கிளி மூக்கு சிவப்பான கதை

கிராமத்தில் எஞ்சியிருக்கும் எங்கள் காற்று, கலாசாரம், கண்ணீர் துளிகள், எங்களின் களிப்புகள் இவற்றின் மேல் மாநகரத்தின் கறுத்த நிழல்கள் தன் தடயங்களை விட்டு சென்று விட்டன.

என் கிராமத்தின் கடைசி துளி சத்தம் ஓய்ந்து, ஆளற்ற தெருக்கள் எல்லாம் ஆட்டுக் குட்டிகளின் சிறு தூக்கத்தால் அமைதி கொள்கிறது. அவ்வப்போது அவற்றின் முணுமுணுப்புகள் மட்டும் தெருக்கள் விழித்திருக்கிறது என்பதைப் பறை சாற்றுகிறது.

சிறுநடை போடுகிறேன். லேசாக தூறல். மாப்பிள்ளை, மச்சான் என முறை வைத்து அழைக்கும் பள்ளி நண்பர்கள் "என்ன சினிமாக்கார மாப்ளே தூக்கம் வரலியா' என்கிறார்கள். "நல்லாரூக்கியா மாப்ளே' என அவர்களிடம் பேச்சு கொடுக்கிறேன். "ஏதோ இருக்கமடா நீதான் பட்டணத்துக்குப் போய்ட்டு எப்பதாவதுதான் ஊருக்கு வர, எங்களையெல்லாம் மறந்து விடாதடா சினிமா மாப்ள'.. என சொல்லி தூங்க போகிறார்கள்.

தன்னந்தனியாய் தெருவில் நடக்கிறேன். மழை நின்ற பிறகும் மரத்திலிருந்து விழும் மழைத் துளிகளைப் போல் கிராமத்தின் நினைவுகளில் சில ஆனந்தமாய் இருக்கிறது.

ஜே.கே.கே. ரங்கம்மாள் பள்ளி. ஈரோட்டின் குமாரபாளையத்தில் இருக்கும் ஓர் அழகான பள்ளி. எங்கள் சுற்றுப்புறம் முதல் வகுப்பில் இருந்து ப்ளஸ் டூ வரை அங்குதான் படிக்கும்.

அப்போது அவளும் நானும் ஆறாம் வகுப்பில் இருந்து ப்ளஸ் டூ வரை ஒரே வகுப்பில் படித்தோம். அவள் அழகி. இந்த உலகத்தில் இதுவரைக்கும் பார்த்த பெண்களில் அவள்தான் அழகி என அடித்துச் சொல்லுவேன். நான் அவளையே பார்த்துக் கிடப்பேன். அவ்வப்போது என்னைப் பார்த்து சின்னதாகச் சிரித்துவிட்டு போவாள் அந்தப் பாவாடைச் சிறுமி.

அவளை முன்னிறுத்தி எனக்குள் நிறைய கிளைக் கதைகள் உருவாகியிருந்தன. அவற்றில் எனக்குப் பிடித்த கதையைச் சொல்கிறேன்.

எங்கள் ஊரில் கிளிகள் முழுக்க முழுக்க பச்சை நிறத்திலே இருந்தன. மூக்குகூட சிவப்பு கிடையாது. அதுவும் பச்சை நிறம்தான். ஒருநாள் கிளி கூட்டம் ஒன்று அவளின் வீட்டுத் தோட்டத்தின் பூ மரம் ஒன்றில் அமர்ந்தபடி கதை பேசிக் கொண்டிருக்கிறது.

அவள் தன் பதினைந்தாவது அகவைக்கு அடியெடுத்து வைத்த புண்ணிய வருடம் அது. அப்போதெல்லாம் கிராமத்தின் குளியலறை, மேலே கூரையற்று திறந்த வெளியில் இருக்கும். அவள் குளித்துக் கொண்டிருக்கிறாள். கிளிகளுக்கும் கண்கள் உண்டு அல்லவா! அவளின் அழகில் அவற்றின் சிறகுகள் தந்தியடிக்க தொடங்குகிறது. அவளின் உதடுகள் சிவந்த கனிகளைப் போல் இருக்க, புதுவிதமான கனி என்று நினைத்து கிளிகள் அவற்றை அலகுகளால் கொத்திப் பார்க்கின்றன. அன்று முதல் அவற்றின் மூக்குகள் சிவந்து விட்டன. இப்படி காக்கைகள் கறுப்பான கதை, கொக்குகள் வெள்ளையான கதை, வானவில் உடைந்து விழுந்த கதை என நிறைய கதைகளை நான் உருவாக்கி நினைத்து கொண்டே சைக்கிளில் பறப்பேன்.

நானும் அவளும் அப்போது ப்ளஸ் டூ படித்துக் கொண்டிருந்தோம். காலையில் எழுந்ததும் அவளைப் பார்க்க போகிறோம் என்ற ஆவல்தான் மனம் முழுவதும் குடி கொண்டிருக்கும். பள்ளியில் சைக்கிள் விடப்படும் இடத்தில் சைக்கிளை விட்டு விட்டு அவள் வரும் தேவூர் பஸ்ஸýக்காகக் காத்துக் கிடப்பேன். பஸ்ஸில் இருந்து இறங்கிய அந்தப் பதுமை ஒரு மெல்லிய புன்னகையைச் சிந்தி விட்டு வகுப்புக்கு ஓடிவிடும்.

அப்போது தேர்வுகள் நெருங்கினாலும் எனக்கு கவலையில்லை. நான்தான் மழைக்கு ஒதுங்கிய மக்கு பிள்ளையாச்சே. அவள் வாராத நாள்களில் பள்ளிக்கு கட் அடித்துவிட்டு ஊரின் மத்தியில் திரிவேணி சங்கமம் அணைக்குப் போய் விடுவேன்.

என்னைப் போலவே படிப்பில் நாட்டம் இல்லாதவர்களின் சரணாலயம் அது. பள்ளியின் மணியோசை கேட்ட பின்னர் மற்ற மாணவர்களோடு பள்ளி தந்த சோர்வுடன் வீட்டுக்குத் திரும்பிவிடுவேன். கவலை இல்லாத உலகம் அது.

வெள்ளிக்கிழமைகளில் அவள் பள்ளிக்குப் பக்கத்தில் இருக்கும் கோவிலுக்குப் போவாள் அப்போது நான் பிள்ளையாருக்குப் பக்தனாகிவிடுவேன். பிள்ளையாரின் கணக்கில் என் வேண்டுதலான நூற்றியெட்டு தேங்காய் அப்படியே இருக்கிறது. ஒரு காலமும் அந்த தேங்காய்கள் உடைக்கப் போவதில்லை என பிள்ளையாருக்குத் தெரிந்திருக்கும். அவள் கோவிலைச் சுற்றி வந்து நமஸ்கரிப்பாள். நானும் அவ்வாறே செய்வேன். கோவிலின் கற்பூர வெளிச்சத்தில் அவளைப் பார்க்கும் போது கண்களை மூடி கொள்வேன். ஆயிரம் மின்னல்களின் ஒரு நொடி தரிசனம் அல்லவா அது!.

தேர்வுகளில் நான் தேர்ச்சி பெறுவதற்கு அவள்தான் காரணம். அந்த நேரத்தில் மட்டும் படித்து விட்டு தேர்வு அறைக்குப் போனால் என் பேனா நிச்சயமாக நொண்டி அடிக்கும். அப்போதெல்லாம் அவள்தான் எனக்கு பேப்பர் காட்டுவாள். தேர்வு அறைகள் மாறுகிற போதெல்லாம் ஜன்னலுக்கு வெளியே நின்று ஒரு மார்க் கேள்விக்கான பதிலை சைகையால் காட்டி விடுவாள். அதையும் சில நேரங்களில் தவறாக எழுதி விட்டு அவளிடம் குட்டு வாங்கும் மக்கு பிள்ளை நான்.

ஒரு நாள் திடீரென எனக்கு கல்யாணம் எனச் சொல்லி பத்திரிக்கை கொடுத்தாள். ஒரே இரவில் உலகமே அழிந்து விட்டது மாதிரி ஒரு உணர்வு. நான் சுவாசித்த, நேசித்த பெண் என்னைவிட்டு பார்க்க முடியாத அளவிற்கு வெகு தூரம் செல்லப் போகிறாள் என்பதை நினைத்து பார்க்கவே பயமாக இருந்தது. அவள் என்னை பார்த்த கடைசி பார்வை மட்டும் இன்னும் நிழலாடிக் கொண்டிருக்கிறது.

நானும் பள்ளிக்குச் செல்வதை நிறுத்தி விட்டேன். சில காலங்கள் கழித்து சினிமாவில் ஜெயித்த பிறகு ஒரு நாள் ஊரில் இருக்கும் தியேட்டர் ஒன்றுக்கு "சின்ன கவுண்டர்' படம் பார்க்க போயிருந்தேன். அப்போது "ஜெகன் ஜெகன்' என ஒரு பழக்கப்பட்ட குரல் என்னை திரும்பி பார்க்க சொல்லுகிறது. என்னால் பெரிதும் நேசிக்கப்பட்ட அவள் தன் கணவருடன் நிற்கிறாள். கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை என்பார்களே அது போன்ற ஓர் உணர்வு. அவள் கணவர் அருகில் என்னையும் உட்காரச் சொல்லி, படம் பார்க்கச் சொல்லுகிறாள். நானும் உட்கார்ந்து படம் பார்க்கிறேன். படத்தின் ஒரு காட்சியும் எனக்கு நினைவில்லை.

இப்போதும் இரட்டை ஜடை வைத்த நகரத்துப் பள்ளி பெண்களை என் கண்கள் திரும்பி பார்க்கிறது. இப்போதும் என்னுடைய ஒவ்வொரு புதுப் பேனாவும் அவள் பெயரைதான் எழுதி பார்க்கிறது. இனி எப்போதும் பேருந்தின் ஜன்னலோர இருக்கைகள் எல்லாம் அவளைத்தான் ஞாபகப்படுத்தும்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails