சிறந்த இணைய உலாவி

இன்டர்நெட் உலாவிற்கு ஏற்ற பிரவுசர் தொகுப்பு எது? இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம், ஆப்பரா அல்லது சபாரி? இவற்றில் எது சிறந்தது?

எதனைக் கொண்டு இதனை முடிவு செய்வது? அம்சங்கள், வசதிகள், வேகம், புதுமையாக உதவிடும் வசதிகள், வளைந்து கொடுக்கும் தன்மை எனப் பலவற்றை நம் பிரவுசர்கள் நமக்குத் தர வேண்டும் என எதிர்பார்க்கிறோம். சில அடிப்படைக் கூறுகள் சிலவற்றில் அதிகமாகவும், சிலவற்றில் குறைவாகவும் உள்ளனவே! ஒவ்வொன்றாக இவற்றை இங்கு காணலாம்.


வெப் பிரவுசர் என்னும் இணைய உலாவித் தொகுப்புகள் தொடக்க காலத்தில் வந்தது போல் இப்போது இருக்க முடியாது. இன்டர் நெட்டின் தளத்தி லிருந்து டெக்ஸ் ட்டை எடுத்து உங்கள் மானிட்டரில் காட்டுவதோடு பழைய காலத்து பிரவு சரின் வேலை முடிந்து விட்டது. இப்போது ஒவ்வொரு வரும் குடி இருக்கும் இடமே இணைய தளங்கள் என்றாகிவிட்டன.

அன்றாடப் பணிகளும் சிறப்பு வேலைகளும் இணையத்தில் தான் நடைபெறுகின்றன. எனவே பிரவுசர்கள் சந்திக்கும் சவால்களும் கடுமையாகிவிட்டன. ஆவணங்களைத் தயார் செய்து திருத்தவும், பயணங்கள் மேற்கொள்ளவும், பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிடவும், மாப்பிள்ளை பெண் பார்க்கவும், திருமண நிச்சயதார்த்தத்தினை அறிவிக்கவும், நடந்த திருமணத்தைக் காட்டவும் என ஒவ்வொன்றுக்கும் ஒரு வெப்சைட் உள்ளது.

இவை எல்லாவற்றிற்கும் ஈடு கொடுத்து ஒரு இணைய உலாவித் தொகுப்பு இயங்க வேண்டியுள்ளது. வேகமாக இயங்கவில்லை என்றால், பயணத்திற்கு டிக்கட் கிடைக்காமல் போய்விடும். சரியாகத் தகவல் போய்ச் சேரவில்லை என்றால், திருமண வரன்கள் மாறிவிடும். எனவே இவற்றின் இயங்குதன்மை அனைத்திற்கும் ஈடு கொடுக்க வேண்டியுள்ளது.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம், ஆப்பரா அல்லது சபாரி – இவற்றில் எதனைத் தேர்ந்தெடுப்பது என்று முடிவெடுப்பது அவ்வளவு எளிய காரியம் இல்லை. அனைத்து பிரவுசர்களுமே நல்ல பயனுள்ள பிரவுசர்களே. ஒன்று மற்றதைக் காட்டிலும் சில விஷயங்களில் சிறந்ததாக இருக்கலாம்.

இணையதளங்களை வடிவமைப்பவர்கள், தங்களின் விருப்பத்திற்கேற்ப அல்லது தாங்கள் பயன்படுத்திக் காட்டும் தொழில் நுட்பத்திற்கேற்ப ஈடு கொடுக்கும் பிரவுசரை அவர்களின் விருப்ப பிரவுசராக தேர்ந்தெடுக்கலாம். ஆனால் இணைய உலாவிற் கெனப் பயன்படுத்துகையில், ஒவ்வொருவருக்கும் சில அடிப்படை விருப்பங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என நாம் எதிர்பார்க்கலாம்.

1.குரோம் பதிப்பு 5:

இணைய தளங்களை வடிவமைக்கும் புரோகிராமர்களுக்கு குரோம் பதிப்பு 5 சிறந்த தோழனாக அமைந்துள்ளது. மேலும் இருக்கின்ற பிரவுசர்களில் மிக வேகமாக இயங்கி, இணையப் பக்கங்களைத் தருவதில், குரோம் முதல் இடத்தில் உள்ளது.

ஜாவாஸ்கிரிப்ட் மற்றும் எச்.டி.எம்.எல். 5 வரையறைகளை மிக சாதுர்யமாகச் சந்தித்து இயக்குகிறது. அத்துடன் அடோப் தந்துள்ள பிளாஷ் தொகுப்பில் உருவான இயக்கங்களையும் சிறப்பாக இயக்குகிறது. இதனால் குரோம் பிரவுசர் பயன்படுத்துவதில் இடையே தடை ஏற்படுவதே இல்லை.

மேலும் குரோம் ப்ளக் இன் புரோகிராம்களை எளிதாகக் கையாள்கிறது. இந்த வகையில் பயர்பாக்ஸ் பிரவுசரைக் காட்டிலும் இது திறமையுடன் செயல்படுகிறது. இதனால் குரோம் பிரவுசருக்கான ப்ளக் இன் புரோகிராம்கள் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டுக் கிடைக்கின்றன.

2. பயர்பாக்ஸ் சோதனைத் தொகுப்பு 4:

நெட்ஸ்கேப் பிரவுசர் சந்தையிலிருந்து மறைந்த போது, அதிலிருந்து பயர்பாக்ஸ் உருவானது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பிற பிரவுசர்கள், இதில் உள்ள வசதிகளைக் கண்டு காப்பி அடிக்கும் அளவிற்கு, சிறப்பாய் உருவானது. தற்போது பயர்பாக்ஸ் தன் பிரவுசர் கிராஷ் ஆகி முடங்கிப் போகாமல் இருக்க ஒரு பாதுகாப்பினை உருவாக்கித் தந்துள்ளது.

இதனால் அப்போது பார்க்கப்படும் அந்த தளம் மட்டுமே முடங்கும். மற்றவற்றுடன் தொடர்ந்து நாம் பணியாற்றலாம். பயர்பாக்ஸ் பிரவுசரின் ஒரு பெரிய பலம், அதற்கென உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக் கான ஆட் ஆன் தொகுப்புகளும், ப்ளக் இன் புரோகிராம்களுமே.

இணைய தள வடிவமைப்பாளர்கள் பயன்படுத்தும் ஜாவா ஸ்கிரிப்ட் குறியீடுகளை வேகமாக செயல்படுத்துவதில் பயர்பாக்ஸ், மற்ற பிரவுசர்களைக் காட்டிலும் பின்தங்கியே உள்ளது என்பது பலரின் குறை. ஆனால், மிக வேகமாக அவற்றை இயக்கும் வகையிலான கட்டமைப்பை விரைவில் தருவதாக மொஸில்ல்லா அறிவித்துள்ளது.

3. மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 சோதனைத் தொகுப்பு:

ஒரு காலத்தில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மட்டுமே அனைவராலும் இணைய உலாவிற்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்தக் காலம் இனி திரும்ப வருமா என்பது கேள்விக் குறியே. இதனை உணர்ந்த மைக்ரோசாப்ட், இழந்த இடத்தைப் பிடிக்க நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில், பல புதிய வசதிகளைத் தரும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

டேப் வழி வசதி பல மாதங்களுக்கு முன் தரப்பட்டது. இதன் காலரியில் இப்போது பல ஆட் ஆன் தொகுப்புகள் கிடைக்கின்றன. பயர்பாக்ஸ் மற்றும் ஆப்பரா பிரவுசர்களில் தரப்பட்ட பல புதிய விஷயங்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 8ல் தரப்பட்டன.

இணையத்தில் உலா வருகையில், வைரஸ் மற்றும் பிற கெடுதல் தரும் புரோகிராம்களிலிருந்து, மைக்ரோசாப்ட் தன்னுடைய பிரவுசர் தொகுப்பு, மற்ற பிரவுசர்களைக் காட்டிலும் சிறந்த பாதுகாப்பினைத் தருவதாக அறிவித்துள்ளது. குரோம் பிரவுசரைக் காட்டிலும் 5 மடங்கு, பயர்பாக்ஸ் பிரவுசரைக் காட்டிலும் 2.9 மடங்கு கூடுதல் பாதுகாப்பு தருவதாக அறிவித்துள்ளது.

குறிப்பாகப் புகழ்பெற்ற நிறுவனங்களின் இணைய முகவரிகளைப் போலக் காட்டிக் கொள்ளும், இணைய முகவரிகளைக் கண்டறிந்து எச்சரிப்பதில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மிகச் சிறந்தது என்று கூறியுள்ளது.

ஆனால் இந்த பெருமையை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்படிக் கூறும் மைக்ரோசாப்ட், தன் பிரவுசரில் உள்ள பல பிழையான இடங்களைச் சரிப்படுத்தும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ப்ளக் இன் புரோகிராம்களுக்கு அதிக இடம் தந்ததால், அவற்றைப் பயன்படுத்தியே பலர் தங்கள் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை அனுப்புகின்றனர்.

இருப்பினும், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடனேயே இன்டர்நெட் எக்ஸ்புளோரரும் இணைந்து வருவதால், இணைய தளத்தை வடிவமைப்பவர்கள், இந்த பிரவுசருக்கேற்றபடியாகவும் தங்கள் தளங்களை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப்படும் பிரவுசராக, இன்னும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தான் உள்ளது.

4. ஆப்பரா 10.6:

ஆப்பராவின் ஒரு பெருமை அதன் அதிவேக இயக்கம் தான். மற்ற எந்த பிரவுசரைக் காட்டிலும் மிக வேகமாக இணையப் பக்கங்களை இறக்கித் தரும் பிரவுசராக இன்றும் உள்ளது. ஆனால் அதிகபட்ச அளவில் டேட்டா கிடைக்கும்போதும், கையாளப்படும்போதும் இந்த பிரவுசர் திணறுகிறது என்று பல ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வேறு வசதிகளில் இது அதிகக் கவனம் செலுத்தாததால், சாதாரணமாக, இணையத்தைப் பயன்படுத்து பவரிடையே இது அவ்வளவாக எடுபடவில்லை.

5. ஆப்பிள் சபாரி 5.0:

லினக்ஸ் உலகத்திலிருந்து பழைய Konqueror பிரவுசரை எடுத்து, அதில் நவீன தொழில் நுட்பத்தினை எக்கச்சக்க அளவில் புகுத்தி, விண்டோஸ் மற்றும் மேக் கம்ப்யூட்டர்களில் இயங்கும் வகையில் ஆப்பிள் நிறுவனம் சபாரி பிரவுசரைக் கொண்டு வந்தது. சபாரி ஒரு நல்ல மாற்று பிரவுசராக இன்று இடம் பெற்றுள்ளது. வேகம், கண்ட்ரோல் மற்றும் பயன்படுத்தப்பட்டுள்ள டெவலப்பர் டூல்ஸ் ஆகியவை நன்றாகவே இயங்குகின்றன.

இணையப் பயனாளர் ஒருவர் விரும்பும் அனைத்துமே, சபாரி பிரவுசரில் நிச்சயம் உண்டு என்று சொல்லும் அளவிற்கு, இதனை உருவாக்கியுள்ளது ஆப்பிள் நிறுவனம். ஆனால் மற்ற பிரவுசர்களிடமிருந்து இதனைத் தனித்துக் காட்டும் வகையில் இதில் எந்த சிறப்பும் இல்லை. அடோப் நிறுவனத்துடன் ஏற்பட்டுள்ள பிரச்னையின் காரணமாக, ஆப்பிள், பிளாஷ் தொகுப்பினைக் காட்டிலும், எச்.டி.எம்.எல்.5 க்கு அதிக இடம் கொடுத்துத் தொடர்ந்து அதனைச் சிறப்பான இடம் பிடிக்க உதவி வருகிறது.

ஒவ்வொரு பிரவுசரும் ஏதேனும் சில தனிச் சிறப்பினையும், சில குறைவான வசதிகளையும் கொண்டுள்ளது. நம் தேவைகளுக்கேற்ப எது வேண்டுமோ அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், ஒரே பிரவுசரை மட்டுமே பயன்படுத்தாமல், ஒன்றுக்கு மேற்பட்ட பிரவுசரைக் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்துப் பயன்படுத்துவதே நமக்கு வசதியாகவும் பயனுடையதாகவும் இருக்கும்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails