டிசம்பரில் பிரபுதே‌வா-நயன் திருமணம்

கடந்த சில மாதங்களாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த பிரபுதேவா, நயன்தாரா திருமணம் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தனது திருமணம் குறித்த ஏற்கனவே முடிவு செய்து விட்டதால் தான் நயன்தாரா, சமீப காலமாக புது பட வாய்ப்புக்களுக்கு மறுப்பு தெரிவித்து வருவதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது.

தற்போது ஆர்யாவுடன் இணைந்து பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் நடித்து வரும் நயன்தாரா, புதிதாக தமிழ் படம் ‌எதிலும் ஒப்பந்தம் ஆகவில்லை.

மேலும் கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் புது பட வாய்ப்புக்களை தவிர்த்துள்ளார், நயன்.

அதே சமயம் பிரபுதேவா, சந்தோஷ் சிவனின் உருமி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகிய உள்ளார். இந்த படத்தின் சூட்டிங் விரைவில் துவங்க உள்ளது.

ஸ்லம்டாக் குழுவுடன் மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான்

8 ஆஸ்கர் விருதுகளை தட்டிச்சென்ற ஸ்லம்டாக் மில்லனியரின் அதே குழு, மீண்டும் ஒரு முறை இணைந்திருக்கிறது.

முந்தைய படத்தில் மென்மையான காதலை காட்டிய டேனி பாயல் தற்போது வித்தியாசமான திரைக்கதையுடன் மலை உச்சியில் நடக்கும் த்ரில்லர் கதையை கையாண்டுள்ளார். படத்தின் பெயர் 127 ஹவர்ஸ்.

இப்படத்திற்கு இசை அமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் தனக்கு ஆஸ்கர் கொடுத்தது சரிதான் என்ற அளவிற்கு இசை அமைத்து அசத்தியுள்ளார். மலை உச்சியில் நடக்கும் இக்கதையில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் பிரான்கோ கதாநாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது இணையதளங்களில் அதிகம் தேடப்பட்டவையாக இருந்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை பிரமிக்க வைக்கிறது.

டேனி பாயல் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி, ரசிகர்களுக்கு கண்டிப்பாக விருந்து படைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இப்படம் நவம்பர் மாதம் 5ம் தேதி திரைக்கு வருகிறது.

சிறந்த இணைய உலாவி

இன்டர்நெட் உலாவிற்கு ஏற்ற பிரவுசர் தொகுப்பு எது? இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம், ஆப்பரா அல்லது சபாரி? இவற்றில் எது சிறந்தது?

எதனைக் கொண்டு இதனை முடிவு செய்வது? அம்சங்கள், வசதிகள், வேகம், புதுமையாக உதவிடும் வசதிகள், வளைந்து கொடுக்கும் தன்மை எனப் பலவற்றை நம் பிரவுசர்கள் நமக்குத் தர வேண்டும் என எதிர்பார்க்கிறோம். சில அடிப்படைக் கூறுகள் சிலவற்றில் அதிகமாகவும், சிலவற்றில் குறைவாகவும் உள்ளனவே! ஒவ்வொன்றாக இவற்றை இங்கு காணலாம்.


வெப் பிரவுசர் என்னும் இணைய உலாவித் தொகுப்புகள் தொடக்க காலத்தில் வந்தது போல் இப்போது இருக்க முடியாது. இன்டர் நெட்டின் தளத்தி லிருந்து டெக்ஸ் ட்டை எடுத்து உங்கள் மானிட்டரில் காட்டுவதோடு பழைய காலத்து பிரவு சரின் வேலை முடிந்து விட்டது. இப்போது ஒவ்வொரு வரும் குடி இருக்கும் இடமே இணைய தளங்கள் என்றாகிவிட்டன.

அன்றாடப் பணிகளும் சிறப்பு வேலைகளும் இணையத்தில் தான் நடைபெறுகின்றன. எனவே பிரவுசர்கள் சந்திக்கும் சவால்களும் கடுமையாகிவிட்டன. ஆவணங்களைத் தயார் செய்து திருத்தவும், பயணங்கள் மேற்கொள்ளவும், பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிடவும், மாப்பிள்ளை பெண் பார்க்கவும், திருமண நிச்சயதார்த்தத்தினை அறிவிக்கவும், நடந்த திருமணத்தைக் காட்டவும் என ஒவ்வொன்றுக்கும் ஒரு வெப்சைட் உள்ளது.

இவை எல்லாவற்றிற்கும் ஈடு கொடுத்து ஒரு இணைய உலாவித் தொகுப்பு இயங்க வேண்டியுள்ளது. வேகமாக இயங்கவில்லை என்றால், பயணத்திற்கு டிக்கட் கிடைக்காமல் போய்விடும். சரியாகத் தகவல் போய்ச் சேரவில்லை என்றால், திருமண வரன்கள் மாறிவிடும். எனவே இவற்றின் இயங்குதன்மை அனைத்திற்கும் ஈடு கொடுக்க வேண்டியுள்ளது.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம், ஆப்பரா அல்லது சபாரி – இவற்றில் எதனைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவெடுப்பது அவ்வளவு எளிய காரியம் இல்லை. அனைத்து பிரவுசர்களுமே நல்ல பயனுள்ள பிரவுசர்களே. ஒன்று மற்றதைக் காட்டிலும் சில விஷயங்களில் சிறந்ததாக இருக்கலாம்.

இணையதளங்களை வடிவமைப்பவர்கள், தங்களின் விருப்பத்திற்கேற்ப அல்லது தாங்கள் பயன்படுத்திக் காட்டும் தொழில் நுட்பத்திற்கேற்ப ஈடு கொடுக்கும் பிரவுசரை அவர்களின் விருப்ப பிரவுசராக தேர்ந்தெடுக்கலாம். ஆனால் இணைய உலாவிற் கெனப் பயன்படுத்துகையில், ஒவ்வொருவருக்கும் சில அடிப்படை விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என நாம் எதிர்பார்க்கலாம்.

1.குரோம் பதிப்பு 5:

இணைய தளங்களை வடிவமைக்கும் புரோகிராமர்களுக்கு குரோம் பதிப்பு 5 சிறந்த தோழனாக அமைந்துள்ளது. மேலும் இருக்கின்ற பிரவுசர்களில் மிக வேகமாக இயங்கி, இணையப் பக்கங்களைத் தருவதில், குரோம் முதல் இடத்தில் உள்ளது.

ஜாவாஸ்கிரிப்ட் மற்றும் எச்.டி.எம்.எல். 5 வரையறைகளை மிக சாதுர்யமாகச் சந்தித்து இயக்குகிறது. அத்துடன் அடோப் தந்துள்ள பிளாஷ் தொகுப்பில் உருவான இயக்கங்களையும் சிறப்பாக இயக்குகிறது. இதனால் குரோம் பிரவுசர் பயன்படுத்துவதில் இடையே தடை ஏற்படுவதே இல்லை.

மேலும் குரோம் ப்ளக் இன் புரோகிராம்களை எளிதாகக் கையாள்கிறது. இந்த வகையில் பயர்பாக்ஸ் பிரவுசரைக் காட்டிலும் இது திறமையுடன் செயல்படுகிறது. இதனால் குரோம் பிரவுசருக்கான ப்ளக் இன் புரோகிராம்கள் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டுக் கிடைக்கின்றன.

2. பயர்பாக்ஸ் சோதனைத் தொகுப்பு 4:

நெட்ஸ்கேப் பிரவுசர் சந்தையிலிருந்து மறைந்த போது, அதிலிருந்து பயர்பாக்ஸ் உருவானது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பிற பிரவுசர்கள், இதில் உள்ள வசதிகளைக் கண்டு காப்பி அடிக்கும் அளவிற்கு, சிறப்பாய் உருவானது. தற்போது பயர்பாக்ஸ் தன் பிரவுசர் கிராஷ் ஆகி முடங்கிப் போகாமல் இருக்க ஒரு பாதுகாப்பினை உருவாக்கித் தந்துள்ளது.

இதனால் அப்போது பார்க்கப்படும் அந்த தளம் மட்டுமே முடங்கும். மற்றவற்றுடன் தொடர்ந்து நாம் பணியாற்றலாம். பயர்பாக்ஸ் பிரவுசரின் ஒரு பெரிய பலம், அதற்கென உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக் கான ஆட் ஆன் தொகுப்புகளும், ப்ளக் இன் புரோகிராம்களுமே.

இணைய தள வடிவமைப்பாளர்கள் பயன்படுத்தும் ஜாவா ஸ்கிரிப்ட் குறியீடுகளை வேகமாக செயல்படுத்துவதில் பயர்பாக்ஸ், மற்ற பிரவுசர்களைக் காட்டிலும் பின்தங்கியே உள்ளது என்பது பலரின் குறை. ஆனால், மிக வேகமாக அவற்றை இயக்கும் வகையிலான கட்டமைப்பை விரைவில் தருவதாக மொஸில்ல்லா அறிவித்துள்ளது.

3. மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 சோதனைத் தொகுப்பு:

ஒரு காலத்தில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மட்டுமே அனைவராலும் இணைய உலாவிற்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்தக் காலம் இனி திரும்ப வருமா என்பது கேள்விக் குறியே. இதனை உணர்ந்த மைக்ரோசாப்ட், இழந்த இடத்தைப் பிடிக்க நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில், பல புதிய வசதிகளைத் தரும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

டேப் வழி வசதி பல மாதங்களுக்கு முன் தரப்பட்டது. இதன் காலரியில் இப்போது பல ஆட் ஆன் தொகுப்புகள் கிடைக்கின்றன. பயர்பாக்ஸ் மற்றும் ஆப்பரா பிரவுசர்களில் தரப்பட்ட பல புதிய விஷயங்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 8ல் தரப்பட்டன.

இணையத்தில் உலா வருகையில், வைரஸ் மற்றும் பிற கெடுதல் தரும் புரோகிராம்களிலிருந்து, மைக்ரோசாப்ட் தன்னுடைய பிரவுசர் தொகுப்பு, மற்ற பிரவுசர்களைக் காட்டிலும் சிறந்த பாதுகாப்பினைத் தருவதாக அறிவித்துள்ளது. குரோம் பிரவுசரைக் காட்டிலும் 5 மடங்கு, பயர்பாக்ஸ் பிரவுசரைக் காட்டிலும் 2.9 மடங்கு கூடுதல் பாதுகாப்பு தருவதாக அறிவித்துள்ளது.

குறிப்பாகப் புகழ்பெற்ற நிறுவனங்களின் இணைய முகவரிகளைப் போலக் காட்டிக் கொள்ளும், இணைய முகவரிகளைக் கண்டறிந்து எச்சரிப்பதில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மிகச் சிறந்தது என்று கூறியுள்ளது.

ஆனால் இந்த பெருமையை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்படிக் கூறும் மைக்ரோசாப்ட், தன் பிரவுசரில் உள்ள பல பிழையான இடங்களைச் சரிப்படுத்தும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ப்ளக் இன் புரோகிராம்களுக்கு அதிக இடம் தந்ததால், அவற்றைப் பயன்படுத்தியே பலர் தங்கள் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை அனுப்புகின்றனர்.

இருப்பினும், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடனேயே இன்டர்நெட் எக்ஸ்புளோரரும் இணைந்து வருவதால், இணைய தளத்தை வடிவமைப்பவர்கள், இந்த பிரவுசருக்கேற்றபடியாகவும் தங்கள் தளங்களை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப்படும் பிரவுசராக, இன்னும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தான் உள்ளது.

4. ஆப்பரா 10.6:

ஆப்பராவின் ஒரு பெருமை அதன் அதிவேக இயக்கம் தான். மற்ற எந்த பிரவுசரைக் காட்டிலும் மிக வேகமாக இணையப் பக்கங்களை இறக்கித் தரும் பிரவுசராக இன்றும் உள்ளது. ஆனால் அதிகபட்ச அளவில் டேட்டா கிடைக்கும்போதும், கையாளப்படும்போதும் இந்த பிரவுசர் திணறுகிறது என்று பல ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வேறு வசதிகளில் இது அதிகக் கவனம் செலுத்தாததால், சாதாரணமாக, இணையத்தைப் பயன்படுத்து பவரிடையே இது அவ்வளவாக எடுபடவில்லை.

5. ஆப்பிள் சபாரி 5.0:

லினக்ஸ் உலகத்திலிருந்து பழைய Konqueror பிரவுசரை எடுத்து, அதில் நவீன தொழில் நுட்பத்தினை எக்கச்சக்க அளவில் புகுத்தி, விண்டோஸ் மற்றும் மேக் கம்ப்யூட்டர்களில் இயங்கும் வகையில் ஆப்பிள் நிறுவனம் சபாரி பிரவுசரைக் கொண்டு வந்தது. சபாரி ஒரு நல்ல மாற்று பிரவுசராக இன்று இடம் பெற்றுள்ளது. வேகம், கண்ட்ரோல் மற்றும் பயன்படுத்தப்பட்டுள்ள டெவலப்பர் டூல்ஸ் ஆகியவை நன்றாகவே இயங்குகின்றன.

இணையப் பயனாளர் ஒருவர் விரும்பும் அனைத்துமே, சபாரி பிரவுசரில் நிச்சயம் உண்டு என்று சொல்லும் அளவிற்கு, இதனை உருவாக்கியுள்ளது ஆப்பிள் நிறுவனம். ஆனால் மற்ற பிரவுசர்களிடமிருந்து இதனைத் தனித்துக் காட்டும் வகையில் இதில் எந்த சிறப்பும் இல்லை. அடோப் நிறுவனத்துடன் ஏற்பட்டுள்ள பிரச்னையின் காரணமாக, ஆப்பிள், பிளாஷ் தொகுப்பினைக் காட்டிலும், எச்.டி.எம்.எல்.5 க்கு அதிக இடம் கொடுத்துத் தொடர்ந்து அதனைச் சிறப்பான இடம் பிடிக்க உதவி வருகிறது.

ஒவ்வொரு பிரவுசரும் ஏதேனும் சில தனிச் சிறப்பினையும், சில குறைவான வசதிகளையும் கொண்டுள்ளது. நம் தேவைகளுக்கேற்ப எது வேண்டுமோ அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், ஒரே பிரவுசரை மட்டுமே பயன்படுத்தாமல், ஒன்றுக்கு மேற்பட்ட பிரவுசரைக் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்துப் பயன்படுத்துவதே நமக்கு வசதியாகவும் பயனுடையதாகவும் இருக்கும்.

4 படங்களை உதறிய நயன்தாரா

நயன்தாரா புதுப்படங்களில் நடிக்க மறுக்கிறார். ஏற்கனவே கைவசம் மூன்று படங்கள் இருந்தன. அதில் ஒன்று ஆர்யா ஜோடியாக நடித்த பாஸ் என்ற பாஸ்கரன். இதன் படப்பிடிப்பு முடிந்து பூசணிக்காய் உடைத்தாகி விட்டது.

கன்னடத்தில் உபேந்திரா ஜோடியாக ஒரு படத்தில் நடித்தார். அதுவும் முடிந்து விட்டது. மலையாளத்தில் ஒரு படம் நடித்தார். அதன் படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டது. தற்போது அவரிடம் புதுப்படங்கள் எதுவும் இல்லை.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளிலும் புதுப்பட வாய்ப்புகள் வந்தன. கன்னட படத்தில் நடிக்க ரூ.1 கோடி சம்பளம் தருவதாக பேசினர். 4 படங்களிலும் நடிக்க மறுத்து விட்டார்.

எனவே நயன்தாராவின் அடுத்த கட்ட முடிவு என்ன? படங்களில் நடிப்பாரா? முழுக்கு போடுவாரா? என்றெல்லாம் பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன.

பிரபுதேவா, நயன்தாரா காதல் இறுக்கமாகியுள்ளது. இருவரும் ஏற்கனவே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். ஆனால் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிய வந்ததால் அதனை கைவிட்டனர். திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் ஒன்றாக வசிப்பதாக திரையுலகம் கிசு கிசுக்கிறது.

தற்போது படங்களில் நடிக்காத நிலையில் பிரபு தேவாவுடன் சுற்றுகிறார். அவர் சந்தோஷ்சிவனின் “உறுமி” படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது. நயன்தாரா அந்த படப்பிடிப்பில் பிரபுதேவாவுடனேயே தங்கி இருக்கிறார். அவருக்கு சாப்பாடு தயார் செய்து கொடுக்கும் வேலையை கவனிக்கிறாராம்.

பிரபுதேவாவின் அன்றாட செலவுகளை நயன்தாராதான் கவனிக்கிறார். இதனால் அவரது சேமிப்பில் இருந்து பெருந்தொகை கரைந்து விட்டதாம். புதுப்படங்களிலும் நடிக்காத நிலையில் வருமானம் நின்று போய் உள்ளது.

இனிமேல் நயன்தா ராவுக்கு பிரபுதேவாவை சார்ந்திருக்கும் நிலைமை ஏற்படும் என்றும் செலவுகளை பிரபுதேவா தான் இனி கவனிக்கவேண்டும் என்றும் திரையுலக பிரமுகர் ஒருவர் கூறினார்

விஜய்யுடன் கை கோர்க்கிறார் அஜித்

அஜித்தின் அடுத்த படம் என்ன? என்ற கேள்விக்கு விடைகொடுத்து மங்காத்தா சூட்டிங் விறுவிறுவென நடந்து வருகிறது.

இப்படத்தை முடித்த கையோடு அஜித், கிரீடம் விஜய்யுடன் கூட்டணி சேரப்போகிறாராம். விஜய் இயக்கத்தில் முதன் முதலில் உருவான படம் கிரீடம். எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை என்றாலும் தயாரிப்பாளரின் கையை கடிக்காமல் விட்ட படம் கிரீடம்.

அவர் இயக்கிய மதராசபட்டினம் படத்தை பார்த்து வியந்து போன அஜித், அதே மாதிரி ஒரு ஹிஸ்டாரிகல் கதையை தயார் செய்யச் சொல்லியிருக்கிறாராம்.

மதராசபட்டினம் வெற்றியில் திக்குமுக்காடியிருக்கும் கிரீடம் விஜய், புதிய கதையை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

சுதந்திரத்திற்கு முந்தைய தமிழகத்தின் வாணிப நிலைதான் படத்தின் ஒன் லைன் ஸ்டோரி.

சோனியின் புதிய தொழில்நுட்பம்

சோனி நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. டோக்கியோவை மையமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம் தான் இறங்கிய தளங்களில் எல்லாம் வெற்றிக்கொடி நாட்டிவருகிறது.

அதிலும் குறிப்பாக சோனி அறிமுகப்படுத்திய வாக்மேன் ஒரு புரட்சியையே உருவாக்கியது. மேட் இன் ஜப்பான் என்ற வார்த்தைகளுக்கு ஒரு மரியாதையையே ஏற்படுத்தியது எனலாம்.

இந்நிறுவனம் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு சேனல்களை பார்க்க கூடிய வகையில் அறிமுகப்படுத்தவிருக்கும் டிவியை பற்றித்தான். நீங்கள் கிரிக்கெட் போட்டியை பார்க்க விரும்பும்போது, உங்கள் வீட்டில் வேறு எதாவது திரைப்படங்கள் போன்ற நிகழ்சிகளை பார்க்கவிரும்புவார்களா?

ரிமோட் யார் வைத்திருப்பது என்பதில் சண்டை வருமா? அப்படியானால் சோனி அறிமுகப்படுத்தவிருக்கும் புது டிவி உங்களுக்கு தான். இந்த tதி இல் ஒரே நேரத்தில் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் அவரவர்களுக்கு விருப்பமான வேறுபட்ட இரு நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கலாம்.


இது எப்படி சாத்தியமாகிறது? இதற்க்கு நீங்கள் பிரத்தியேகமான கண்ணாடியை அணிந்து கொள்ள வேண்டும். இந்த கண்ணாடிகளை டிவியின் பிரேம் ரேட்க்கு ஏற்ப சின்க் செய்வதன் மூலம் விருப்பமான சேனல்களை பார்க்க முடியும். மேலும் இது மல்டிபிளேயர் விளையாட்டுகளில் அவரவர் வியூபாயிண்ட்களை பார்த்து விளையாட முடியும்.


இது 3டி தொலைக்காட்சி தொழில்நுட்பத்தின் நீட்சி தான். இத்தொலைக்காட்சிக்கான காப்புரிமையை சோனி நிறுவனம் தற்போது பெற்றிருக்கிறது. விரைவிலேயே இதை சந்தைக்கு அறிமுகப்படுத்தலாம். அதுவரை பொறுத்திருங்கள்.

அஜித்தின் மங்காத்தா பற்றிய லேட்டஸ்ட் தகவல்

அஜித்தின் மங்காத்தா படம் பற்றிய லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. அஜித் அடுத்து எந்த படத்தில் நடிப்பார் என்ற கேள்விக்கு விடை கி‌டைக்கவே பல மாதங்கள் ஆன நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மங்காத்தா படத்தின் பூஜை கடந்த 2ம்தேதி நடைபெற்றது.

தலயின் அடுத்த படம் மங்காத்தா என்று ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் மங்காத்தா பற்றி தினம் தினம் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. பூஜை போட்ட கையோடு விறுவிறுவென டிரைலரை எடுத்து முடித்திருக்கும் டைரக்டர் வெங்கட்பிரபு, அப்படத்தின் டிரைலரை நாளை (20ம்தேதி) ரசிகர்களுக்கு காட்டப் போகிறார்.

இந்நிலையில் மங்காத்தாவில் முக்கிய கேரக்டரில் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா நடிக்கவிருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை தெலுங்கிலும் இயக்க திட்டமிட்டிருக்கும் வெங்கட்பிரபு, தெலுங்கில் நாகார்ஜூனாவை ஹீரோவாக்குகிறார்.

தமிழில் நாகார்ஜூனா நடிக்கும் கேரக்டரில், தெலுங்கில் அஜித் நடிக்கப் போகிறாராம். சமீபத்தில் வெளியான மணிரத்னத்தின் ராவணன் படத்தில் விக்ரம் - அபிஷேக் பச்சன் நடித்ததைப் போல மங்காத்தாவில் அஜித்தும் - நாகார்ஜூனாவும் மாறி மாறி நடிக்கப்போகிறார்கள்.

தங்கத்தாலான சூடான உணவு

தங்கத்தில் நகைகள் செய்து உடலை அலங்கரிக்கலாம், தெரியும் .பஸ்பமாக சில பணக்காரர்கள் அதை சாப்பிடுவதாக கேள்விபட்டிருக்கிறொம் .

இப்போது 24 காரட் தங்கத்தில் சாப்பாட்டுக்கு பிறகு சாப்பிடும் ' பழக் கலவை ' ( டெசர்ட் ) தயார் . விலை ரூ. 11.65 லட்சம்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஓட்டல், கிராண்ட் ஓபுலன்ஸ் சண்டே,

அதில் இப்போது கோடீஸ்வரர்களைக் கவர வித்தியாசமான மெனு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .

அதன் பெயர் ப்ரோஜன் ஹாட் சாக்லேட் . இரவு உணவுக்கு பிறகு சாப்பிடும் பழங்கள் கலந்த டெசர்ட் என்ற ஐட்டம் அது .

அதில் சுவிசர்லாந்தில் இருந்து பெறப்படும் 24 காரட் சுத்தமான திரவ தங்கம் ( சமையலில் பயன்படுத்தக்கூடியது ) சேர்க்கப்படுகிறது .

24 காரட் தங்கத்தால் அலங்கரிக்கப்படுகிறது . ஒரு டெசர்ட் ரூ. 11. 65 லட்சம் . கோடீஸ்வரர்கள் அப்படியே சாப்பிடலாம் .

இந்த டெசர்ட்டை ருசிக்க 2 நாட்களுக்கு முன்பே ஓட்டலுக்கு ஆர்டர் தர வேண்டும் .

ஐஸ் மீது நடவடிக்கை எடுக்குமா நடிகர் சங்கம்?

பிரபல பாலிவுட் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் மீது தென்னிந்திய நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடிகர் சங்கத்தில் பல நடிகர், நடிகைகள் உறுப்பினராகாமல் உள்ளனர். சங்கத்தில் இல்லாமலேயே படங்களில் இவர்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நடிகர் சங்கம் இறுதி கெடு விதித்தது.

அதாவது ஆகஸ்ட் 15ம்‌தேதிக்குள் நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகாவிட்டால் ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என்று நடிகர் சங்கம் தெரிவித்திருந்தது. நடிகர் சங்கத்தின் முடிவுக்கு தயாரிப்பாளர் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நடிகர் சங்கத்தின் மிரட்டலால் மிரண்டு போன நடிகர் - நடிகைகள் பலர் உடனடியாக தங்களை சங்கத்தில் இணைத்துக் கொண்டனர். சமீரா ரெட்டி, ஹன்சிகா, ஜெனிலியா, அங்காடித்தெரு மகேஷ், களவாணி விமல் உள்ளிட்டோர் நடிகர் சங்கத்தில் சேர்ந்தனர்.

ஆனால் கெடுவுக்குள் சிக்கியிருக்கும் ஐஸ்வர்யா ராய் எந்தவித ரீயாக்ஷனும் இதுவரை காட்டவில்லை. ஐஸ்வர்யா ராய் இருவர், ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன் உள்ளிட்ட தமிழ் சினிமாக்களில் நடித்துள்ளார்.

அவரை நடிகர் சங்கத்தில் இணையும்படி நடிகர் சங்க நிர்வாகிகள் ஏற்கனவே வற்புறுத்தியிருந்தனர். ஐஸ்வர்யா ராய் இந்த கெடுவை கண்டு கொள்ளவே இல்லை.

எனவே அவர் மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா? அல்லது வழக்கம்போலவே மாற்றி மாற்றி பேசி, இந்த பிரச்னையையே மறந்து விடுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

த்ரில்லர் படம் எடுக்கிறார் கெளதம் மேனன்

அஜித்தை வைத்து தான் எடுக்கும் படம் முடியும் நிலையில் இருப்பதால், கெளதம் மேனன் தனது அடுத்த படங்களில் கவனம் செலுத்த துவங்கி உள்ளார்.

ஒரே நேரத்தில் 2 படங்களை தயாரித்து வரும் கெளதம் மேனன், அந்த இரு படங்களும் கூட முடியும் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அந்த புதிய படங்கள் பற்றிய பல ரகசியங்களை கெளதம் மேனன் தற்போது வெளியிட்டுள்ளார்.

அவற்றில் ஒரு படத்தின் பெயர் "நடுநிசி நாய்கள்" . முழுக்க முழுக்க த்ரில்லர் படமான இதில் ஷமீரா ரெட்டி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மற்றொரு படத்திற்கு "வெப்பம்" என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த இரண்டு படங்களும் கெளதம் மேனனின் போட்டான் கதாஸ் நிறுவனமும், இஃபோடெயின்மென்ட் பி.லிட்., நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

இவற்றி்ல் நடுநிசி நாய்கள் படத்தையும் கெளதமும், வெப்பம் படத்தை அஞ்சனாவும் இயக்கி வருகின்றனர்

காவலனாக மாறியது காவல்காரன்

விஜய் - அசின் நடிக்கும் புதிய படத்தின் பெயர் காவல் காதல். இந்த படத்தின் பெயர் தற்போது 3 வது முறையாக மாறியுள்ளது.

சித்திக் மலையாளத்தில் இயக்கிய பாடிகார்ட் என்ற படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இப்படத்தையும் இயக்குனர் சித்திக்கே இயக்கி வருகிறார். விஜய்க்கு தகுந்தாற் போல் கதையையும் மாற்றி அமைத்துள்ளார் சித்திக்.

இப்படத்திற்கு முதலில் காவல்காரன் என பெயரிடப்பட்டது. ஆனால் இதற்கு சத்யா மூவீஸ் எதிர்ப்பு தெரிவித்ததால், என்ன பெயர் வைப்பது என்ற கழப்பத்துடனேயே சூட்டிங் நடத்தப்பட்டு வந்தது. பின்னர் ஒரு வழியாக படத்திற்கு காவல் காதல் என்று பெயர் வைக்கப்பட்டது.

இந்த தலைப்பில் விஜய்க்கு திருப்தி ஏற்படாததால், தற்போது காவலன் என 3வது முறையாக படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

இந்த பெயரை இறுதியாகவும், அதிகாரபூர்வமாகவும் சித்திக் அறிவித்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

நுரையீரலில் புகுந்து முளைத்தது பட்டாணி

அமெரிக்காவின் ப்ரூஸ்டர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ரான் ஸ்வீடன்(75). இவருக்கு திடீரென உடல்நிலை மோசமடைந்தது. பசியில்லை, தொடர்ந்து இரும்பிக் கொண்டே இருந்தார்.

ரத்த அழுத்தம், ஆக்ஸிஜன் அளவு வெகுவாக குறைந்தது. நிமோனியா காய்ச்சலால் அவதிப்பட்டார். கேப் காட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ரான் ஸ்வீடனுக்கு எக்ஸ்&ரே எடுக்கப்பட்டது.

அதில் நுரையீரலின் மூச்சுக்குழலில் கட்டியிருப்பது போல் தெரிந்தது.

மேற்கொண்டு நடத்தப்பட்ட சோதனையில், அது கட்டியில்லை பட்டாணி என தெரிந்தது. காய்கறி சேலட் உணவு சாப்பிட்டபோது, புரையேறியதில் எப்படியோ ஒரு பட்டாணி அவரது மூச்சுக் குழலுக்குள் சென்று விட்டது.

அது அங்கேயே பதுங்கி 1 1/2 இன்ச் அளவுக்கு முளைவிட்டிருந்தது. அதை ஆபரேஷன் மூலம் வெற்றிகரமாக அகற்றினர் டாக்டர்கள். தற்போது ரான் ஸ்வீடன் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

பாணா காத்தாடி - விமர்சனம்

மூன்றாம் பிறை, இதயம், பார்த்திபன் கனவு, எம் மகன் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்து அளித்த பிரபல தயாரிப்பாளர் சத்யஜோதி மூவிஸ் டி.ஜி.தியாகராஜனின் லேட்டஸ்ட் தயாரிப்பு,"பாணா காத்தாடி".


நடிகர் முரளியின் மகன் அதர்வா, கதாநாயகனாக அறிமுகமாகிறார். பத்ரி வெங்கடேஷ் இயக்கும் முதல் படம் இது. முதல் மேட்சிலேயே செஞ்சுரி அடிப்பது போல் அதர்வா, பத்ரி வெங்கடேஷ் இருவருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். எந்த இடத்திலும் சிறு தொய்வு இல்லாமல், விறுவிறுப்பாக செல்கிறது படம்.


சென்னையில் ஒரு குடிசை மாற்றுவாரிய குடியிப்பை கதையின் தளமாக அமைத்திருப்பதே வித்தியாசமான முயற்சி. ப்ளஸ் டூ மாணவரான அதர்வாவும், அவரது நண்பர்களும் காத்தாடி விடுவதையே உயிர் மூச்சாக நினைக்கிறார்கள்.


அறுந்து போன காத்தாடியை அதர்வாவும், நண்பர்களும் துரத்தும் போது, ஃபேஷன் டெக்னாலஜி படிக்கும் பணக்கார மாணவியான சமந்தா மீது அதர்வா மோதுகிறான். சமந்தா கல்லூரி ப்ராஜெக்ட் உள்ளடங்கிய பென்-டிரைவ், அதர்வாவிடம் சென்று விடுகிறது. அதை தேடும் சமந்தா, சண்டையில் ஆரம்பித்து பின்பு நல்ல சிநேகிதியாகிறாள். தன் காதலை அவளிடம் அதர்வா சொல்லும் போது எதிர்பாராத நிகழ்ச்சியால் கோபமடையும் சமந்தா அவனை வெறுக்கிறாள்.


அதே பகுதியில் வசிக்கும் லோக்கல் தாதா பிரசன்னா, முன்னாள் எம்.எல்.ஏ.,வை கொல்வதை, அதர்வா நேரில் பார்க்க நேரிடுகிறது. அதைத் தொடர்ந்து, பல பிரச்னைகள், போலீஸ் தேடல் என எதிர்பாராத கிளைமாக்சுடன் படம் முடிகிறது.


இதுதான் முதல் படம் என்றாலும் அதர்வா, இயல்பாக, யூத் புல்லாக நடித்திருக்கிறார். பசங்களுடன் கலாய்க்கம் போதம் சரி, சமந்தாவுடன் பழகும் போதம் சரி முழுமையான ஓ.கே. போலீஸ் ஸ்டேஷனில் அவமானப்படும் போது, தாயுடன் பாசமான காட்சிகளிலும் சரி, மேலும் சிறப்பாக செய்திருக்கிறார். சில காட்சிகளில் சிம்புவை நினைவுபடுத்துகிறார்.


நீண்ட இடைவேளைக்குப் பிறகு பாசமிக்க தாயாக வரும் மெளனிகாவிற்கு ஒரு சபாஷ் போடலாம்.கருணாசின் காமெடி படத்திற்கு நிச்சயம் ஒரு பிளஸ் பாயிண்ட்.


தந்தை டி.பி.கஜேந்திரன் தன் சட்டை பையில் வைக்கம் நூறு ரூபாய் நோட்டுக்களை எப்படியாவது எடுத்துவிட வேண்டும் என்று கருணாஸ் பல தடவை முயல்வதும், ஒவ்வொரு முறையும் ஏமாந்து போவதும், அதற்கு தந்தை தரும் விளக்கமும் புதுமையான நகைச்சுவை. படத்தின் முக்கிய திருப்பமும் கருணாஸால் ஏற்படுகிறது.


ஃபேஷன் டெக்னாலஜி படிக்கிறாள் என்று கதையில் வருவதால் டைரக்டர், சமந்தாவின் ஆடையில் அதிக அக்கரை செலுத்தியிருக்கிறார் போலும். கிளாமரான லேட்டஸ்ட் டிசைன்களில் உடைகள் அணிந்து வரும் சமந்தாவின் நடிப்பு கச்சிதம்.பல புதுமைகளை டைரக்டர் பத்ரி வெங்கடேஷ் இப்படத்தில் செய்திருக்கிறார்.


நண்பர்கள் மற்றும் தாய் சமந்தாவின் காதலைஆதரித்து பிரம்மாண்டமான தியேட்டரின் வெள்ளித்திரையில் தோன்றி பேசுவது, தமிழ் சினிமாவில் புதுமை. குஜராத், ஆமதாபாத் நகரின் நூற்றுக் கணக்கான வீடுகளிலிருந்து பறக்க விடப்படும் ஆயிரக்கணக்கான காத்தாடிகள் வானில் நிரம்பி பறக்கும் காட்சிகள் புதுமை.


படத்தில் ஒரு காட்சியில் நடிகர் முரளி தோன்றுகிறார். " காதல் வந்தால், இதயத்திலே வைச்சுக்காம, தைரியமாக சொல்லுங்க" என்று அதர்வாவிற்கு அட்வைஸ் கொடுப்பார். நீங்க என் பண்றீங்க? என்று அதர்வாவின் நண்பர் கேட்க, முரளி எம்.பி.பி.எஸ்., இறுதி ஆண்டு படிக்கிறேன் என்பார். பதிலுக்கு அந்த நண்பர், எவ்வளவு வருஷமாடா இவர் காலேஷிலேயே படிச்சுக்கிட்டே இருப்பாரு? என்பார். நல்ல நக்கல்.


யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ஐந்து நல்ல பாடல்கள். "குப்பத்து ராஜாக்கள்" பாட்டு ஹிட் ஆகலாம். குஜராத்தில் வரும் காட்சிகளில் மாறுபட்ட பின்னணி இசையை கொடுத்திருக்கிறார்.ஜி.ராதாகிருஷ்ணனின் வசனங்கள்,பல இடங்களில் நச் சென்று இருக்கின்றன. "அழுடா, நல்லவன் தான் அழுவான்" என்று அதர்வாவின் அம்மா கூறுவார்.


ரிச்சர்ட் நாதன் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அதர்வா-பத்ரி வெங்கடேஷ் காம்பினேஷனில் பாணா காத்தாடி உயரத்தில் பறக்கும்.பத்ரி வெங்கடேஷ் திரைப்படக் கல்லூரியில் சில ஆண்டுகள் லெக்சரராக பணி புரிந்திருக்கிறார். எந்த டைரக்டரிடமும் பயிற்சி பெறாமல் முதல் படத்தை இயக்கியிருக்கிறார், பாராட்டுக்கள்.

விஜய்யின் அடுத்த இன்னிங்ஸ்

சமீபகாலமாக நடிகர் விஜய் நடித்த படங்கள் அனைத்தும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. வசூலும் ஏமாற்றத்தை தந்தது.

இதனால் ரசிகர்கள், தியேட்டர் அதிபர்கள் முதல் தயாரிப்பாளர்கள் வரை விஜய் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். கடைசியாக வெளியான சுறா படத்தின் மூலம் தங்களுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாகவும், விஜய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று தியேட்டர் அதிபர்கள் ‌கோரிக்கை வைத்துள்ளனர்.

முன்னணி நடிகர்கள் வரிசையில் இருக்கும் விஜய் இப்போது கதையை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.

தனது ரசிகர்களுக்கு பிடித்தமான கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே நடிப்பது என முடிவு செய்திருக்கும் விஜய், பெரிய இயக்குனர்களின் படங்களாக இருக்கும்படியும் பார்த்துக் கொண்டிருக்கிறார். அடுத்தடுத்த தோல்விக்கு பிறகு புதிய இன்னிங்சை தொடங்கியிருக்கும் விஜய் தற்போது 5 புதிய படங்களில் நடித்து வருகிறார்.

சித்திக் இயக்கத்தில் காவல் காதல், ராஜா இயக்கத்தில் வேலாயுதம், சீமான் இயக்கத்தில் பகலவன், ஷங்கர் இயக்கத்தில் 3 இடியட்ஸ் மற்றும் லிங்குசாமி படம் என பெரிய இயக்குனர்களின் படங்களில் நடித்து வரும் விஜய் இந்த இன்னிங்சில் விட்ட இடத்தை எட்டிப் பிடிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மலையாள படங்களில் கமல்

உலக நாயகன் கமல் தற்போது மலையாளப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஃபோர் பிரண்ட்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை சசி சுரேந்திரன் இயக்குகிறார்.

சமீபத்தில் இவர் இயக்கிய பல மலையாள படங்கள் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. ஃபோர் பிரண்ட்ஸ் படத்தில் ஜெயராம் கதாநாயகனாக நடிக்கிறார். ஜெயசூர்யா, மீராஜாஸ்மின் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் கதை கமலுக்கு மிகவும் பிடித்திருந்ததால், கதை கேட்ட உடனேயே ஓ.கே சொல்லி உள்ளார். கமல் சம்பந்தப்பட்ட காட்சிகளை சென்னையில் படமாக்க உள்ளனர். ஜெயராம், கமலின் நெருங்கிய நண்பர். இவர்கள் இருவரும் சுமார் 23 ஆண்டுகளுக்கு முன் சாணக்யா என்ற மலையாள படத்தில் இணைந்து நடித்தனர்.

அதன் பிறகு இப்போதுதான் மீண்டும் மலையாளப் படத்தில் கமல் நடிக்கிறார். இப்படத்தில் நடிக்க கமல் ஒத்துக் கொண்டதற்கு அவரது நண்பர் ஜெயராமும் ஒரு முக்கிய காரணம். இதுகுறித்து இயக்குனர் சசி சுரேந்திரன் கூறுகையில், கமல் சாருக்கு கதைப் பிடித்திருந்தது.

எனவே உடனடியாக இப்படத்தில் நடிக்க சம்மதித்தார். அவரது கதாபாத்திரம் கதைக்கு திருப்புமுனையாக இருக்கும். கமல் என்னிடம் கூறும்போது, ஜெயராம் எனது நல்ல நண்பர் என்பதால் இதில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன் என்றார். ஆகஸ்ட் 10ம் தேதி சென்னையில் இதற்கான படப்பிடிப்பு துவங்க உள்ளது என தெரிவித்தார்.

வருஷத்துக்கு மூணு படம்! அஜித் அதிரடி

இனி வருஷத்துக்கு 3 படத்தில் நடிக்க நடிகர் அஜித் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இளம் முன்னணி நடிகர் விஜய் வருஷத்துக்கு மூன்று அல்லது நான்கு படங்கள் என நடித்து வருகிறார்.

இதன் மூலம் அவரது ரசிகர்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கொண்டாட்டம்தான். ஆனால் அஜித்தோ... ஆண்டுக்கு ஒரு படம் நடிப்பதே அபூர்வமாகி விட்டது. இதனால் அஜித் ரசிகர்கள் வருத்தப்படுவது என்னவோ உண்மைதான்.

நம்ம தலயும் வருஷத்துக்கு ரெண்டு படமாவது நடிக்க மாட்டாரா? என அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். ரசிகர்களில் இந்த எதிர்பார்ப்பு தலயின் காதுகளுக்கு எட்டி விட்டதோ என்னவோ... இனி வருஷத்துக்கு மூன்று படங்களில் நடிக்கும் முடிவை அதிரடியாக எடுத்து விட்டாராம்.

அடுத்து ஒரு ஆண்டுக்குள் நடித்து முடிக்க மூன்று பட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரது முந்தைய முடிவுகளில் எந்த மாற்றமும் இல்லை என்கிறது அஜித் வட்டாரம். முன்பு கதை கேட்டு ஒப்புக் கொண்டபடியே வெங்கட் பிரபு, கவுதம் மேனன், கிரீடம் விஜய் ஆகிய மூவரது படங்களையும் வரிசையாக நடித்துக் கொடுக்கப் போகிறாராம்.

இதில் வெங்கட் பிரபு, கவுதம் மேனன் படங்களை க்ளவுட் நைன் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய் இயக்குகிற படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கப் போகிறது. இனி தல ரசிகர்களின் காட்டில் சந்தோஷ மழைதான்!.

எக்ஸெல் டிப்ஸ்

கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தும் தொகுப்புகளில், கீபோர்டில் உள்ள சில கீகளை இணைத்துப் பயன்படுத்துவதன் மூலம், பல சுருக்கு வழிகளை நாம் மேற்கொள்கிறோம். இங்கு மவுஸ் மூலம் எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் எப்படி சில சுருக்கு வழிகளை மேற்கொள்வதென்று பார்க்கலாம்.

செல் ஒன்றின் பார்டர்களில் கிளிக் செய்வதன் மூலம் பல்வேறு சுருக்கு வழிகளை மேற்கொள்ளலாம். செல் ஒன்றைத் தேர்ந்தெடுத் தவுடன், எக்ஸெல் அதனைச் சுற்றி பட்டை கோடு ஒன்றை உருவாக்குகிறது. இந்த செல்லின் பார்டர் ஒன்றில் டபுள் கிளிக் செய்தால், எக்ஸெல் செல் தேர்வினை, அந்த பார்டருக்கேற்ற வகையில் நகர்த்துகிறது. இது சற்று குழப்பமாகத் தோன்றலாம். இங்கு தெளிவாகப் பார்க்கலாம்.

1. ஒர்க்ஷீட்டின் நடுவே டேட்டா டேபிளில் செல் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

2. தேர்ந்தெடுக்கப்பட்ட செல்லின் கீழாக உள்ள பார்டரில் டபுள் கிளிக் செய்திடவும். (இங்கு கர்சரைக் கொண்டு சென்றவுடன் பில் ஹேண்டில் எனப்படும் ஸ்வஸ்திக் அடையாள கர்சர் தோன்றும். அதில் கிளிக் செய்யக் கூடாது. சரியாக பார்டரில் மட்டுமே கிளிக் செய்திட வேண்டும்.

இப்போது ஒன்றை நீங்கள் கவனிக்கலாம். எக்ஸெல் அந்த நெட்டுவரிசையில் டேட்டா உள்ள இறுதிச் செல்லைத் தேர்ந்தெடுத்து நிற்பதைப் பார்க்கலாம். இப்படியே மேலே உள்ள பார்டர் கோட்டில் டபுள் கிளிக் செய்தால், மேலே டேட்டா உள்ள செல்லும், வலது மற்றும் இடது புறம் கிளிக் செய்தால், அந்த அந்த பக்கம் உள்ள செல்லும் இருப்பதனைப் பார்க்கலாம்.

இதனைப் பார்த்தவுடன் இது என்ன புதிது? கண்ட்ரோல் கீ அழுத்தி ஏதேனும் ஒரு அம்புக் குறி கீயை கீ போர்டில் அழுத்தினால் ஏற்படும் மாற்றம் தானே இது என எண்ணலாம். அப்படி முழுமையாக இது ஒத்துப் போவது அல்ல.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் செல், ஏற்கனவே டேட்டா உள்ள டேபிளில் இருக்கும் பட்சத்தில் இந்த இரண்டு வழிகளும் ஒரே மாதிரியான விளைவை ஏற்படுத்தும். ஆனால் தேர்ந்தெடுக்கப்படும் செல் டேட்டா டேபிளுக்கு வெளியே இருப்பின், இரண்டிற்குமான விளைவுகள் வெவ்வேறானவையாக இருக்கும்.

எடுத்துக்காட்டாக, டேட்டா டேபிளுக்கு வெளியே, பயன்படுத்தாத ஒரு செல்லினைத் தேர்ந்தெடுக்கவும். டேட்டா டேபிளின் முனையில் டேட்டா உள்ள செல்லுக்கும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் செல்லுக்கும் இடையே காலியாகப் பல செல்கள் இருக்க வேண்டும். நீங்கள் இடது அம்புக் குறியினை கண்ட்ரோல் கீயுடன் சேர்த்து அழுத்தினால், எக்ஸெல் இடது பக்கம் அந்த படுக்கை வரிசையில் உள்ள டேட்டா உள்ள அடுத்த செல்லினைத் தேர்ந்தெடுக்கும்.

அதாவது டேட்டா டேபிளில் அந்த படுக்கை வரிசையில் வலது பக்கம் உள்ள கடைசி செல்லினைத் தேர்ந்தெடுக்கும்.

ஆனால் இடது பார்டர் கோட்டில் மவுஸால் டபுள் கிளிக் செய்தால், டேட்டா உள்ள முதல் செல் தேர்ந்தெடுக்கப்படமாட்டாது. அதற்குப் பதிலாக, எக்ஸெல் டேட்டா உள்ள முதல் செல்லுக்கு அடுத்தபடியாக வலது பக்கம் உள்ள செல்லினைத் தேர்ந்தெடுக்கிறது. அதாவது, டேட்டா டேபிளில் அதே படுக்கை வரிசையில், வலது முனைக்கு முன்னால் உள்ள காலியான செல்லினைத் தேர்ந்தெடுக்கிறது.

இந்த வழிமுறை தொடக்கத்தில் கொஞ்சம் புரியாதது போலத் தோன்றும். சிலமுறை பழகிவிட்டால், இதுவே மிக எளிதான வழியாகத் தோன்றும். ஏனென்றால், கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை பழகப் பழகப் பயன்கள் அதிகம் தான்.
Related Posts with Thumbnails