பங்குச் சந்தையில் தொடரும் ஸ்திரமற்ற நிலை

பங்குச் சந்தையின் நிலவரம் இனி எவராலும் கணிக்கவே இயலாது என்ற சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை சரிவிலிருந்து மீண்ட பங்குச் சந்தை புதன்கிழமை மீண்டும் சரிவைச் சந்தித்தது. 226 புள்ளிகள் வீழ்ச்சியடைந்ததால் குறியீட்டெண் 14,809 புள்ளிகளாகக் குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் 64 புள்ளிகள் குறைந்தால் குறியீட்டெண் 4,394 புள்ளிகளானது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக கிராமப்புறங்களில் வாங்கும் சக்தி குறையும் என்ற அச்சமும் சரிவுக்குக் காரணமாக அமைந்தது.

சீன பங்குச் சந்தை உள்பட பெரும்பாலான ஆசிய பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தது மும்பை சந்தையில் எதிரொலித்தது. இதேபோல அமெரிக்க பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவும் மும்பை சந்தையில் எதிரொலித்ததாக பங்குத் தரகர்கள் குறிப்பிட்டனர்.

நாட்டின் வேளாண் சாகுபடி பரப்பில் பாதியளவு வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் குறிப்பிட்டதும் சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. அத்துடன் பருவ மழைக் குறைவால் வேளாண் உற்பத்தி பாதிக்கப்பட்டு பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிப்புக்குள்ளாகும் என திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா குறிப்பிட்டதும் முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை உருவாக்கியுள்ளது.

அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் மிக அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்தனர். திங்கள்கிழமை மட்டும் ரூ. 973.80 கோடிக்கு பங்குகளை விற்பனை செய்தனர். செவ்வாய்க்கிழமை இது ரூ. 721.84 கோடியாக இருந்தது.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை அதிகரித்ததால் சரிவு ஓரளவு கட்டுக்குள் இருந்தது.

ஏசிசி நிறுவனப் பங்குகள் 5.08 சதவீதம், ரிலையன்ஸ் இன்பிராஸ்டிரக்சர் 4.86 சதவீதம், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 4.38 சதவீதம், கிராஸிம் 4.20 சதவீதம், டாடா ஸ்டீல் பங்குகள் 3.93 சதவீதம் அளவுக்குச் சரிவைச் சந்தித்தன.

மொத்தம் உள்ள 30 முக்கிய நிறுவனங்களில் 3 நிறுவனங்களின் பங்கு விலைகள் அதிக விலைக்கு விற்பனையானது. மற்ற நிறுவனப் பங்கு விலைகள் கணிசமான சரிவைச் சந்தித்தன.

எண்ணெய், எரிவாயு நிறுவனங்களின் பங்கு விலைகளும் சரிவிலிருந்து தப்பவில்லை. ஆட்டோமொபைல், உருக்கு உள்ளிட்ட நிறுவனங்களின் பங்கு விலைகளும் வீழ்ந்தன

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails