ராஜீவ் காந்தி கொலை-2

ராஜீவ் காந்தி இறந்துவிட்டார் என்ற செய்தி டெல்லியில் இருந்த சோனியா காந்திக்கு இரவு 12 மணி அளவில் தெரிவிக்கப்பட்டது. அவர் அதிர்ச்சியால் உறைந்து போனார். ராஜீவ் காந்தியின் ஒரே மகன் ராகுல் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்தார். அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர் உடனடியாக விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டார். சோனியாவும், மகள் பிரியங்காவும் தனி விமானம் மூலம் சென்னைக்கு விரைந்தனர். இதற்கிடையே ராஜீவ் காந்தியின் உடல் வேன் மூலம் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டது. அங்கு உடல் பரிசோதனை நடந்தது. டெல்லிக்கு கொண்டு செல்லப்படுவதற்காக பெட்டியில் வைக்கப்பட்டது.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி நடந்து வந்தது. கவர்னர் பீஷ்மநாராயண் சிங் ஆஸ்பத்திரிக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் ராஜீவ் உடல் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு கொண்டு போகப்பட்டது. டெல்லியில் இருந்து சோனியாவுடனும், பிரியங்காவுடனும் புறப்பட்ட தனி விமானம் சென்னை வந்து சேர்ந்தது. ராஜீவ் காந்தி உடலைப் பார்த்து சோனியாவும், பிரியங்காவும் கதறித்துடித்தனர். பின்னர் அவர்கள் வந்த தனி விமானத்திலேயே ராஜீவ் உடல் டெல்லிக்கு கொண்டு போகப்பட்டது.

சோனியாவும், பிரியங்காவும் காங்கிரஸ் தலைவர்களும் உடன் சென்றார்கள். டெல்லிக்குக் கொண்டு போகப்பட்ட ராஜீவ் காந்தியின் உடல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆபரேஷன்கள் மூலம் உடலை டாக்டர்கள் சீரமைத்தனர். பின்னர் ராஜீவ் காந்தியின் வீட்டுக்கு உடல் கொண்டு போகப்பட்டது. அங்கு சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக தீன்மூர்த்தி இல்லத்துக்கு (பண்டித நேரு வசித்த வீடு) கொண்டு போய் வைத்தார்கள்.

இதற்கிடையில் அமெரிக்காவில் இருந்து ராகுல் டெல்லி வந்து சேர்ந்தார். தந்தையின் உடலைக்கண்டு அலறித்துடித்தார். ராஜீவ் உடல் அருகே சோனியாவும், பிரியங்காவும் துயரமே உருவாக அமர்ந்திருந்தனர். சஞ்சய் காந்தியின் மனைவி மேனகாவும் சோகத்துடன் அமர்ந்திருந்தார். பிரதமர் சந்திரசேகர் தலைமையில் மத்திய மந்திரிசபை கூடி ராஜீவ் மரணத்துக்கு அனுதாபம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. 7 நாட்கள் துக்கம் கடைப்பிடிப்பது என்றும், அரசு மரியாதையுடன் ராஜீவ் உடலை தகனம் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர், பூடான் மன்னர், அமெரிக்க துணை ஜனாதிபதி, இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் உலகப் பிரமுகர்கள் பலர் வந்திருந்து இறுதி மரியாதை செலுத்தினர். 23_ந்தேதி பிற்பகல் இறுதி ஊர்வலம் நடந்தது. முப்படை தளபதிகள், ராஜீவ் உடலை சுமந்து வந்து பீரங்கி வண்டியில் வைத்தார்கள். பிரதமர் சந்திரசேகர், முன்னாள் ஜனாதிபதி ஜெயில்சிங் மற்றும் பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். பிறகு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ராஜீவ் உடலை தகனம் செய்ய, இந்திரா காந்தி சமாதி இருக்கும் சக்தி ஸ்தலத்தில் தகன மேடை அமைக்கப்பட்டிருந்தது. மாலை 4.45 மணிக்கு இறுதி ஊர்வலம் அந்த இடத்தை அடைந்தது. ராஜீவ் உடலை ராகுல், நடிகர் அமிதாபச்சன் மற்றும் உறவினர்கள் தூக்கி வந்து தகன மேடையில் வைத்தார்கள். உடல் மீது சந்தனக் கட்டைகள் அடுக்கப்பட்டு, வைதீக சடங்குகள் நடந்தன.

பிறகு "சிதை"க்கு ராகுல் தீ மூட்டினார். மைதானத்தில் திரண்டிருந்த பொதுமக்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள். மறுநாள் ராஜீவ் காந்தி அஸ்தி 34 கலசங்களில் சேகரிக்கப்பட்டது. அலகாபாத்தில் கங்கையும், யமுனையும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்திலும், இமயமலை சாரல் உள்பட இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் கரைப்பதற்காக அஸ்தி கலசங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

திரிவேணி சங்கமத்துக்கு சோனியா காந்தி சென்றிருந்தார். ராஜீவ் காந்தி அஸ்தி சென்னைக்கு கொண்டு வரப்பட்டு ராஜாஜி மண்டபத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், ரெயில் மூலம் கன்னியாகுமரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை பற்றி துப்புதுலக்க சிறப்பு மத்திய புலனாய்வு பிரிவு அமைக்கப்பட்டது. அந்த குழுவைச் சேர்ந்த 20 அதிகாரிகள் ராஜீவ் கொல்லப்பட்ட இடமான ஸ்ரீபெரும்புதூருக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்கள். வெடித்த வெடிகுண்டு துண்டுகளை சேகரித்தனர். ராஜீவ் காந்தியின் உடல் அருகே சிதைந்து கிடந்த பெண்தான் கொலையாளியாக இருக்கவேண்டும் என்று முடிவு செய்தனர்.

சக்தி வாய்ந்த குண்டை அவள் பயன்படுத்தி வெடிக்க செய்திருக்க வேண்டும் என்று ஊகித்தார்கள். மேலும் கொலை சம்பவம் நடந்த இடத்தில் பெண்கள் அணியும் `பெல்ட்' ஒன்றும் சிதைந்து கிடந்ததை கண்டு எடுத்தார்கள். அதில் வெடிகுண்டு மருந்து நெடி வீசுவதையும் கண்டுபிடித்தனர். எனவே கொலையாளி அவளேதான் என்று உறுதிப்படுத்தினார்கள். ஆனாலும் அவள் யார், பெயர் என்ன என்ற விவரம் எதுவும் தெரியாமல் இருந்தது. ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது அருகே இருந்த செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கள் ராஜகுரு, எட்வர்டு, சப்_இன்ஸ்பெக்டர் எத்திராஜ், போலீஸ்காரர்கள் ரவி, தர்மன், பீட்டர், முருகன், பெண் போலீஸ் சந்திரா, முன்னாள் எம்.எல்.சி. முனுசாமி, லதா கண்ணன், கோகிலா, ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு அதிகாரி குந்தா உள்பட 18 பேர் இறந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மரகதம் சந்திரசேகர், போலீஸ் டி.ஐ.ஜி. மாத்தூர், போலீஸ் அதிகாரி நாஞ்சில் குமரன் ஆகியோர் உள்பட 21 பேர் காயம் அடைந்தனர்.

டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூடி, ராஜீவ் காந்தி வகித்து வந்த காங்கிரஸ் தலைவர் பதவியை சோனியா ஏற்க வேண்டும் என்றும், அமேதி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் இந்த கோரிக்கைகளை ஏற்க சோனியா மறுத்து விட்டார். ராஜீவ் காந்தி மரணம் அடைந்ததால் இரண்டாவது கட்ட தேர்தல் மே 23_ல் இருந்து ஜுன் 12_ந்தேதிக்கும், மூன்றாவது கட்ட தேர்தல் மே 26_ல் இருந்து ஜுன் 15_ந்தேதிக்கும் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த சமயத்தில் ராஜீவ் கொலைக்கும், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் தொடர்புகள் இருக்கலாம் என்று செய்திகள் வெளியாயின. இதை மறுத்து விடுதலைப்புலி தளபதிகளில் ஒருவரான கிட்டு அறிக்கை விடுத்தார். "ராஜீவ் காந்தி மரணச்செய்தி எங்களுக்கு அதிகமாக அதிர்ச்சி அளித்தது. எங்களால் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியவில்லை. இதில் எந்த வகையிலும் எங்களுக்கு தொடர்பு இல்லை" என்று அவர் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails