எம்.பி.பி.எஸ். படிப்பை விட்டு 11 பேர் பி.இ. சேர்ந்தனர்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர அனுமதிக் கடிதம் பெற்ற 11 மாணவர்கள், பி.இ. படிப்பில் சேர்ந்துள்ளனர்.

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. படிப்பில் மாணவர்களைச் சேர்க்க கடந்த 10-ம் தேதி முதல் பொதுப் பிரிவு கவுன்சலிங் நடைபெற்று வருகிறது.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கவுன்சலிங் கடந்த 6-ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனிடையில் எம்.பி.பி.எஸ்., பி.இ. இரண்டுக்கும் சேர்த்து விண்ணப்பித்திருந்த மாணவர்களில் 11 பேர், எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதைப் புறக்கணித்து பி.இ. படிப்பில் சேர்ந்துள்ளனர்.

பொருளாதாரச் சரிவு காரணமாக பி.இ. மோகம் குறைந்து, இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, எம்.பி. பி.எஸ். படிப்பை விட்டுவிட்டு பி.இ. படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான்.

மேலும் படிப்பு குறித்து மாணவர்கள் திடமாக முடிவு எடுக்கும் வகையில், எம்.பி.பி.எஸ். கவுன்சலிங்போதே முழுமையான அட்மிஷன் கட்டணம் (ரூ.10,495) வசூலிக்கப்பட்டது.

மருத்துவப் படிப்பை புறக்கணித்து, பி.இ. சேர்ந்துள்ளவர்களுக்கு அட்மிஷன் கட்டணம் திருப்பித் தரப்பட மாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

காலியிடங்கள் குறித்து...: ""எம்.பி.பி.எஸ். படிப்புக்குத் தேர்வாகியுள்ள மாணவர்களை வரும் 23-ம் தேதி தொடர்புடைய மருத்துவக் கல்லூரிக்குச் சென்று மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே மருத்துவப் படிப்பைத் தேர்வு செய்த சில மாணவர்கள், பி.இ. படிப்பில் சேருவதால் ஏற்படும் காலியிடங்கள் குறித்து தொடர்புடைய மருத்துவக் கல்லூரியிலிருந்து வரும் 23-ம் தேதிக்குப் பிறகே தகவல் வரும்.

இந்தக் காலியிடங்கள் ரேங்க் பட்டியல் அடிப்படையில் இரண்டாவது கட்ட கவுன்சலிங்கின்போது (ஆகஸ்ட் 25) நிரப்பப்படும்'' என்றார் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails