விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் குமரன் பத்மநாதனிடம் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ போலீஸôர் முடிவு செய்துள்ளனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சதியின் பின்னணி குறித்து விசாரித்த எம்டிஎம்ஏ (Multi-disciplinary monitoring agency) விசாரணைக் குழு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
குமரன் பத்மநாதன் அண்மையில் மலேசியாவில் கைது செய்யப்பட்டார். இலங்கை ராணுவத்தினர் அவரை ரகசியமாகப் பிடித்து வந்து இலங்கையில் ரகசியமான இடத்தில் சிறை வைத்து விசாரித்து வருகின்றனர்.
ராஜீவ் காந்தி கொலைக்கான சதித் திட்டத்தை உருவாக்கியதில் பத்மநாதனுக்கும் பெரும் பங்கு உள்ளது என்றும் கொலைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நிதி திரட்டுவதிலும் நிதியைப் பட்டுவாடா செய்ததிலும் பத்மநாதனுக்கு முக்கிய பங்கு உள்ளதாகவும் சிபிஐ போலீஸôர் கருதுகின்றனர்.
மேலும் "தேடப்பட்டு வரும் அதி பயங்கர தீவிரவாதி' என்று சர்வதேச போலீஸôரால் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தவர் பத்மநாதன்.
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வாங்கவும் நிதி திரட்டவும் சர்வதேச அளவில் இரு அமைப்புகள் செயல்பட்டு வந்தன. குமரன் பத்மநாதன் தலைமையில் ஒரு அமைப்பும் அய்யன்னா பிரிவும் விடுதலைப் புலிகளின் சர்வதேச தொடர்புக்கு மூளையாகச் செயல்பட்டு வந்தன. மேலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் நிதி திரட்டி புலிகளுக்கு ஆயுதங்களை வாங்கி அனுப்பி வந்ததாகவும் நம்பப்படுகிறது.
குமரன் பத்மநாதன் குறித்து 10 ஆண்டுகளுக்கு முன்னரே சிபிஐயின் எம்டிஎம்ஏ குழு விசாரணையைத் தொடங்கி விட்டது. இக் குழு கடந்த 2002-ம் ஆண்டு நியூசிலாந்து சென்று விசாரணை நடத்தியது.
சிபிஐ அதிகாரி தலைமையிலான எம்டிஎம்ஏ விசாரணை குழுவில் ஐபி, ரா மற்றும் வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் இடம் பெற்றிருந்தனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு குறித்து விசாரணை நடத்திய ஜெயின் கமிஷன், கொலை திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரம் குறித்தும் விசாரணை நடத்தியது.
கமிஷன் உத்தரவுப்படி, எம்டிஎம்ஏ விசாரணைக் குழு பத்மநாதனின் வங்கி பரிமாற்றங்கள் குறித்து தீவிரமாக விசாரித்தது. ஜெர்மனியில் உள்ள அவரது வங்கி பரிமாற்றங்கள் குறித்து விசாரிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது பத்மநாதன் பிடிப்பட்டுள்ளதால் அவரிடம் ராஜீவ் கொலை சதித் திட்டம் மற்றும் நிதி ஆதாரம் குறித்து விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது. இதற்காக இலங்கை அரசிடம் அனுமதி கோர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
0 comments:
Post a Comment