ஒரு மனிதனை கடந்த காலத்திற்கு அழைத்துச் சென்று சற்று இளைப்பாற வைப்பதுதான் உண்மையான சினிமாவாக இருக்கும். அது மாதிரியான ஒரு சினிமாதான் என்னுடையது'' என்கிறார் "குதிரை' படத்தின் இயக்குநர் ராஜசேகர். "திருமலை', "ஆதி' படங்களை இயக்கிய ரமணா இதில் கதாநாயகனாக நடிக்கிறார். ரமணாவிடம் உதவியாளராகப் பணியாற்றி அவரையே இயக்கும் ராஜசேகரிடம் "குதிரை' பற்றி கேட்டபோது...
""பெரிய மனிதன் ஆன பிறகு, அப்பா மாதிரி வாழ வேண்டும், மாமா மாதிரி வாழ வேண்டும் என ஆயிரம் ஆசைகளை சிறுவர்கள் மனதுக்குள் பூட்டி வைத்திருப்பார்கள். குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு அந்த ஆசைகள் நிறைவேறும்போது உலக வாழ்க்கையை ஜெயித்து விட்டதாகவும், அது நிறைவேறாத போது தன்னுடைய இயலாமை தன்னை கொன்று விட்டதாகவும் உணர்வார்கள்.
"குதிரை' அந்த மாதிரி வளர்ந்த ஒரு மனிதனின் இயலாமையைத்தான் சொல்லப் போகிறது. ஒவ்வொருவருக்கும் சிறு வயது ஆசைகள், கனவுகள் இன்னும் நிறைவேறாமல் உயிரோடு இதய ஓரங்களில் ஒட்டிச் சிரித்துக் கொண்டு இருக்கும். அந்த ஆசைகளை அடைய மேற்கொள்ளும் ஒரு பயணம்தான் "குதிரை'. சுருக்கமாகச் சொன்னால், வளர்ந்த ஒரு மனிதனை அவனுக்குள் இருக்கும் எட்டு வயது சிறுவன் வழிநடத்த முயற்சிப்பதுதான் கதை.
குதிரைக்கு கடிவாளம் கட்டி விட்டால் அதன் முழு கவனமும் ஓடும் பாதையின் மீதுதான் இருக்கும். தன்னுடைய இலக்கை அடையும் வரை அதற்கு எதைப் பற்றியும் கவலை இல்லை. அந்தக் குதிரை மாதிரிதான் என் நாயகனும்; ஆனால் அவன் எந்த நோக்கத்திற்காகப் பயணத்தை மேற்கொள்கிறான் என்பதுதான் சஸ்பென்ஸ். சொல்லப்போனால் இது ஒரு "சைக்கோ' கதை.
படத்திற்கு புதுமுகம் ஒன்று தேவைப்பட்டது. ஆனால் அந்த முகம் சினிமாவுக்குப் புதுமுகமாக இருக்க கூடாது என்ற முடிவில்தான் என் குருவையே நாயகனாக நடிக்கக் கேட்டுக்கொண்டேன். அவரும் ஓ.கே. சொல்லி, நடிப்பில் அசத்தியிருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு ரமணாவை சினிமா உலகம் புதிதாகப் பார்க்கும்.
கேரளத்தைச் சேர்ந்த தர்ஷினி நாயகி. இவருக்கும் இந்த சினிமா புதிதாக இருக்கும். இளவரசு, கஞ்சா கருப்பு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஒரே ஒரு பாடல் மட்டும் மீதம் இருக்கிறது. சென்னை, நாகர்கோவில், ஐதராபாத் ஆகிய இடங்களில் கதை பயணிக்கிறது'' என்றார் ராஜசேகர்
0 comments:
Post a Comment