பங்குச் சந்தையில் எழுச்சி

பங்குச் சந்தையில் வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது. இதனால் கடந்த 14 மாதங்களில் எட்டப்படாத அளவுக்கு குறியீட்டெண் 16 ஆயிரம் புள்ளிகளை நெருங்கியது. ஏற்றுமதி சரிவு உள்ளிட்ட விஷயங்களை முதலீட்டாளர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதையே திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகம் நிரூபித்தது.

மும்பை பங்குச் சந்தையில் 253 புள்ளிகள் உயர்ந்ததால் குறியீட்டெண் 15,963 புள்ளிகளைத் தொட்டது. இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 75 புள்ளிகள் உயர்ந்ததால் குறியீட்டெண் 4,711 புள்ளியாக உயர்ந்தது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதிதான் இரு பங்குச் சந்தையிலும் இந்த அளவுக்கு புள்ளிகள் உயர்ந்தன.

ஐரோப்பிய பங்குச் சந்தையில் ஸ்திரமான நிலை நிலவியதால் அன்னிய முதலீட்டாளர்கள் துணிந்து இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்தனர். ஆட்டோமொபைல், கட்டுமானத்துறை நிறுவனங்களின் பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்தன. மாருதி சுஸýகி நிறுவனத்தின் கார் விற்பனை ஜூலை மாதம் உயர்ந்ததைத் தொடர்ந்து இந்நிறுவனப் பங்குகள் 4 சதவீதம் உயர்ந்து ரூ. 1,469.55-க்கு விற்பனையாயின. கட்டுமானத்துறை பங்குகள் 4 சதவீதமும், உலோக நிறுவனப் பங்குகள் 3 சதவீதமும் உயர்ந்தன.

பெரும்பாலான நிறுவனங்கள் முதல் காலாண்டில் லாபம் ஈட்டியதைத் தொடர்ந்து, நடப்பு நிதி ஆண்டில் இந்திய நிறுவனங்களின் செயல்பாடு திருப்திகரமாக இருக்கும் என்ற எண்ணம் உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமின்றி அன்னிய முதலீட்டாளர்கள் மத்தியிலும் ஏற்பட்டதே பங்குச் சந்தை உயர்வுக்குக் காரணமாகும்.

கடந்த 7 வாரங்களில் இல்லாத அளவுக்கு ஸ்டெர்லைட் நிறுவனப் பங்கு விலை உயர்ந்தது. வழக்கம்போல ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்கு விலை 3 சதவீதம் உயர்ந்து ரூ. 2,014.95-க்கு விற்பனையானது.

இன்ஃபோசிஸ் பங்கு 0.58 சதவீதம் உயர்ந்து ரூ. 2,075.85-க்கும், ஹிண்டால்கோ பங்குகள் 8 சதவீதம் உயர்ந்து ரூ. 108.20-க்கும், பிஎச்இஎல் பங்குகள் 5.15 சதவீதம் அதிகரித்து ரூ. 2,342.70-க்கும், டாடா ஸ்டீல் பங்குகள் 4.52 சதவீதம் அதிகரித்து ரூ. 483.60-க்கும் விற்பனையாயின.

மிகவும் முக்கியமான 30 நிறுவனப் பங்குகளில் 26 நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்தன. எச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், எச்டிஎஃப்சி மற்றும் ஐடிசி நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

தொடர்ந்து 3-வது நாளாக ஆசிய பங்குச் சந்தையில் காணப்பட்ட ஏற்றமும் பங்குச் சந்தை உயர்வுக்குப் பிரதான காரணமாகும். ஜூலை 31-ம் தேதி நிலவரப்படி அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 582.12 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளன.

இதேபோல நேரடியாக முதலீடு செய்யும் நிறுவனங்கள் ரூ. 316.11 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளன.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails