வீடியோ கேம்களால் குழந்தைகளிடம் பெருகும் வன்முறை

வீடியோ கேம்கள்தான் இப்போது குழந்தைகளின் உலகம். இவர்களுக்கென்றே விதம் விதமாக கருத்தாக்கங்களை யோசித்து விளையாட்டுகளை தயாரித்து வருகின்றன தகவல் தொழில் நுட்ப வீடியோ கேம் தயாரிப்பு நிறுவனங்கள்.

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வளர்ந்த நாடுகள் மட்டுமல்லாது வளர்ந்து வரும் நாடுகளிலும் இப்போது பல்வேறு வீடியோ கேம்கள் குழந்தைகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளன.

இந்த வீடியோகேம்களில் உள்ள வன்முறைக் காட்சிகளால் குழந்தைகளிடத்தி வன்முறை நடத்தை அதிகரிக்கிறது என்றும், குறிப்பாக பிரிட்டனில் உள்ள குழந்தைகளிடத்தில் வன்முறை உணர்வு அதிகரித்திருப்பதாகவும் ஆஃப்காம் என்ற ஒலிபரப்பு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

வீடியோ கேம்கள் பொதுவாக பழைய பஞ்ச தந்திரக் கதைகள் போல்தான் உள்ளன. ஒரு சாகச நாயகன் பல்வேறு இடையூறுகளைக் கடந்து சென்று தனது இலக்கை எட்டவேண்டும் என்பதாக இருக்கும். இதில் அந்த நாயகன் நடுவில் பலரை வெட்டிச் சாய்த்து முன்னேறிச் செல்லவேண்டும். இந்த வெட்டிச் சாய்த்தல்தான் குழந்தைகளின் பிரதான கவன ஈர்ப்பை பெற்றுள்ளது என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

சமீபத்தில் கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ- 4 (ஜிஏடி- 4) என்ற வீடியோ கேமில் வரும் சாகச நாயகன் கிரிமினல் நிழலுலகத்தினர் பலரை வெட்டிச் சாய்த்து கொள்ளை அடித்துச் செல்வதாக அமைந்துள்ளது.

இது 18 என்ற தரச் சான்றிதழை பெற்றிருந்தாலும், இதில் வன்முறை கொஞ்சம் கூடுதலாகவே இருப்பதாக பிரிட்டன் பெற்றோர்கள் உணர்கின்றனர்.

மேலும் மேலை நாடுகளில் குழந்தைகளின் படுக்கையறையே மல்டி மீடியா மையமாக மாறியுள்ளது என்று இந்த ஆய்வு கூறுகிறது. 12 வயது முதல் 15 வயது வரை உள்ள சிறுவர் சிறுமியர்களின் படுக்கையறையில் குறைந்தது 5- 6 மீடியா கருவிகளாவது உள்ளதாம். இண்டர்நெட், எம்பி3 பிளேயர்கள், டிஜிட்டல் கேமரா மற்றும் மொபைல் ஃபோன் ஆகியவை பெரும்பாலும் உள்ளன என்று கூறுகிறது இந்த ஆய்வு.

இதுபோன்று இருந்தாலும் குழந்தைகள் தங்களை தற்காத்துக் கொள்வார்கள் என்றும் கூட சில பெற்றோர்கள் நினைப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails