ஏறுமுகத்தில் மும்பை பங்குச் சந்தை

தொடர்ந்து இரண்டாவது நாளாக பங்குச் சந்தை ஏறுமுகத்தைச் சந்தித்தது. வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை மும்பை பங்குச் சந்தையில் 229 புள்ளிகள் உயர்ந்ததைத் தொடர்ந்து குறியீட்டெண் 15,240 புள்ளிகளாக உயர்ந்தது.

தகவல் தொழில்நுட்பம், ஆட்டோமொபைல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்தது குறியீட்டெண் உயர்வுக்குக் காரணமாக அமைந்தது.

பற்றாக்குறையைச் சமாளிக்க அரிசி, கோதுமையை இறக்குமதி செய்யவும் அரசு தயங்காது என மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அளித்த உறுதிமொழியும் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது.

சீன பங்குச் சந்தையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்பட்ட ஏற்றமும் முதலீட்டாளர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்தது.

பொருளாதாரத்தில் ஏற்படும் எத்தகைய மாற்றமும் மிகப் பெரிய நாடான சீனாவில் ஏற்படும் தாக்கத்தைக் கொண்டே அளவிடப்படுகிறது. அந்தவகையில் அந்நாட்டு பங்குச் சந்தையில் ஏற்பட்ட மீட்சி நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

கடந்த சில நாள்களாக அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்வதும் குறைந்தது. இதனால் வீழ்ச்சி ஓரளவு மட்டுப்பட்டது. அன்னிய நிறுவனங்கள் ரூ. 438 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தனர்.

அதேசமயம் உள்நாட்டு முதலீட்டாளர்கள் ரூ. 489 கோடி மதிப்புக்கு பங்குகளை வாங்கியதால் சரிவு ஈடுகட்டப்பட்டதோடு, ஏற்றமும் கண்டது.

தேசிய பங்குச் சந்தையிலும் 75 புள்ளிகள் உயர்ந்ததால் குறியீட்டெண் 4,528 புள்ளிகளாக உயர்ந்தது.

ஹீரோ ஹோண்டா பங்கு விலை 4.84 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி 3.64 சதவீதமும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா 3.58 சதவீதமும், பார்தி ஏர்டெல் 2.86 சதவீதமும், ஏசிசி நிறுவன பங்கு 2.41 சதவீதமும் உயர்ந்தன.

மொத்தம் 1,711 நிறுவனங்களின் பங்கு விலைகள் அதிக விலைக்கு விற்பனையாயின. 958 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

மிக முக்கியமான 30 நிறுவனப் பங்குகளில் எச்டிஎஃப்சி வங்கி பங்கு மட்டும் சற்று சரிவைச் சந்தித்தது

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails