ஹீரோவை துரத்திய இயக்குநர்

சென்னை குடிசை வாசிகளின் கதையான "யோகி'யை படமாக்கி வருகிறார் இயக்குநர் சுப்பிரமணிய சிவா.

அதில், இயக்குநர் அமீர் கதாநாயகனாக அறிமுகமாகிறார் அவருக்கு ஜோடியாக ராஜசுலோச்சனா எனும் கேரக்டரில் மதுமிதா நடிக்கிறார். கவிஞர் சினேகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன.

"யோகி' பற்றியும், இயக்குநராக இருந்து ஹீரோவாக மாறியிருக்கும் அனுபவங்களையும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் அமீர்.

""சாதாரண வாழ்வியலிருந்து விலகி வந்தவன் "யோகி'. அவனுக்குள் இருக்கும் வலிகள், ஏமாற்றங்கள், துக்கங்கள்தான் கதையின் சாரம். சென்னையில் உள்ள குடிசை பகுதிகளை களமாக்கி, அங்கு வாழும் "யோகி'யின் உண்ர்வுகள்தான் கதை. எட்டுக்கு எட்டு அறையில் அவர்கள் நடத்தும் வாழ்க்கையே தனிப் பாடமாக இருக்கும். பசி எடுக்கும் போது அங்கு இருக்கிற சூழ்நிலை, சுற்றியிருக்கும் மனிதர்கள் என எதையும் யோசிக்காமல் அடித்து பிடுங்கி சாப்பிடும் கேரக்டர்தான் யோகி. சிங்கம் மாதிரி திரிகிறவன்.

சினிமாவை நடிகனாக பார்க்கிற இந்த அனுபவம் எனக்கு புதிதாக இருக்கிறது. எனக்குள் இருக்கும் இயக்குநர் மூளை அடிக்கடி நடிகர் அமீரை துரத்திக் கொண்டே இருந்தது. அப்போதெல்லாம் நான் "ஹீரோ' என்பதை ஞாபகப்படுத்துவார் இயக்குநர் சிவா.

சிவா என் நண்பன். அவருடைய "திருடா திருடி' எனக்கு பிடித்த படங்களில் ஒன்று. ஒரு அழகான காதல் கதையை கலகலப்பாக சொல்லியிருந்தார். அவரது திறமையை புரிந்து கொண்டே, அவரின் இயக்கத்தில் நடிக்க சம்மதித்தேன்.

இந்த படத்தை மெசேஜ் சொல்ல எடுக்கவில்லை. ஆனால், மருந்துக்கு மெசேஜ் இருக்கும். ஹாலிவுட் தரத்துக்கு சண்டை காட்சிகளை படமாக்கியுள்ளோம். இதன் சண்டை காட்சிகள் நிச்சயம் பேசப்படும். டூப் போடாமல் நடித்ததால் இரண்டு தடவை அடிபட்டது. சண்டை ரியலா இருக்க வேண்டும் என்பதற்காகதான் டூப் போடாமல் நடித்தேன். "யோகி'யில் மொத்தம் 4 பாடல்கள். ஒரு பாடலை நான் பாடியிருக்கிறேன்.

மூன்று வேளையும் அசைவம் எடுத்துக் கொள்கிற நான். யோகிக்காக பச்சை காய்கறி சப்பாத்தி, அவித்த மூட்டையின் வெள்ளை கரு என பத்திய சாப்பாடுதான். நடிகனாக மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறேன்.

35 வருடமாக என்னை கண்ணாடியில் பார்த்து கொண்டிருக்கிறேன். ஒரு போட்டோ எடுத்து பார்ப்பதற்கும் சினிமாவில் ஹீரோவாக பார்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. படம் பார்க்கிற மக்கள்தான் அமீரைப் பற்றி பேசணும்.

இந்த படத்துக்கு ஏன் இவ்வளவு நாள் என கேட்காதவர்களே இல்லை. சென்னையில் ஷூட்டிங் நடத்தி அனுபவித்தவர்களுக்கு மட்டும்தான் இந்த வலி புரியும். சென்னையில் ஷூட்டிங் நடத்த அனுமதி வாங்கியதையே ஒரு கதையாக எழுதலாம். ஒரு வழியாக படம் முடிந்து மற்ற வேலைகள் நடந்துக் கொண்டிருக்கிறது. 12 கோடி ரூபாயில் உருவாகி விட்ட யோகியை தீபாவளிக்கு பார்க்கலாம் என்றார் அமீர்

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails