதை வேடிக்கை பார்க்கலாம். எப்படியும் இதன் பாதிப்பு நம் மீதும் இருக்கும்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails