முதன்மை பங்கு வெளியீடுகளில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தியதால் பங்குச் சந்தை கிடுகிடுவென சரிவைச் சந்தித்தது. வாரத்தின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை 354 புள்ளிகள் சரிந்து குறியீட்டெண் 15,160 புள்ளிகளானது.
இதேபோல தேசிய பங்குச் சந்தையிலும் 101 புள்ளிகள் குறைந்ததில் குறியீட்டெண் 4,481 புள்ளிகளானது.
இரண்டாம் நிலை பங்குகளில் முதலீடு செய்வதிலிருந்து விலகி முதன்மை பங்குகளில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தொடங்கினர். வெள்ளிக்கிழமை விற்பனைக்கு வந்த என்எச்பிசி பங்குகளை வாங்குவதற்காக பெரும்பாலானோர் தங்கள் வசமிருந்த நிறுவனப் பங்குகளை விற்றனர்.
என்எச்பிசி பங்கு விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே அந்நிறுவனம் எதிர்பார்த்த அளவைக் காட்டிலும் இரண்டு மடங்கு வசூலானது.
பிற்பகலில் 3.22 மடங்கு அளவு முதலீடு செய்திருந்தனர்.
அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை ஒத்திப் போட்டனர். அமெரிக்காவில் வேலைவாய்ப்பு நிலவரம் குறித்த அறிக்கை வெளியான பிறகு அதற்கேற்ற வகையில் முதலீடுகளை திட்டமிடலாம் என்கிற ரீதியில் அன்னிய நிறுவனங்கள் தயக்கம் காட்டின.
இதனால் மும்பை பங்குச் சந்தையில் சரிவு தவிர்க்க முடியாததானது.
30 முன்னணி நிறுவனங்களில் என்டிபிசி, டாடா ஸ்டீல், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே லாபமீட்டின. மற்றவை அனைத்தும் சரிவுச் சுழலில் சிக்கின. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கு 2.47 சதவீதம் சரிந்தது.
இன்ஃபோசிஸ் நிறுவனம் 0.62 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி பங்கு 3.62 சதவீதமும், பாரத ஸ்டேட் வங்கி பங்கு 3.08 சதவீதமும் சரிவைச் சந்தித்தது. இந்த நான்கு நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி 33 சதவீத அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியது.
நுகர்வோர் பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் பங்கு விலை 3 சதவீதமும், ஆட்டோமொபைல் துறை நிறுவனங்களின் பங்கு விலை 3.87 சதவீதமும் சரிவைச் சந்தித்தன.
டாடா மோட்டார்ஸ் பங்கு 0.91 சதவீதம் சரிந்து ரூ. 414.50-க்கு விற்பனையானது.
கட்டுமான நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்கு விலைச் சரிவு மிகப் பெரும் தாக்கத்துக்கு வழிவகுத்தது.
0 comments:
Post a Comment