தமிழகத்தில் 250 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி வலியுறுத்தினார்.
வனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயல்பாடு குறித்து மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி திங்கள்கிழமை பேசியதாவது:
அண்ணா பல்கலைக்கழகத்தில் தட்பவெப்பநிலை மாற்றம் குறித்த ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டால் ஏழைகள்தான் முதலில் பாதிக்கப்படுகின்றனர். உதாரணத்துக்கு, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் முதலில் ஏழைகள் பாதிக்கப்படுவதுடன் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளில் நாடு முழுவதும் 700 சதுர கி.மீ. காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. எவ்வளவுதான் நாம் மரங்களை நட்டாலும், இயற்கையான காடுகளுக்கு அவை மாற்றாக அமையாது.
ரயில்வே பாதுகாப்புப் படை இருப்பது போல இளைஞர்களைக் கொண்டு வனப் பாதுகாப்புப் படை அமைக்கப்பட வேண்டும்.
மின்னணு, மருத்துவக் கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியாக இந்தியாவை வெளிநாடுகள் மாற்றுவதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது. இவற்றுக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்றார் கனிமொழி
0 comments:
Post a Comment