பங்குச் சந்தையில் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை வீழ்ச்சி உச்சத்தை எட்டியது. கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவாக 627 புள்ளிகள் வரை சரிந்ததால் குறியீட்டெண் 14,784 ஆகக் குறைந்தது.
மேலும் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்காக வழக்கமான நேரத்துக்கு முன்னதாகவே பங்குச் சந்தை வர்த்தகம் நிறுத்தப்பட்டது.
இதற்கு முன்னர் கடந்த ஜூலை 26-ம் தேதி ஒரே நாளில் 870 புள்ளிகள் வரை குறைந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு மாதத்தில் இது மிகப் பெரிய சரிவாகும்.
தேசிய பங்குச் சந்தையும் சரிவிலிருந்து தப்பவில்லை. ஒரே நாளில் 200 புள்ளிகள் சரிந்ததால் வீழ்ச்சி 4,379 ஆகக் குறைந்தது.
ஆசியச் சந்தையில் ஏற்பட்ட சரிவும், பொருளாதார தேக்க நிலை மீட்சி எதிர்பார்த்ததை விட மேலும் தாமதமாகும் என்பதுமே வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என்று பங்குச் சந்தை தரகர்கள் குறிப்பிட்டனர்.
அனைத்து நிறுவனப் பங்குகளும் அதிக அளவுக்கு விற்பனையாயின.
கடந்த 7 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு பருவ மழை அளவு குறையும் என்ற அறிவிப்பு காரணமாக பொருளாதார வளர்ச்சி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வட மாநிலங்களில் தற்போது பெய்துள்ள மழை, முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. இத்துடன் ஆசிய பங்குச் சந்தைகளான ஹாங்காங், ஜப்பான், சீனா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட கடும் சரிவின் தாக்கம் மும்பை பங்குச் சந்தையை விட்டுவைக்கவில்லை.
சீனாவின் ஷாங்காய் பங்குச் சந்தை 5.79 சதவீதமும், ஹாங்காங் பங்குச் சந்தை 3.62 சதவீதமும், சிங்கப்பூர் பங்குச் சந்தை 3.25 சதவீதமும், ஜப்பான் சந்தை 3.10 சதவீதமும் சரிவைச் சந்தித்தன.
இவை அனைத்துக்கும் மேலாக அமெரிக்காவின் நுகர்வோர் விற்பனை சந்தை பட்டியல் மிக மோசமாக சரிந்ததும் பங்குச் சந்தை வீழ்ச்சிக்குப் பிரதான காரணமானது.
நாள் முழுவதும் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் தங்கள் வசமிருந்த பங்குகளை விற்றதும் சரிவுக்குக் காரணமானது.
இந்த மாதத்தில் 15 நாள்களில் ரூ. 2,364 கோடிக்கு பங்குகளை அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் விற்பனை செய்துள்ளன.
தாமிரத்தின் விலை சர்வதேச சந்தையில் கடும் சரிவைச் சந்தித்தாதல் ஸ்டெர்லைட் நிறுவனப் பங்கு விலை 6.69 சதவீதம் சரிந்தது. ஆட்டோமொபைல் துறை 4.77 சதவீதமும், எண்ணெய், எரிவாயு நிறுவனப் பங்குகள் 4.42 சதவீதமும், வங்கித் துறை 4.08 சதவீதமும் சரிவைச் சந்தித்தன
0 comments:
Post a Comment