ஏ.வி.எம். ஸ்டுடியோவில் தீ

சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது.

இதில் பல கோடி மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய் நடிக்கும் வேட்டைக்காரன் படத்தின் படப்பிடிப்பு ஏ.வி.எம். ஸ்டுடியோவின் 7-வது தளத்தில் பிரத்யேக செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வந்தது.

இதற்கு அடுத்த 6-வது தளத்தில், டி.வி. நிகழ்ச்சி ஒன்றுக்கான படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு 7-வது தளத்தில் வேட்டைகாரன் படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. படப்பிடிப்பு முடிந்து நள்ளிரவில் அனைவரும் சென்று விட்டனராம்.

அதிகாலை 7-வது தளத்தில் இருந்து பெருமளவில் புகை வெளியேறியதாம். தீ விபத்து ஏற்பட்டதைக் கண்ட காவலர்களும் மற்ற செட்களில் இருந்த ஊழியர்களும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் தீ 6-வது தளத்துக்கும் பரவியது.

வடபழனி, போரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்ளில் இருந்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களும், குடிநீர் லாரிகளும் விரைந்து வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டன. சுமார் 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதில் 6, 7-வது தளங்களில் போடப்பட்டிருந்த செட்களும், பல கோடி ரூபாய் மதிப்பிலான கருவிகளும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

7-வது தளத்தில் வேட்டைகாரன் படப்பிடிப்பு முடிந்தவுடன் அங்கு சில பெரிய விளக்குகள் எரிந்த நிலையிலேயே வைக்கப்பட்டு இருந்ததாகவும், இதில் ஏற்பட்ட அதிக உஷ்ணம் காரணமாக செட் போட பயன்படுத்தப்பட்டிருந்த தெர்மாகோல் உள்ளிட்ட பொருள்களில் தீ ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails