தவறு திருத்தப்படுமா?

லகத்தின் எந்தப் பகுதியிலும், எந்த நாட்டிலும் தேசியச் சின்னங்களும், தேசத் தலைவர்களின் நினைவிடங்களும் தனியாரின் பராமரிப்பில் விடப்படும் அலட்சியம் அரங்கேறியதே இல்லை. சில தனியார் அமைப்புகள் தேசத் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் முகமாக, அந்த நினைவிடங்களில் இலவசமாக வசதிகள் செய்து கொடுக்க முன்வருமே தவிர, அதற்கு விலையாக நினைவிடங்களைச் சுற்றி விளம்பரப் பலகைகளை வைத்துத் தங்களது வியாபாரத்துக்கு வலு சேர்க்கும் ஆதாய நோக்கிலான யுக்திக்கு எந்த ஓர் அரசும் துணை போனதாகச் சரித்திரமில்லை.

சென்னை அடையாறில் உள்ள காந்தி மண்டபமும் சரி, அதன் அருகில் அமைந்த மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜ் மற்றும் முன்னாள் முதல்வரும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான பக்தவத்சலம் போன்றோரின் நினைவிடங்களும் சரி, இத்தனை ஆண்டுகாலமாகப் பொதுப்பணித் துறையினரால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. இப்போது திடீரென்று ஒரு தனியார் செல்போன் நிறுவனத்தின் பராமரிப்பில் இந்த நினைவகங்கள் தரப்பட வேண்டிய அவசியம்தான் என்ன என்கிற கேள்வி எழுகிறது.

பல நூறு கோடி ரூபாய் வருவாயுள்ள அரசுக்கு, காந்தி மண்டப வளாகத்தைப் புதுப்பித்துப் பராமரிக்க ஒருசில லட்சங்கள் இல்லை என்று சொன்னால், அதைவிடக் கேவலம் இருக்க முடியுமா? அதற்கு அந்த மண்டபங்களின் பராமரிப்பில் அரசு காட்டும் அலட்சியம்தானே காரணமாக இருக்க முடியும்?

அந்தத் தனியார் நிறுவனமும் சரி, சற்றும் கூச்சமோ, குற்ற உணர்வோ இல்லாமல் சில லட்சங்களைப் புதுப்பிப்பதற்குச் செலவிட்டோம் என்கிற சாக்கில் பத்தடிக்கு ஒரு விளம்பரப் பலகை என்று புல்தரை, விளக்குக் கம்பம் என்று பார்க்கும் இடமெல்லாம் காந்தி மண்டபம், ராஜாஜி, காமராஜர், பக்தவத்சலம் போன்ற தலைவர்களின் நினைவிடம் என்று எதையும் விடாமல் விளம்பரத்துக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறதே, அதை என்னவென்று சொல்ல?

தமிழகத்தில் எத்தனையோ ஆலயங்கள் இருக்கின்றன. அந்த ஆலயங்களில் குடமுழுக்கு நடத்தப் பல தனிநபர்களும், நிறுவனங்களும் பொருளுதவி செய்கின்றனர். ஏதோ ஓர் இடத்தில், நன்கொடையாளர்களின் பெயர் பதிவு செய்யப்பட்டிருக்குமே தவிர, பத்தடிக்கு ஒரு பெயர்ப்பலகை வைத்து வியாபார யுக்திக்குப் பயன்படுத்திக் கொள்வதில்லை. அதேபோல, மக்கள் நலனில் அக்கறையும், தேசத் தலைவர்கள் மீது மரியாதையும் இந்த நிறுவனங்களுக்கு இருக்குமேயானால், தங்களது லாபத்தின் ஒரு பங்கை இதுபோன்ற நல்ல விஷயங்களுக்கு நன்கொடையாகச் செலவிட வேண்டுமே தவிர, தங்களது வியாபாரத் தூதரகமாகத் தேசத் தலைவர்களின் நினைவிடங்களை மாற்றக் கூடாது.

இதுபோல எங்கும் எதிலும் ஆதாயம்தேட முயற்சிக்கும் வியாபார நிறுவனங்களைக் குற்றம் சொல்லி என்ன பயன்? நமது ஆட்சியாளர்கள் அவர்களுக்குத் துணை போகிறார்களா, விலை போகிறார்களா தெரியவில்லை. இதுபோன்ற வியாபார யுக்திகளுக்கு வழிகோலுகிறார்களே, அது எப்படி?

தேசியத் தலைவர்களின் வழிவந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சியினர்கூட இதை ஒரு மானப்பிரச்னையாகக் கருதிக் குரலெழுப்புவார்கள் என்று பார்த்தால், ஆட்சியில் பங்குக்காக இலவு காத்த கிளியாய் காத்துக் கிடக்கும் அவர்கள் கண் இருந்தும் குருடர்களாக, வாய் மூடி மௌனிகளாக இருப்பது ஏன்?

காந்தி மண்டபத்தின் அருகில் தியாகிகளும், தேசியத் தலைவர்களுமான ராஜாஜி, காமராஜ் மற்றும் பக்தவத்சலத்துக்கு நினைவிடங்கள் ஏற்படுத்தியது தாம்தான் என்று அடிக்கடி சொல்லிப் புளகாங்கிதம் அடைபவர் முதல்வர் கருணாநிதி. அந்த நினைவிடங்களை அமைத்தவர் என்கிற பெருமைக்குரியவர் அவர்தான் என்பதில் சந்தேகமில்லை. மாற்றான்தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்கிற பேரறிஞர் அண்ணாவின் வழியில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு நினைவிடம் அமைத்த பெருமைக்குரியவரா, இப்படி அந்த நினைவகங்களைத் தனியார் பராமரிப்புக்குத் தாரை வார்த்து சிறியன செய்வது?

தேசியத் தலைவர்களுக்கு நினைவிடங்களை அமைத்து அதில் அரசியல் ஆதாயம் தேட முயலும் திமுக அரசு, அந்த நினைவிடங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதில்லை என்பதற்கு இன்னொரு உதாரணம், திருவல்லிக்கேணியில் அமைந்த மகாகவி சுப்பிரமண்யபாரதி நினைவிடத்தின் இன்றைய நிலைமை. முன்பெல்லாம் அங்கே மாதம்தோறும் குறைந்த வாடகையில் இலக்கியக் கூட்டங்கள் நடைபெறும். அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே செப்பனிடுகிறோம் என்ற பெயரில், கூட்டம் நடைபெறும் அரங்கம் மூடிக் கிடக்கிறது. பணிகள் எதுவும் நடப்பதாகவும் தெரியவில்லை.

நினைவிடங்களை மேம்படுத்தவும், செப்பனிடவும், புதுப்பிக்கவும், புதிய பல வசதிகளை ஏற்படுத்தவும் தனியார் நிறுவனங்களும், தனிநபர்களும் சமுதாயக் கண்ணோட்டத்துடன் நிதியுதவி அளிப்பதோ, பங்களிப்பு நல்குவதோ, வரவேற்கத்தக்க விஷயம்தான். ஆனால், அதைக் காரணம் காட்டி, தலைவர்களின் நினைவிடங்களைத் தங்கள் வியாபாரத் தூதரகமாக்கும் முயற்சி கண்டனத்துக்கு உரியது. தவறு திருத்தப்பட வேண்டும். அரசு தன் பொறுப்பில் நினைவிடங்களின் பராமரிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails