பி.இ. கல்லூரிகளின் எண்ணிக்கை 400 ஆக உயர்வு

பி.இ. கவுன்சலிங்கில் திங்கள்கிழமை சேர்க்கப்படும் புதிய பொறியியல் கல்லூரிகளை அடுத்து, தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 400 ஆக உயருகிறது.
தமிழகத்தில் கடந்த ஆண்டில் இருந்த பொறியியல் கல்லூரிகளில் 344 கல்லூரிகள் 2009-10 பி.இ. கவுன்சலிங் மூலம் மாணவர்களைச் சேர்க்க தகுதிப் பெற்றிருந்தன.
ஏற்கெனவே உள்ள கல்லூரிகளில் 3 கல்லூரிகளுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளதாலும், 4 கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அனுமதி கிடைக்காததாலும் இந்த கல்லூரிகள் கவுன்சலிங் பட்டியலில் இல்லை.
இதற்கிடையே, பி.இ. படிப்புகளில் சேருவதற்கான பொதுப் பிரிவு கவுன்சலிங் கடந்த வெள்ளிக்கிழமை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கியது.
அப்போது புதிதாக சுயநிதி பொறியியல் கல்லூரிகள் 26, பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் 5 என 31 கல்லூரிகள் கவுன்சலிங்கில் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 375 ஆக உயர்ந்தது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களில் 16 புதிய பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகங்களின் இணைப்பு அந்தஸ்தைப் பெற்று கவுன்சலிங் பட்டியலில் சேர்ந்துள்ளன.
இதையடுத்து பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 391 ஆக உயர்ந்துள்ளது.
திங்கள்கிழமை மேலும் புதிய கல்லூரிகள் வர உள்ளன. இதன் மூலம் தமிழகத்தின் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 400 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெக்கானிக்கல் பிரிவுக்கு மவுசு: இதுவரை தொடங்கப்பட்டுள்ள 47 புதிய கல்லூரிகளில், மெக்கானிக்கல் பிரிவு 44 கல்லூரிகளிலும், சிவில் பிரிவு 31 கல்லூரிகளிலும், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் பிரிவு 45 கல்லூரிகளிலும், எலக்ட்ரிகல்ஸ் அண்டு எலக்ட்ரானிக்ஸ் பிரிவு 33 கல்லூரிகளிலும் உள்ளது. தகவல் தொழில்நுட்பப் படிப்பு 3 கல்லூரிகளில் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails