ராஜீவ் காந்தி கொலை-3

ராஜீவ் காந்தி கொலை உலகம் முழுவதிலும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்தக்கொலையில் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது தமிழக போலீசாருக்கு பெரிய சவாலாக இருந்தது. இந்த கொலையில் துப்புதுலக்கும் பொறுப்பு "ஐ.ஜி." கார்த்திகேயன் தலைமையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் துப்பு துலக்கிய விதம் மர்மப்பட மன்னன் ஹிட்ச்ஹாக் படங்களையும் மிஞ்சுவதாக இருந்தது.

ராஜீவ் காந்தியின் நிகழ்ச்சிகளை அரிபாபு என்ற போட்டோகிராபர் படம் எடுத்துக் கொண்டிருந்தார். குண்டு வெடிப்பில் அவர் இறந்து போனாலும் அவருடைய கேமரா சேதம் அடையாமல் கிடந்தது.

அந்த கேமராவை போலீசார் கைப்பற்றி உள்ளே பதிவாகியிருந்த படங்களை பிரிண்ட் போட்டுப் பார்த்தனர். ஒரு படத்தில் லதா கண்ணன், கோகிலா ஆகியோருக்கு நடுவே கையில் சந்தன மாலையுடன் மர்மப்பெண் நின்று கொண்டிருந்தாள். அடுத்த படத்தில் சிறுமி கோகிலாவை ராஜீவ் பாராட்டிய காட்சி பதிவாகியிருந்தது. அருகே அந்த மர்மப்பெண்ணின் தலை தெரிந்தது.

குண்டு வெடிப்பில் ராஜீவ் காந்தியுடன் மேலும் 16 பேர் பலியாகி இருந்தனர். ஒரு பெண் தலை வேறாகவும் உடல்கள் பல துண்டுகளாகவும் சிதறிக் கிடந்தாள். சிதறிய பகுதிகளை சேர்த்து வைத்துப் பார்த்தபோது அவள்தான் அந்த மர்மப்பெண் _மனித வெடி குண்டாகப் பயன்படுத்தப்பட்டவள் என்பது தெரிந்தது.

கேமராவில் பதிவாகியிருந்த வேறு சில படங்களில் பட்டுச்சேலை அணிந்த இரண்டு பெண்கள் கூட்டத்தோடு உட்கார்ந்து இருந்தது தெரிய வந்தது. அவர்களைக் கண்டுபிடிப்பதில் போலீசார் முனைந்தனர். நிருபர் போல தோற்றமளித்த மர்ம மனிதன் ஒருவனின் படமும் பதிவாகியிருந்தது. அவனையும் போலீசார் தேடினார்கள். இதற்கிடையே மே 25_ந்தேதி தஞ்சை மாவட்டம் வேதாரண்யத்தில் சங்கர் என்ற விடுதலைப்புலியை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

ராஜீவ் காந்தியைக் கொலை செய்ய திட்டமிட்டு தனு என்ற மனித வெடிகுண்டை தயார் செய்து அனுப்பியவன் ஒன்றைக்கண் சிவராசன் என்று அவன் வாக்குமூலம் கொடுத்தான். அவனிடம் இருந்த டைரியின் மூலம் நளினி, முருகன் ஆகியோரின் சென்னை ராயப்பேட்டை முகவரியும், டெலிபோன் நம்பரும் தெரியவந்தன.

ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் பட்டுச்சேலை அணிந்து அமர்ந்திருந்த இரண்டு பெண்களில் நளினியும் ஒருத்தி என்பதும், இன்னொரு பெண் பெயர் சுபா என்பதும் போலீசாருக்குத் தெரிந்தது.

எனவே நளினியையும், முருகனையும் பிடிக்க போலீசார் விரைந்தனர். ஆனால் அந்த முகவரியில் அவர்கள் இல்லை. ராஜீவ் கொலை செய்யப்படுவதற்கு மூளையாக செயல்பட்ட சிவராசனைப் பிடிக்க போலீசார் பெரும் முயற்சி எடுத்துக்கொண்டனர். அவனைக் கண்டுபிடிக்க போலீசார் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர். சிவராசன் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு கொடுக்கப்படும் என்றும், இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட மற்றவர்கள் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

சிவராசனின் படம் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டது. இதற்கிடையில் நளினியின் தாயார் பத்மா, சகோதரன் பாக்கியநாதன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு அரசு போக்குவரத்து கழக பஸ்சில் நளினியும், முருகனும் வந்து கொண்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சென்னை அருகே பஸ்சை நிறுத்தி போலீசார் சோதனை போட்டனர். பஸ்சில் இருந்த நளினியும், முருகனும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர் என்றும், கைது செய்யப்பட்டபோது நளினி 6 மாத கர்ப்பிணி என்றும் விசாரணையில் தெரியவந்தது.

போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் முருகன் கூறியதாவது:-


"நான் யாழ்ப்பாணம் மீசலை பகுதியை சேர்ந்தவன். எனக்கு சுரேஷ், சிந்து, ராஜூ, தாஸ் முதலிய பெயர்களும் உண்டு. பெற்றோர் வைத்த பெயர் முருகன். 14 வயதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்தேன். எனக்கு கடுமையான பயிற்சிகள் கொடுத்தார்கள். நான் மே 6_ந்தேதி யாழ்ப்பாணத்தில் இருந்து கள்ளத்தோணியில் ஏறி சென்னைக்கு வந்து சேர்ந்தேன். போரூர் சபரி நகரில் இருந்த ஜெயக்குமார் வீட்டில் தங்கி இருந்த சிவராசன், சுபா, தனு ஆகியோரை சந்தித்தேன். சம்பவம் நடந்த நாளன்று சிவராசன், தனு, சுபா, நளினி, பாக்கியநாதன், போட்டோகிராபர் அரிபாபு ஆகியோரும் நானும் ஸ்ரீபெரும்புதூருக்கு சென்றோம். அங்குள்ள ஓட்டலில் மாலையில் பிரியாணி சாப்பிட்டோம். ஸ்ரீபெரும்புதூரில் தனுவுக்கு வெடிகுண்டு ஜாக்கெட்டை சிவராசன் மேற்பார்வையிட சுபா மாட்டிவிட்டாள்.

குண்டை எப்படி வெடிக்கச் செய்ய வேண்டும் என்பதை தனுவிடம் சிவராசன் விளக்கினான். குண்டு வெடிக்க செய்தால் இறந்து விடுவோம் என்பது தனுவுக்குத் தெரியும். ஆனாலும் ராஜீவ் காந்தியை கொலை செய்ய வேண்டும் என்ற பழிவாங்கும் கோபத்துடன் தனு இருந்தாள். இதற்குக் காரணம் யாழ்ப்பாணத்தில் தனுவின் தம்பியும், அண்ணனும் இந்திய அமைதிப் படையினரால் கொல்லப்பட்டனர். தனுவை கற்பழித்தனர். இதை நளினியிடம் தனு கூறியதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். இதனாலேயே கொலைத்திட்டத்தை நிறைவேற்ற அவள் சம்மதித்தாள். இத்திட்டம் நளினிக்கும் முன்கூட்டியே தெரியும். ராஜீவ் காந்தி வருவதற்கு முன்னதாக நாங்கள் மேடை அருகில் சென்று சுற்றிப்பார்த்தோம். தனுவுக்கு இடங்களை காட்டி சிவராசன் விளக்கினான். சிவராசன் தன்னை பத்திரிகையாளர் என்று கூறிக்கொண்டு அங்கு நின்றவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தான்.

ராஜீவ் வருகை தரும் இடத்தில் தனு சந்தன மாலையுடன் நின்றிருந்தாள். இதை சிவராசன் மிகவும் உன்னிப்பாக கண்காணித்தான். அவ்வப்போது தனுவுக்கு சைகை மூலம் கட்டளை பிறப்பித்தான். சிவராசன் தன்னுடைய பாதுகாப்புக்காக கைத்துப்பாக்கியும் வைத்திருந்தான். குண்டை வெடிக்கச் செய்வதில் தனு தோல்வி அடைந்தால் ராஜீவ் காந்தியை கைத்துப்பாக்கியால் சுட்டுவிட சிவராசன் திட்டமிட்டிருந்தான். சுபா தன் கழுத்தில் சயனைடு (விஷம்) குப்பியை தாயத்து போல கட்டி தொங்கவிட்டிருந்தாள். ராஜீவ் காந்தி வந்ததும் சிவராசன், சுபாவை அழைத்துக்கொண்டு மெயின் ரோட்டுக்குச் சென்றான். நானும் நளினியும் கூட்டத்தை விட்டு நழுவினோம். குண்டு வெடித்த பிறகு இரவு சுமார் 10.30 மணிக்கு சிவராசன், சுபா 2 பேரும் "ஆட்டோ"வில் ஏறி திருவள்ளூர் சென்றனர்.

நானும், நளினியும் காரில் ஏறி விட்டிற்கு திரும்பி விட்டோம். அதிகாலையில் சுபாவும், சிவராசனும் வந்தார்கள். காலையில் பத்திரிகைகளில் செய்தி வந்ததைப் பார்த்ததும் சுபாவும், சிவராசனும் வீட்டை விட்டுச் சென்றுவிட்டனர். நானும், நளினியும் திருப்பதிக்கு சென்றோம். தமிழ்நாட்டிற்கு மே மாதம் ராஜீவ் காந்தி வரும்போது கொலைத் திட்டத்தை நிறைவேற்ற சிவராசனுக்கு விடுதலைப்புலிகள் மேலிடம் கட்டளை பிறப்பித்து இருந்தது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, சிவராசன் மே மாதம் முதல் வாரம் தமிழ்நாட்டிற்கு வந்தான்."

இவ்வாறு முருகன் தனது வாக்குமூலத்தில் கூறி இருந்தான்.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails