சர்க்கரை விலை உயரும் அபாயம்!

சர்க்கரை உற்பத்தி குறைந்து வருவதால், சர்க்கரை விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வெளிமார்க்கெட்டில் கடந்த ஜூன் மாதம் ஒரு கிலோ சர்க்கரை ரூ.22-க்கு விற்பனையானது. கடந்தவாரம் ரூ.23.50 ஆக இருந்த சர்க்கரை விலை இந்த வாரம் ரூ.25.50 ஆக உயர்ந்துள்ளது.

வரும் வாரங்களில் சர்க்கரை விலை மேலும் உயரும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கரும்புக்கு கூடுதல் விலையை அரசு வழங்காததை அடுத்து, விவசாயிகள் கரும்புகளை சர்க்கரை ஆலைகளுக்கு அளிக்காமல் வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுப்பத் தொடங்கியுள்ளதே இதற்குக் காரணம் என்று விஷயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், 3 பொதுத் துறை ஆலைகள், 19 தனியார் சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன.

கூட்டுறவு, பொதுத் துறை சர்க்கரை ஆலைகளுக்கு 1,93,475 ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. சர்க்கரை உற்பத்தி 5 லட்சம் மெட்ரிக் டன் ஆகும். தனியார் கரும்பு ஆலைகளுக்கு அரசு ஒதுக்கிய கரும்பு சாகுபடி பரப்பு 3,42,105 ஏக்கர். இவற்றின் மூலம் 12 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது.

கூட்டுறவு ஆலைகளில் கரும்பு கொள்முதல் செய்ய போக்குவரத்துச் செலவு, குறைந்தபட்ச பிழித் திறனுக்கு ஏற்ப விவசாயிகளுக்கு சரியான நிதி ஒதுக்கீடு, விவசாய பங்குதாரர்களுக்கு லாபத்தில் பங்கு, கல்வி நிறுவனங்களில் முன்னுரிமை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் கூட்டுறவு நிறுவனங்களுக்கு அரசு அதிகமான கரும்பு கொள்முதல் பரப்பை ஒதுக்காமல், புதிய தனியார் சர்க்கரை ஆலைகளை ஊக்குவிப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, பெரம்பலூர், மோகனூர் கூட்டுறவு ஆலைகளுக்குட்பட்ட கரும்பு உற்பத்தி பகுதிகள் ஆத்தூர் தனியார் ஆலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

திருப்பத்தூர் ஆலையின் கரும்பு கொள்முதல் பரப்பு 45 ஏக்கர் குறைந்துள்ளது. சர்க்கரை உற்பத்தி கடந்த ஆண்டைக் காட்டிலும் 24 சதவீதம் குறைந்துள்ளது.

இவ்வாறு பல்வேறு காரணங்களால் விவசாயிகள் கரும்பு சாகுபடிப் பரப்பை தொடர்ந்து குறைத்து கொண்டு வருகின்றனர். இதனால், சர்க்கரை உற்பத்தியும் குறைந்து வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளில் விவசாயிகள் கரும்பு உற்பத்தி செய்யும் பரப்பு கூட்டுறவு ஆலைகளுக்கு 5 லட்சம் ஏக்கரும், தனியார் ஆலைகளுக்கு 4 லட்சம் ஏக்கரும் குறைந்துள்ளன.

மேலும், விவசாயிகள் ஆலைகளின் ஒப்பந்தத்தை மீறி வெல்லம் உற்பத்தி ஆலைகளுக்கு அனுப்பிவருவதால் ஒட்டுமொத்த சர்க்கரை உற்பத்தி 16 சதவீதம் குறைந்துள்ளது. அரசின் கையிருப்பு சர்க்கரையும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கரும்பு டன்னுக்கு ரூ.1150-ஐ அரசு வழங்குகிறது. ஆனால், வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் விவசாயிகளிடமிருந்து போக்குவரத்துச் செலவை உள்ளடக்கி டன்னுக்கு ரூ.1,700-க்கு வாங்கிக் கொள்கின்றன. இதனால், விவசாயிகள் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு அனுப்புவதைவிட வெல்ல ஆலைகளுக்கு மறைமுகமாக அனுப்ப விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி கூறியது: ஆலைகளின் ஒப்பந்தங்களை மீறி வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு அதிக விலைக்கு விவசாயிகள் கரும்பை அனுப்புவதால் ஒட்டுமொத்த சர்க்கரை உற்பத்தி பாதிக்கப்படும் என்றார். சர்க்கரை உற்பத்தி பாதிக்கப்பட்டால் விலை உயர வாய்ப்பு உள்ளதாக மார்க்கெட் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails