மேடைதான் எனக்கு தாய்! - ரஜினிகாந்த்

மேடை நாடகங்கள்தான் எனக்கு தாய் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

நாடகக் கலையை வளர்க்கும் விதமாக தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பாக கடந்த ஒரு வார காலமாக "நினைவலைகள்' என்ற பெயரில் நாடக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அதில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:

1979 ஆகஸ்டில் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, சிவாஜியின் தலைமையில் இதுபோன்ற ஒரு நாடக விழா நடைபெற்றது.

அப்போது நான் படப்பிடிப்பில் கலந்துகொண்டுவிட்டு, இதேபோன்ற ஒரு மாலை வேளையில் நாடகத்தைப் பார்க்கலாம் என்று வந்தேன்.

ஆனால், வாசலில் இருந்த போலீஸ்காரர் என்னை உள்ளே விடவில்லை. அதன்பிறகு, அங்கிருந்தவர்கள் "இவர்தான் ரஜினி' என்று சொன்ன பிறகே அந்த போலீஸ்காரர் உள்ளே அனுமதித்தார்.

பின்னர் ஒரு ஓரமாக இருந்து அந்த நாடகத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தேன். காலஓட்டத்தில் சில கசப்பான சம்பவங்களும் நடந்துவிடுகின்றன. ஆனால், இப்போது நாடக விழாவில் கலந்துகொள்வது பெருமையாக இருக்கிறது.

எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் "வேலைக்காரன்' படம் வெளியானது. படப்பிடிப்பின் போது, ஒரு காட்சியை நளினப்படுத்த எஸ்.பி. முத்துராமனே எனக்கு அனுமதி அளித்தார். அந்தக் காட்சி நளினப்பட்ட பிறகு அங்கிருந்த வி.கே.ராமசாமி "நீங்கள் மேடையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர்தானே?' என்று கேட்டார். "ஆமாம்' என்றேன்.

இப்போதும் மேடைதான் எனக்கு தாய். கண்டக்டராக இருந்த சமயம், 25 மேடை நாடகங்களில் நடித்திருக்கிறேன். அதைக் கண்ட என் நண்பர்கள், நீ சினிமாவுக்குப் போனால் ஜெயித்துவிடலாம் என ஏற்றிவிட்டதன் காரணமாகவே நான் சினிமாவுக்கு வந்தேன்.

ஆனால், மேடை நாடக அனுபவத்தை வைத்துக்கொண்டு, சினிமாவில் எப்படி வாய்ப்பு கேட்பது என்ற அச்சம் இருந்தது. அதன்பிறகுதான், திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன்.

அந்த திரைப்படக் கல்லூரி எனக்கு ஒரு விசிட்டிங் கார்டுதான். நாடக பாணியிலிருந்து சினிமா பாணிக்கு என்னை மாற்றியவர் கே.பாலசந்தர்தான். என்.டி.ராமராவ், சிவாஜி, ராஜ்குமார் ஆகிய ஜாம்பவான்களின் கடைசி காலங்களில் அவர்களுடன் நான் இருந்திருக்கிறேன்.

அவர்கள் எல்லாம் நாடகப் பிரியர்கள். நான் நாளைப் பற்றி யோசிப்பேன். நாளை மறுநாள் பற்றி யோசிக்க மாட்டேன். எல்லா நாடக கம்பெனிகளிலேயும் கலையை சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். பணம் சம்பாதிக்க சொல்லிக் கொடுக்கவில்லை.

பணம் சம்பாதிக்கும் கலைஞனும் அதை சரியாகக் காப்பாற்றுவதில்லை. பொழுதுபோக்காக ஆரம்பித்த விஷயங்கள், தொழிலாக மாறுவது விளையாட்டும், கலையும்தான்.

இதில் இரண்டிலும் பிழைக்க முடியாதவர்களின் பிழைப்பு, நாய் மாதிரி ஆகிவிடும். இதில் இரண்டிலும் பணம் இருந்தால், பொழுதுபோய்விடும். இல்லையென்றால், ஏண்டா பொழுது விடிந்தது என்றாகிவிடும்.

உடம்புக்கு வயதாவதைத் தடுக்க முடியாது. ஆனால், மனதுக்கு வயதாவதைத் தடுக்கலாம். எதைச் செய்தாலும் முழு மனதோடு செய்ய வேண்டும். தியாகராய நகரில் 18 கிரவுண்ட் நிலம் வைத்துக்கொண்டு, அதை வைத்து ஒன்றும் செய்யாமல் இருக்கிறோம்.

இது குறித்து, சரியான பரிசீலனை செய்தால் வருமானத்தை ஈட்ட முடியும். அதை வைத்துக்கொண்டு நாடக கலைஞர்களை வளர்க்க நம்மால் முடியும்.

நடிகர் சங்கக் கடனை அடைத்த விஜயகாந்த், சரத்குமார், ராதாரவி போன்றோர்களை நான் மறக்கவில்லை என்றார் ரஜினிகாந்த்.

முன்னதாகப் பேசிய நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவி நடிகை அஞ்சலிதேவிக்கும், முதல் பெண் உறுப்பினர் நடிகை எம்.என்.ராஜத்துக்கும் பரிசுகள் வழங்கி கௌரவித்தார் ரஜினிகாந்த்.

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails