அதிக நன்கொடை வசூலிப்பதாகப் புகார் வரும் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் சோதனை செய்யும் நடைமுறை முழு வீச்சில் மீண்டும் தொடங்கியுள்ளது.
பி.இ. படிப்புகளில் சேருவதற்கான பொதுப்பிரிவு கவுன்சலிங் தொடங்கிய பிறகும், ஆய்வுக் குழுவுக்கு சட்டப்படி அதிகாரம் வழங்கிய பிறகும், கல்லூரிகளில் முதல் முறையாக சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கவுன்சலிங் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளதை அடுத்து, இந்தக் குழு தமிழகம் முழுவதும் திடீர் சோதனை மேற்கொள்ள உள்ளது.
சென்னையை அடுத்த குன்றத்தூரில் தனியார் பொறியியல் கல்லூரியில் நன்கொடை வசூல் ஆய்வுக்குழு திங்கள்கிழமை திடீர் சோதனை நடத்தியது.
ஆய்வுக் குழுவின் தலைவர் ஏ. ராமசாமி கூறியதாவது:
"இந்தக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் ரூ.32,500-க்குப் பதிலாக ரூ.70 ஆயிரமும், நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் ரூ.62,500-க்குப் பதிலாக ரூ.1 லட்சமும் கட்டணம் கேட்பதாகப் புகார் வந்தது. இதையடுத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கல்லூரி முதல்வர் திங்கள்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ""கல்லூரியில் அதிகக் கட்டண வசூல், உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர் வசதி சரியில்லாதது தொடர்பாக அடிக்கடி பிரச்னைகள் எழுகின்றன; இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் எடுத்துக் கூறியும் பலனில்லை, அதனால் ராஜினாமா செய்தேன்'' என்று குழுவிடம் கூறினார் முதல்வர்.
கல்லூரி நிர்வாகம் ஆய்வுக் குழுவைப் புறக்கணித்தது குறித்து விளக்கம் கேட்டும், சில ஆவணங்களைத் தாக்கல் செய்யச் சொல்லியும் ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு கல்லூரி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்' என்றார் ராமசாமி.
உயர்கல்வி மன்ற உறுப்பினர் செயலர், பாஸ்கரன், சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் எஸ்.ராமச்சந்திரன், தொழில்நுட்பக் கல்வி துணை இயக்குநர் கெல்வின் சந்திரசேகரன், சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் ஆகியோர் சோதனையின்போது உடனிருந்தனர்
0 comments:
Post a Comment