"எந்திரன்' படத்தின் படப்பிடிப்புப் பணிகள் 85 சதவீதம் முடிந்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
இயக்குநர் ஷங்கரின் "எஸ் பிக்ஸர்ஸ்' தயாரிக்கும் "ஈரம்' படத்தின் சி.டி., டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சி.டி. மற்றும் டிரெய்லரை வெளியிட, இயக்குநர் சசிகுமார் பெற்றுக் கொண்டார். விழாவில், ரஜினிகாந்த் பேசியதாவது:
""எந்திரன்' படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் எந்த சினிமா விழாக்களிலும் கலந்து கொள்வதில்லை. சினிமா விழாக்களில் கலந்து கொள்ள ஏராளமான அழைப்புகள் வந்த போதிலும் அவற்றைத் தவிர்த்து வந்தேன். எந்திரனை விரைவில் முடித்தாக வேண்டும் என்பதுதான் காரணம். "எந்திரன்' 85 சதவீதம் முடிந்து விட்டது.
"ஈரம்' படத்தின் சி.டி மற்றும் டிரெய்லரை நீங்கள்தான் வெளியிட வேண்டும் என ஷங்கர் கேட்டுக் கொண்டவுடன் உடனே ஓ.கே. சொல்லிவிட்டேன். அதற்குக் காரணம் ஷங்கர் அந்த அளவிற்கு என்னை ஈர்த்து இருக்கிறார்.
"சிவாஜி' மற்றும் "எந்திரன்' ஆகிய படங்கள் மூலம் ஷங்கர் எனும் ஒரு நல்ல நண்பர் கிடைத்துள்ளார். நல்ல மனிதரை, சிறந்த உழைப்பாளியை, சிந்தனைவாதியை, தேடல் ஆர்வம் உள்ளவரை நண்பராகப் பெற்றதில் மகிழ்ச்சி.
"இம்சை அரசன் 23-ம் புலிகேசி' கமர்ஷியல் வெற்றி பெறும் என்றார். "வெயில்' விருது பெறும் என்றார். "கல்லூரி' மக்கள் ஏற்றுக் கொண்டால் "ஹிட்' என ஒவ்வொரு படத்தையும் ஷங்கர் கணித்து சொல்வார். இப்போது "ஈரம்' படமும் ஹிட்டாகும் என சொல்லியிருக்கிறார். அது போலவே அமையும்.
சென்னை வி.ஜி.பி. கார்டன் திறப்பு விழாவில் நடிகர் எம்.ஆர்.ராதா பேசுகையில், ""விழாவில் பேசியவர்கள் எல்லாம் வி.ஜி.பி. சகோதரர்களைப் பார்த்து நன்றாக உழைத்ததால் இந்த நிலைக்கு வர முடிந்திருந்திருக்கிறது' என்றார்கள். அப்படியானல் நாங்கள் எல்லாம் உழைக்கவில்லையா? அவர்கள் மட்டும்தான் உழைத்தார்களா? என்ன ஒரு வித்தியாசம், நாங்கள் மாடு மாதிரி உழைக்கிறோம். அவர்கள் மனிதர்கள் மாதிரி உழைக்கிறார்கள்.
நானும் எங்கேயோ 100 ஏக்கர் நிலம் வாங்கி வைத்திருக்கிறேன். அது ஒன்றுக்கும் பயன்படாத காட்டுப் பகுதி. வி.ஜி.பி. சகோதரர்கள் வாங்கியிருப்பதோ கடற்கரைக்கு அருகில்...புத்திசாலித்தனமாக உழைத்துள்ளார்கள்'' என்றார்.
அது போலத்தான் சினிமாவும். உழைத்தால் மட்டும் போதாது. புத்திசாலித்தனமாக உழைக்க வேண்டும். ஈரம் படத்தில் புத்திசாலித்தனமான உழைப்பு இருக்கிறது'' என்றார் ரஜினிகாந்த்.
இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம. நாராயணன், வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரன், ஈரம் படத்தின் இயக்குநர் அறிவழகன், இயக்குநர்கள் மிஸ்கின், வசந்தபாலன், கே.வீ.ஆனந்த், நடிகர்கள் ஆதி, நந்தா, நடிகை சிந்துமேனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
0 comments:
Post a Comment