இடதுசாரி இயக்கங்களின் கொள்கைகளில் உடன்பாடு இல்லாதவர்கள்கூட, அந்த இயக்கத்தின் மூத்த தலைவர்களிடம் காணப்படும் எளிமையையும் நேர்மையையும் பாராட்டவே செய்வார்கள். ஏனைய கட்சிகள் எதிலும் இல்லாத அளவுக்கு இடதுசாரி இயக்கங்களில் கட்டுப்பாடும், கொள்கைப் பிடிப்பும் உண்டு என்பதிலும் இருவேறு கருத்து இருக்க முடியாது. ஆனால், அந்த நிலைமை முற்றிலுமாக மாறி, இடதுசாரிக் கட்சிகள் அதிகார துஷ்பிரயோகம், ஊழல், உள்கட்சிப் பூசல்கள் என்று எல்லா விஷயங்களிலும் ஏனைய கட்சிகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை சமீபகாலமாகத் தெளிவாக்கி வருகிறார்கள்.
கேரள முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் மார்க்சிஸ்ட் கட்சியின் "பொலிட்பீரோ' என்று அழைக்கப்படும் தலைமைக் குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து அகற்றப்பட்டிருப்பது, எந்த அளவுக்கு மார்க்சிஸ்ட் கட்சியில் சித்தாந்த சீரழிவு ஏற்பட்டிருக்கிறது என்பதையும், அந்தக் கட்சியின் அதிகார மையத்தில் தனிநபர் செல்வாக்கு எந்த அளவுக்கு முன்னிலை வகிக்கிறது என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
ஏற்கெனவே மேற்கு வங்கத்தில் இடதுசாரிக் கூட்டணி அரசு பல பகுதிகளில் செயலிழந்து, நிர்வாகமே மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் அதிர்ச்சி தரும் யதார்த்தங்கள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில், கேரளத்திலும், ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் கட்சியின் மாநிலச் செயலர் பினராயி விஜயன் பொலிட்பீரோவால் நன்னடத்தைச் சான்றிதழ் வழங்கப்பட்டு, ஊழலுக்குத் துணைபோக மறுத்த முதல்வர் அச்சுதானந்தன் தண்டிக்கப்பட்டிருப்பது, இடதுசாரி இயக்கங்கள் நிலை தடுமாறி விட்டனவா என்கிற கேள்வியை எழுப்புகிறது.
கேரள மாநிலத்தில் உள்ள மூன்று நீர்மின் நிலையங்களை நவீனமயமாக்குவது என்று 1995-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி அரசு முடிவெடுத்தது. இதற்காக டெண்டர் கோரப்பட்டு எஸ்.என்.சி. லாவ்லின் என்கிற கனடா நிறுவனம் அந்தப் பணிக்கு ஒப்பந்தமும் செய்யப்பட்டது. தொடர்ந்து பதவிக்கு வந்த மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசின், மின்துறை அமைச்சராக இருந்தவர், மார்க்சிஸ்ட் கட்சியின் தற்போதைய மாநிலச் செயலர் பினராயி விஜயன்; அவரது பதவிக்காலத்தில்தான் லாவ்லின் நிறுவனம் தனது சீரமைப்பு மற்றும் நவீனப்படுத்தும் பணியைத் தொடங்கி நடத்தியது.
இந்த ஒப்பந்தத்தின்படி பணிகளை நிறைவேற்றுவதில் 374 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. துப்புத் துலக்கி, தவறு செய்தவர்களைச் சட்டத்தின்முன் நிறுத்தும் பணி மத்திய புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணை நடத்திய மத்திய புலனாய்வுத் துறையினர், ஊழலில் பினராயி விஜயனுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி அவர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி கோரினர். முதல்வர் அச்சுதானந்தனின் விருப்பத்தையும் மீறி, பினராயி விஜயன் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி தரக்கூடாது என்று ஆளுநருக்குக் கேரள அமைச்சரவை பரிந்துரை செய்தது.
""குற்றம் சாட்டப்பட்டவர் யாராக இருந்தாலும் அவர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும். தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டியது அவருடைய கடமை. விசாரணைக்குக் குறுக்கே அரசோ, கட்சியோ நிற்பது சரியல்ல'' என்கிற தார்மிக நிலையை ஆரம்பம் முதலே எடுத்தார் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன். கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கியது முதலே அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகத் தொடரும் அச்சுதானந்தன், ஏ.கே. கோபாலன், ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு போன்ற மூத்த தலைவர்களின் வரிசையில் வந்தவர் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
ஆளுநர், அமைச்சரவையின் பரிந்துரையையும் மீறி, பினராயி விஜயன் தொடங்கி அனைவர்மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய புலனாய்வுத் துறைக்கு அனுமதி அளித்தார். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், காங்கிரஸ் கட்சியினரின் வற்புறுத்தலின்பேரில் ஆளுநர் ஒரு கட்சிக்காரராகச் செயல்பட்டு வருகிறார் என்றும் பினராயி விஜயனின் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். அமைச்சரவையின் பரிந்துரையை மீறி ஆளுநருக்கு இப்படி ஓர் அனுமதியை வழங்கும் அதிகாரம் கிடையாது என்பதுவரை இடதுசாரி இயக்கத்தினர், ஆளுநரின் செயலுக்குக் களங்கம் கற்பிக்க முயல்கிறார்கள். அவர்களது வாதத்தில் ஓரளவு உண்மை இருக்கிறது என்றாலும், அரசியல் சட்ட ஓட்டைக்குள் ஒளிந்து கொண்டு, விசாரணையிலிருந்து தப்பிக்க முயல்வது ஒரு நல்ல கம்யூனிஸ்டுக்கு அடையாளம் அல்லவே!
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் தோல்விக்கு, அச்சுதானந்தனின் தனிப்பட்ட நேர்மையும், ஊழலற்ற நிர்வாகமும் காரணம் என்று யாரும் கருதவில்லை. ஆனால், கட்சிச் செயலர் பினராயி விஜயன் சம்பந்தப்பட்ட லாவ்லின் ஊழல்தான்.
இடதுசாரி இயக்கங்களின் ஒட்டுமொத்த நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தி படுதோல்விக்கு வழிகோலியது என்பது உலகறிந்த உண்மை.
எளிமைக்கும், நேர்மைக்கும், நிர்வாகத் திறமைக்கும், சித்தாந்தப் பிடிப்புக்கும் பெயர்போன முன்னாள் திரிபுரா முதல்வர் நிரூபன் சக்ரவர்த்தி, கேரளத் தலைவர்கள் எம்.வி. ராகவன் மற்றும் கே.ஆர். கௌரி வரிசையில் இப்போது முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனும் பொலிட்பீரோவிலிருந்து அகற்றப்பட்டிருக்கிறார். இதன் தொடர்விளைவாகக் கேரளத்தில் இடதுசாரி இயக்கங்கள் பலவீனமடைவது மட்டுமல்ல, ஊழலைப் பற்றியும், நேர்மையைப் பற்றியும் ஊருக்கு உபதேசம் செய்யும் தகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இழக்கவும் செய்கிறது.
நேர்மை உறங்கும் நேரம்... வேறு என்னவென்று சொல்ல?
0 comments:
Post a Comment