யாருக்கு முன்னுரிமை?

எம்.பி.பி.எஸ். படிப்பில் ஏற்கெனவே சேர்ந்துள்ள மாணவர்களுக்கு, இந்த மாத இறுதியில் நடைபெறும் 2-ம் கட்ட கவுன்சலிங்கின்போது முன்னுரிமை அளிக்கப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி தெரிவித்தார்.

முதல் கட்ட கவுன்சலிங்கின்போது தாங்கள் விரும்பிய மருத்துவக் கல்லூரி கிடைக்காத பல மாணவர்கள், பிற மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். உதாரணமாக மதுரை அரசு மருத்துவக் கல்லூரி கிடைக்காத மாணவர்கள், தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.

இந்த மாத இறுதியில் கட் - ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் இரண்டாம் கட்ட எம்.பி.பி.எஸ். கவுன்சலிங் அட்டவணை அறிவிக்கப்படும்போது, விரும்பும் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாமல், ஏற்கெனவே பிற கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு வகுப்புவாரி காலியிடத்தைப் பொருத்து முன்னுரிமை அளிக்கப்படும்.

சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்திசேர்ந்துள்ள மாணவர்களுக்கும், அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏற்படும் காலியிடத்தைப் பொருத்து முன்னுரிமை அடிப்படையில் இடம் அளிக்கப்படும்.

சான்றிதழ் தேவை: ஒரு அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து, தாங்கள் விரும்பும் அரசு மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்டுள்ள காலியிடத்துக்குச் செல்ல விரும்பும் மாணவர்கள் சான்றிதழ் பெற வேண்டும்.

ஏற்கெனவே சேர்ந்துள்ள மருத்துவக் கல்லூரியிலிருந்து படிப்பில் சேர்ந்ததற்கான சான்றிதழை ("போனஃபைட் சர்ட்டிபிகேட்') பெற்று, 2-ம் கட்ட கவுன்சலிங்கில் கலந்து கொள்ள சென்னைக்கு வர வேண்டும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி தெரிவிக்கிறார்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails