கணக்கு வாத்தியார் ராஜேசுக்கு இருமகன்கள். மூத்தவர் ஸ்ரீமன், பொதுப்பணித்துறையில் என்ஜினீயர் வேலை பார்க்கிறார். இளைய மகன் தீபக் படிப்பு வராமல் ஆட்டோ ஓட்டுகிறார். ஸ்ரீமன் மேல் அக்கறை காட்டும் ராஜேஷ் தீபக்கை வெறுத்து தண்டச்சோறு என அவமதிக்கிறார்.
வில்லன் கோஷ்டி காண்டிராக்ட் பைலில் கையெழுத்திடுமாறு ஸ்ரீமனை நிர்ப்பந்திக்கிறது. அவர் மறுக்கிறார். தலைவாசல் விஜய் மகளுக்கும் ஸ்ரீமனுக்கும் திடீர் திருமணம் நடக்கிறது. வில்லன்கள் போலி கையெழுத்து மூலம் காண்டிராக்ட் ஒப்பந்தம் தயாரிக்கின்றனர். அதை எதிர்த்து கோர்ட்டுக்கு போகும் ஸ்ரீமன் கொல்லப்படுகிறார்.
கொலையாளிகளை தீபக் கண்டுபிடிக்க முயற்சிக்கும்போது அண்ணனுக்கு இன்னொரு மனைவியும் குழந்தையும் இருப்பது தெரிகிறது. அவர்களை வீட்டின் எதிரில் குடிவைக்கிறார். இருவரையும் இணைத்து சந்தேகிக்கும் ராஜேஷ் தந்தை மகன் உறவை முறிக்கிறார். தீபக்கை காதலிக்கும் நிக்கோலும் வெறுப்புகாட்டி பிரிகிறார்.
அண்ணனை கொன்றவனை பழி தீர்த்து குடும்பத்தோடு தீபக் எப்படி சேருகிறார் என்பது கிளைமாக்ஸ்...
தந்தையின் கோபத்தை தாங்கி நேர்மையாக ஆட்டோ ஓட்டி பிழைக்கும் இளைஞர் கேரக்டரில் கச்சிதமாக பொருந்துகிறார் தீபக்... நண்பன் செய்யும் தவறுகள் சந்தர்ப்ப சூழலில் தன் தலையில் விழுந்து தந்தையிடம் வாங்கி கட்டும்போது பரிதாபப்பட வைக்கிறார்.
கொலையுண்ட அண்ணன் உடலை கட்டிப்பிடித்து கதறுவது... நிர்க்கதியான அண்ணி மற்றும், குழந்தையை அழைத்து வந்து தன்னோடு தங்க வைப்பது... அதனால் வரும் பழி சொற்களை தாங்கிக் கொள்வது... என அனைத்திலும் தேர்ந்த நடிப்பு முதிர்ச்சி காட்டுகிறார்.
நிக்கோல் காதலன் மேல் சந்தேகித்து வேறு ஒருவரை மணக்க திருமண அழைப்பிதழ்கள் அச்சிட்டு தெருவோரவாசிகளுக்கு விநியோகித்து எரிச்சல் காட்டுவது அழுத்தம். கார்த்திகா அழுகை அண்ணியாக வருகிறார். கணக்கு வாத்தியாராக வரும் ராஜேஷ் கேரக்டரை வலுவாக பதிவு செய்கிறார். ஸ்ரீமன் பாசக்கார அண்ணனாக பளிச்சிடுகிறார். கஞ்சா கருப்பு சிரிக்க வைக்கிறார். பொன்வண்ணன், ஆனந்த் வில்லத்தனம் செய்கின்றனர்.
குடும்ப பாங்கான கதையை கச்சிதமாக செதுக்கியுள்ளார் இயக்குனர் சதீஷ் சங்கர், தீபக்கை நல்லவர் என நிரூபிக்க அண்ணணுக்கு இருவரை மனைவிகளாக்குவது பிறகு விதவைகளாக்கி அவர்களையே கதை சுற்றி வருவது வலுவில்லாத காட்சி தொகுப்பு, ஸ்ரீகாந்த் தேவா இசை, அன்புமணி ஒளிப்பதிவு பக்கபலம்.
0 comments:
Post a Comment