மொபைல் போன் சேவையால் நாட்டின் பாதுகாப்பில் ஏற்படும் பிரச்னை குறித்து தொலைத்தொடர்பு ஆலோசனைக் குழு சார்பில், சென்னையில் பயிலரங்கம் நேற்று நடந்தது.
இதில், கலந்து கொண்ட தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை பேசுகையில், 'சாப்ட்வேர் ஏற்றுமதியில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது. கிராமப்புறங்களில் பி.பி.ஓ.,க்கள் அமைப்பது குறித்து இன்னும் நான்கு முதல் ஆறு வாரங்களில் கொள்கை வெளியாக உள்ளது' என்றார்.
பயிலரங்கத்தை துவக்கி வைத்த மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜா பேசியதாவது: தொலைத்தொடர்புத் துறையின் வளர்ச்சி, வருவாய் தற்போது சிறப்பாக உள்ளது. அதே நேரத்தில் இத்துறையினால் ஏற்படும் நாட்டின் பாதுகாப்பு பிரச்னைகளை நிவர்த்தி செய்ய வேண்டியது அவசியம்.
கடந்த 2005ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்கும் முன் மொபைல் போன் இணைப்பு பெற்றவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. வரும் 2012ம் ஆண்டில் மொபைல் போன் இணைப்புகளை 60 கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்த இலக்கை தொலைத்தொடர்புத் துறை கடந்த மாதமே அடைந்துவிட்டது. வரும் 2012ம் ஆண்டில் மொபைல் போன் இணைப்புகள் 75 கோடியாக அதிகரிக்கும். பாதுகாப்பு பிரச்னையால் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் மொபைல் போன் எஸ்.எம்.எஸ்., சேவைகளை நிறுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தேவை அதிகரித்துள்ளதால், கிராமப்புறங்கள், மலைப் பகுதிகளில் 7,000 மொபைல் போன் சிக்னல் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 10 ஆயிரம் டவர்கள் அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு ராஜா தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு பின், மத்திய அமைச்சர் ராஜா அளித்த பேட்டியில், ' 3ஜி அலைவரிசை ஏலம் மூலம் மத்திய அரசுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். ஆனால், அதை இன்னும் இறுதி செய்யவில்லை,' என்றார்.
0 comments:
Post a Comment