இது உரிமைக் குரல்!

நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 21 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கேட்டால், எங்கள் எல்லைக்குள் வந்து மீன் பிடித்தார்கள் என்று காரணம் கூறப்படுகிறது. ஆழ்கடலில் மீன்பிடிக்கப் போகும் அப்பாவி மீனவர்கள், எல்லைக்கோடு எங்கே இருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேலி இருக்கிறதா, எல்லைக்கோடுதான் இருக்கிறதா?

இத்தனை நாள்களும் விடுதலைப் புலிகள் இவர்களை சுட்டுவிட்டு எங்கள் மீது பழி போடுகிறார்கள் என்றும், இந்த மீனவர்கள் விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறார்கள் என்றும் இலங்கை அரசு தனது செய்கைகளுக்கு நியாயம் கற்பித்தது. இப்போதுதான் இலங்கை அரசின் கூற்றுப்படி விடுதலைப் புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, அந்த நாடே சிங்கள அரசின் ஆளுமைக்குள் வந்துவிட்டதே. பிறகும் ஏன், இந்த அப்பாவி மீனவர்கள் துன்புறுத்தப்பட வேண்டும்?

சேது சமுத்திரத் திட்டம் தொடங்கியது முதலே தமிழகக் கடல் எல்லைக்குள்ளும், வெளியேயும் மீன்கள் கிடைப்பதில்லை என்கிற குறைபாடு மீனவர்கள் மத்தியில் இருந்து வருகிறது. வங்காள விரிகுடாவிலிருந்து பெரிய அளவில் மீன்கள் இந்து மகா சமுத்திரப் பகுதிக்குச் சென்று விட்டதாகக் கூறுகிறார்கள். அதனால், இலங்கையைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக இந்த மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்வதில் நாம் குற்றம் காண முடியாது. அதிலும் குறிப்பாக, கச்சத்தீவு பகுதியில்தான் அதிகமாக மீன்கள் கிடைப்பதாகத் தெரிகிறது.

ஆதாரபூர்வமாகக் கச்சத்தீவு என்பது ராமநாதபுரம் சமஸ்தானத்துக்குச் சொந்தமான இடம் என்பது தெளிவு. 1974-லும், 1976-லும் இந்திய அரசு சரியான வழிகாட்டுதலைப் பெறாமல் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்து விட்டது என்பதும் உண்மை. ஆனால், அந்த ஒப்பந்தத்திலும்கூட, கச்சத்தீவில் மீன் பிடிக்கும் வலைகளைக் காயப் போடும் உரிமையும், கச்சத்தீவு அந்தோனியார் கோயிலில் திருவிழா நடத்தும் உரிமையும் இந்திய மீனவர்களுக்கு மறுக்கப்படவில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

ஒப்பந்தங்கள் என்பது மீறப்படக் கூடாது என்பது ஒரு சிலரின் வாதமாக இருக்கிறது. ஒரு நாட்டின் எல்லையோ, அல்லது ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தமோ மறுபரிசீலனைக்கும், மறு சீரமைப்புக்கும் உள்பட்டதுதான் என்பதற்கு எத்தனையோ உதாரணங்களைக் காட்ட முடியும்.

மக்மோகன் எல்லைக் கோடையும், அருணாசலப் பிரதேசத்தையும் இந்தியாவின் பகுதியாக சீனா ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. என்றோ இருந்த இஸ்ரேல் என்கிற நாட்டை, மேலை நாடுகள் இரண்டாம் உலகப் போரில் அடைந்த வெற்றியைப் பயன்படுத்தி மீண்டும் உருவாக்கி நிலைநிறுத்த முடிந்த பிறகும், சர்வதேச எல்லை, சர்வதேச ஒப்பந்தம் என்று பேசிக் கொண்டிருப்பது நாட்டு நலனைவிட அயல்நாட்டு சிநேகத்தை முன்னிலைப்படுத்தும் முயற்சியாகத்தான் இருக்கும்.

கச்சத்தீவில் அன்னிய நாடுகள் இராணுவ தளங்களை அமைக்க விடமாட்டோம் என்று இலங்கை அரசு உறுதி கூறிவிட்டது என்று இந்திய அரசு மகிழ்ச்சி அடைகிறது. ஆனால், கச்சத்தீவில் இலங்கை அரசு கண்காணிப்பு கோபுரங்களை அமைக்கிறதே, அதைப்பற்றி நாம் கவலைப்படாமல் இருந்தால் எப்படி? இதற்கு முன்னால் இந்தக் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தால், விடுதலைப்புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க அமைக்கிறோம் என்று இலங்கை சமாதானம் சொல்லியிருக்கும். இப்போது அமைக்கிறதே எதற்காக? நமது மீனவர்களைக் கண்காணிக்கவா? இந்தியாவையே கண்காணிக்கவா?

இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் எந்தவோர் அரசும் இன்னொரு நாட்டுக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட முடியாது. இந்தியாவின் எல்லைகளையும், இறையாண்மையையும் பாதுகாப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டுதான் ஒருவர் பதவி ஏற்கவே முடியும். அப்படியே சர்வதேச ஒப்பந்தம் ஏதாவது செய்யப்பட வேண்டுமானாலும்கூட, அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்தாக வேண்டும். இப்படி எதுவுமே இல்லாமல், கச்சத்தீவு 1974-ல் தாரை வார்க்கப்பட்டதே அது ஏன், எப்படி என்றெல்லாம் இப்போது ஆராய்ச்சி நடத்துவதை விட்டு விட்டு, அதை மீட்பதற்கு வழிகாண்பதுதான் புத்திசாலித்தனம்.

கச்சத்தீவை மீட்காமல் போனால், அங்கே இந்தியா தனது உரிமையை நிலைநாட்டாமல் போனால், 1974 ஒப்பந்தம் மறுபரிசீலனைக்கு உள்படுத்தப்பட்டு, அந்தத் தீவின் மீதான இந்திய உரிமை மீண்டும் நிலைநாட்டப்படாமல் போனால், அதன் விளைவுகள் இந்தியாவின் பாதுகாப்புக்கே பேராபத்தாக இருக்கும் என்பதை மத்திய அரசு இப்போதாவது உணர்ந்து செயல்பட வேண்டும். இதற்காக, சர்வதேச நீதிமன்றத்தை அணுகினாலும் சரி; இல்லை, ராஜபட்ச அரசிடம் கண்டிப்புடனும் கறாருடனும் ராஜதந்திரமாகப் பேசி நல்லதொரு முடிவை எட்டினாலும் சரி. கச்சத்தீவை மீட்டே தீர வேண்டும.

1974-ல் தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்த திமுகவால் கச்சத்தீவு விஷயத்தில் குரலெழுப்ப முடிந்ததே தவிர, அன்றைய இந்திரா காந்தி அரசு எடுத்த முடிவைத் தடுக்க முடியவில்லை. இன்றைய நிலைமை அப்படி அல்லவே. 1989 முதல் பல மத்திய அரசுகள் திமுகவின் தயவில் ஆட்சியில் அமர்ந்தும், தமிழகத்தின் உரிமைப் பிரச்னையான கச்சத்தீவைப் பற்றிய கரிசனம் அந்தக் கட்சித் தலைமைக்கு இல்லாமல் போனதன் காரணம்தான் என்ன என்பது புரியவில்லை.

எல்லோரும் ஆதரித்தால் கச்சத்தீவு பற்றிய தீர்மானத்தைத் திமுக அரசு சட்டமன்றத்தில் கொண்டு வரத் தயார் என்கிறார் முதல்வர் கருணாநிதி. அந்தத் தீர்மானத்தை யார் எதிர்க்கப் போகிறார்கள்? முன்னால் நின்று தீர்மானத்தை முன்மொழிய வேண்டிய முதல்வர் மற்றவர்களை முன்நிறுத்தி விட்டுப் பின்னால் இருந்து வழிமொழியலாமா?

கட்சி மனமாச்சரியங்களைத் தூக்கி எறிந்துவிட்டுக் கச்சத்தீவுக்காக ஒத்த குரலில் குரல் கொடுக்க நாம் தயாராகாவிட்டால், "நாமமிது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ, சொல்வீர்?

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails