ராஜீவ் காந்தி கொலை-4

சென்னை ஆழ்வார்திருநகரில் பதுங்கியிருந்த ஒற்றைக்கண் சிவராசனும், சுபாவும் இனியும் சென்னையில் இருந்தால் போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்று நினைத்தனர். அதனால் சென்னையிலிருந்து தப்பிச்செல்ல என்ன வழி என்று யோசித்தனர். சில விடுதலைப்புலிகளின் உதவியுடன் டேங்கர் லாரிக்குள் மறைந்து கொண்டு ரகசியமாக பெங்களூருக்குச் சென்றார்கள். 29_6_1991_ல் பெங்களூர் போய்ச்சேர்ந்தனர்.

அங்கு தலைமறைவாக இருந்த அவர்கள் 1 மாத காலம் போலீஸ் கண்ணில் படாமல் அங்கும் இங்கும் திரிந்தனர். பிறகு கோனேகுண்டே என்ற இடத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கினர். இதுபோல் பல விடுதலைப்புலிகள் கர்நாடக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் தலைமறைவாக இருந்தனர். பெங்களூர் புறநகரில் உள்ள இந்திரா நகர் காலனியில் விடுதலைப்புலிகள் ஒரு ஆடம்பர பங்களாவில் தங்கி இருப்பதாக போலீசுக்குத் தகவல் கிடைத்தது. உடனே சென்னையில் இருந்து சி.பி.ஐ. குழுவினர் 15 பேர் பெங்களூருக்கு விரைந்தார்கள். அந்த பங்களாவை முற்றுகையிட்டார்கள். அந்த பங்களாவில் 3 அறைகள் இருந்தன.

அதை ஒரே நேரத்தில் உடைத்துக்கொண்டு அதிகாரிகள் உள்ளே புகுந்தனர். அங்கு விடுதலைப்புலிகள் சயனைடு தின்று மயங்கி கிடந்தனர். அதில் ஒருவன் சிறிது நேரத்தில் இறந்தான். அவனது பெயர் அரசன். இன்னொருவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 3 தினங்களில் இறந்து போனான். அவனது பெயர் குளத்தான் என்று தெரியவந்தது. அதே பகுதியில் இன்னொரு வீட்டில் பதுங்கி இருந்த மிரேஷ் (18) என்ற விடுதலைப்புலி போலீசாரிடம் சிக்கிக் கொண்டான். கர்நாடக மாநிலத்தில் மாண்டியா மாவட்டம் மாலவகள்ளி தாலுகா முத்தத் கிராமத்தில் ஒரு வீட்டில் விடுதலைப்புலிகள் தங்கி இருந்தனர். அந்த வீட்டை போலீசார் சுற்றி வளைத்தபோது 5 விடுதலைப்புலிகள் `சயனைடு' தின்று இறந்து கிடந்தனர்.

4 பேர் மயக்கம் அடைந்து கிடந்தார்கள். ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லும் வழியில் ஒருவன் இறந்தான். அதே தாலுகாவில் உள்ள பிரோட்டா என்ற ஊரிலும் ஒரு வீட்டில் விடுதலைப்புலிகள் பதுங்கி இருந்தனர். அங்கு போலீசார் சென்றனர். அதற்குள் வீட்டில் இருந்த 6 விடுதலைப்புலிகள் சயனைடு தின்று செத்தனர். 2 பேர் உயிருக்கு போராடிய நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். கர்நாடக மாநிலத்துக்குள் பல ஊர்களில் விடுதலைப்புலிகள் தங்கி இருப்பதும் பிடிக்கச் செல்லும்போது அவர்கள் தற்கொலை செய்வதும் சர்வசாதாரணமாக நடந்தது. எனவே சிவராசனும், சுபாவும் கர்நாடகத்தில்தான் இருக்க வேண்டும் என்று "சி.பி.ஐ" போலீசார் கருதினார்கள். எனவே அங்கு தங்களது வேட்டையை தொடர்ந்தார்கள்.

19_8_1991_ந்தேதி அன்று பெங்களூர் அருகே கோனே குண்டே என்ற இடத்தில் உள்ள காலனியில் ஒரு வீட்டில் சந்தேகப்படும் படியாக நபர்கள் தங்கி இருப்பதாக பால்கார பெண், போலீசுக்கு தகவல் கொடுத்தாள். உடனே அந்த வீட்டை போலீசார் கண்காணிக்கத் தொடங்கினார்கள். வீட்டில் தங்கியுள்ள விடுதலைப்புலிகளை உயிரோடு பிடிக்கவேண்டும் என்பதற்காக டெல்லியில் இருந்து கமாண்டோ படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். 20_ந்தேதி அந்த பகுதியில் 1,500_க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டார்கள். வீட்டைச்சுற்றி சுமார் 200 அடி தூரத்தில் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

`திடீர்' என்று வீட்டிற்குள் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. போலீசார் திருப்பி சுட்டனர். இரவு 7 மணிக்கு தொடங்கி சுமார் 1/2 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. பிறகு வீட்டிற்குள் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. எனவே கமாண்டோ படை வீரர்கள் 8 பேர் வீட்டின் கூரை வழியாக வீட்டிற்குள் புகுந்தார்கள். அந்த வீடு ஒரே அறை மட்டுமே கொண்டிருந்தது. உள்ளே 7 பேர் இறந்து கிடந்தனர். இதில் 5 பேர் ஆண்கள். இருவர் பெண்கள். ஒரு ஆணின் தலையில் மட்டும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட காயம் இருந்தது. மற்ற 6 பேரும் "சயனைடு" விஷம் தின்று செத்துக்கிடந்தார்கள்.

பெண்களில் ஒருத்தி மரத்தினால் செய்யப்பட்ட செயற்கை காலை பொருத்தி இருந்தாள். உடனே சி.பி.ஐ. டைரக்டர் விஜயகரன், ஐ.ஜி. கார்த்திகேயன், பெங்களூர் போலீஸ் கமிஷனர் ஆர்.ராமலிங்கம் ஆகியோர் வீட்டிற்குள் சென்று பார்வையிட்டார்கள்.

தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்து கிடந்தவன் ஒற்றைக்கண் சிவராசன் என்பதை கார்த்திகேயன் உறுதி செய்தார். பெண்களில் ஒருத்தி சுபா என்பதையும் கண்டுபிடித்தார்கள். சிவராசனும், சுபாவும் அருகருகே பிணமாக கிடந்தனர். சிவராசன் பேண்ட், கறுப்பு நிற பனியன் அணிந்திருந்தான். சிவராசன் சயனைடு அருந்தியதுடன் துப்பாக்கியாலும் சுட்டுக்கொண்டான்.

அவனது வலது கண்ணுக்கு மேல் நெற்றியில் குண்டு பாய்ந்திருந்தது. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தபோது குண்டு துளைத்ததால் அவனது செயற்கை கண் பிதுங்கி கீழே விழுந்து கிடந்தது. சுபா வெள்ளை நிற குட்டைப் பாவாடையும், கறுப்பு நிறத்தில் முழுக்கை சட்டையும் அணிந்திருந்தாள். காதில் சிவப்பு நிற கம்மலும், காலில் வெள்ளிக்கொலுசும், மெட்டியும் போட்டிருந்தாள். பின்னர் 7 பேரின் பிணங்களும் பிரேத பரிசோதனைக்காக பெங்களூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ராஜீவ்காந்தியைக் கொலை செய்து விட்டு 91 நாட்கள் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்த சிவராசன், சுபா ஆகியோரின் வாழ்க்கை ராஜீவ் காந்தி பிறந்த தினமான ஆகஸ்டு 20_ந்தேதி தற்கொலையில் முடிவடைந்தது

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails