மும்பை பங்குச் சந்தை இந்த வாரம் முழுவதும் ஏற்றத்தையே சந்தித்தது. தொடர்ந்து 7 நாள்களாக வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்ததால் குறியீட்டெண் 16 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கடந்த நான்கு மாதங்களில் தொடர்ந்து 7 நாள்கள் பங்குச் சந்தை ஏற்றம் கண்டது கிடையாது.
ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தையில் காணப்பட்ட ஸ்திரமற்ற நிலை உள்ளிட்ட விஷயங்கள் எதுவும் மும்பை பங்குச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை 140 புள்ளிகள் உயர்ந்ததால் குறியீட்டெண் 15,922 புள்ளிகளைத் தொட்டது.
தேசிய பங்குச் சந்தையில் மிகவும் குறிப்பிடத்தக்க அளவான 4,700 புள்ளிகளைக் கடந்ததும் குறிப்பிடத்தக்கது. 44 புள்ளிகள் உயர்ந்ததால் குறியீட்டெண் 4,732 புள்ளிகளாக உயர்ந்தது.
ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட ஸ்திரமான முன்னேற்றம் மும்பை பங்குச் சந்தை உயர்வுக்குக் காரணமானது.
ஆகஸ்ட் மாதத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகும்.
தொடர்ந்து 7 நாள்கள் பங்குச் சந்தை முன்னேற்றம் கண்டதன் மூலம் இந்திய பொருளாதாரம் மிகவும் வலுவாக உள்ளது என்பதை உணர்த்தியது. அத்துடன் தொழில்துறை உற்பத்தி ஜூலை மாதத்தில் 7 சதவீதமாக உயர்ந்ததும் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதை உணர்த்தியுள்ளது.
கட்டுமானத்துறை, ஆட்டோமொபைல், வங்கி, உலோகம், சுத்திகரிப்பு நிறுவனங்களின் பங்கு விலைகள் கணிசமான லாபத்தைச் சந்தித்தன. கட்டுமானத் துறை நிறுவனங்களின் பங்குகள் 3.79 சதவீதமும், ஆட்டோமொபைல் துறை நிறுவனங்களின் பங்குகள் 1.24 சதவீதமும் உயர்ந்தன. வங்கித் துறை பங்கு விலை 1.12 சதவீதமும், எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனப் பங்கு விலை 1.09 சதவீதமும் உயர்ந்தன. அதிகம் விற்பனையாகும் நுகர்வோர் விற்பனைப் பொருள் தயாரிக்கும் நிறுவனங்களின் பங்கு விலைகள் சரிவைச் சந்தித்தன.
மொத்தம் 1,534 நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு விற்பனையாயின. 1,249 நிறுவனப் பங்கு விலை வீழ்ச்சியைச் சந்தித்தன.
வெள்ளிக்கிழமை மொத்தம் ரூ. 6,581.27 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது
0 comments:
Post a Comment