துணைபோவதும் குற்றமே!

நேர்மையாளர், அப்பழுக்கற்றவர், கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என்று எதிர்க்கட்சியினரேகூட ஏற்றுக்கொள்ளும் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், ""கோடிகள்'' என்பது சர்வ சகஜமாக ஊழல்களிலும், முறைகேடான வர்த்தக நடவடிக்கைகளிலும் இடம்பெறுவது வருத்தமாக இருக்கிறது.

அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மத்திய தகவல் தொடர்புத்துறை கையாளும் வழிமுறைகளால் மத்திய அரசுக்கு வர வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் குறைந்துவிட்டது, ""முதலில் மனுச் செய்தவருக்கே முதலில் அனுமதி'' என்ற கொள்கையால் அரசுக்கு லாபம் ஏதும் இல்லை என்று இடைவிடாமல் கூறிவரும் நிலையில் "2-ஜி' அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் அதே முறையைக் கடைப்பிடித்துள்ளதாகவும், ஏற்கெனவே இப்படித்தான் நடந்திருக்கிறது என்றும் அத்துறைக்கான அமைச்சர் மீண்டும் கூறியிருக்கிறார்.

அடித்தளக் கட்டமைப்புத் துறையை மேம்படுத்தத் தேவைப்படும் திட்டங்களுக்காக அரசின் நவரத்தினங்களான அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளைக் கூட விற்றால் பரவாயில்லை என்ற அளவுக்கு நிதியைத் தேடும் ஓர் அரசு, இன்னமும், ""முதலில் வருபவருக்கு முதலில் அனுமதி'' என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பதன் மர்மம்தான் அம்பலமாகவில்லை.

இதில் ஊழல் நடைபெறுகிறது, கோடிக்கணக்கான பணம் கைமாறுகிறது என்பதெல்லாம் ஊகிக்க முடியாத விஷயங்கள் அல்ல. ஆனால் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாத வகையில் நன்கு திட்டமிட்டு, (நீதிபதி ரஞ்சித் சிங் சர்க்காரியா பாஷையில் சொல்வதானால்) விஞ்ஞான முறைப்படி நடைபெறுகிறது என்பதல்லவா உண்மை.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் தீருபாய் அம்பானியின் மறைவுக்குப் பிறகு அவருடைய பிள்ளைகள் முகேஷ் அம்பானியும் அனில் அம்பானியும் சொத்துகளைப் பிரித்துக் கொண்டதும், அதில் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டதும், அவர்களிடையே தொழில்ரீதியாகப் போட்டி ஏற்பட்டதும் அவர்களுடைய சொந்த விவகாரங்கள். ஆனால் நாட்டையே பாதிக்கும் ஒரு விஷயத்தை அந்தச் சகோதரர்களில் ஒருவர் சில நாள்களுக்கு முன்னால் தன்னுடைய நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் கலந்துகொண்ட பொதுக்குழு கூட்டத்தில் கூறியிருக்கிறார். அது உண்மையா அல்லது வியாபாரப் போட்டிக்காகக் கூறப்பட்டதா என்று விசாரித்து மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கடமை தனக்கு இருப்பதாகக் கூட மத்திய கம்பெனிகள் விவகாரத்துறையும் சட்டத்துறையும் காட்டிக் கொள்ள மறுக்கிறதே, அது ஏன் என்று நமக்கே கேட்கத் தோன்றுகிறதே, பிரதமர் மன்மோகன் சிங்கால் எப்படி எதுவுமே தெரியாததுபோல இருக்க முடிகிறது?

தேசிய அனல் மின் நிலையத்துக்குக் கூடத் தராமல் கோதாவரி-கிருஷ்ணா வடிநிலத்தில் கிடைக்கும் இயற்கை எரிவாயு முழுவதையும் தன்னுடைய சகோதரர் விற்றுக் காசாக்கப் பார்க்கிறார் என்று அம்பானி சகோதரர்களில் ஒருவரான அனில் அம்பானி குற்றம்சாட்டியிருக்கிறார். விசாரணைகூட இல்லாமல் போனால் எப்படி?

அடுத்ததாக வந்திருக்கிறது பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதியில் 2500 கோடி ரூபாய்க்கு நடந்திருப்பதாகக் கூறப்படும் புதிய ஊழல். இதை மக்களவையிலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வியாழக்கிழமை எழுப்பியிருக்கிறார்கள். இதில் உண்மையை வெளிக்கொண்டுவர நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக்குழுவை நியமிக்க வேண்டும் என்றுகூட ஒருமித்த குரலில் கோரியிருக்கிறார்கள். ""இது அவசியம் இல்லை, வெறும் அரசு விசாரணையே போதும்'' என்று மத்திய அமைச்சர் கூறிவிட்டார்.

ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்ய முற்பட்ட நிறுவனங்கள் எவை என்று வெளிப்படையாகத் தெரியவில்லையாம்; அந்த நாடுகளில் இந்த அரிசியை வாங்கும் நிறுவனங்கள் எது என்றும் தெரியவில்லையாம். அதைவிட வேடிக்கை, சில நாடுகளுக்கு இந்த அரிசியே போகவில்லையாம். அப்படியானால் ஏற்றுமதியானதாகக் கணக்கு காட்டப்பட்டு அந்த அரிசி இங்கேயே பதுக்கப்பட்டு, விலை ஏறும்போது விற்பதற்குப் பயன்படுத்தப்பட உள்ளதா? முன்பேர வர்த்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று நடுநிலையாளர்கள் கோரும்போதெல்லாம் அரசு அதை நிராகரிப்பது இது போல ஊழல்கள் நடந்தால்தான் தங்களுக்குத் தேர்தல் நிதி கிடைக்கும் என்பதாலா?

2,500 கோடி, 50,000 கோடி என்பதெல்லாம் வெறும் சைபர்கள்தானா, அந்த ரூபாய்க்கெல்லாம் மதிப்பே கிடையாதா? மக்கள் தொடர்ந்து ஏமாற வேண்டியதுதானா?

தவறுக்கு மேல் தவறு நடக்கிறது. அதைத் தட்டிக் கேட்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் கண்டும் காணாமல் இருப்பதும், தவறுக்குத் துணை போவதற்குச் சமம்தானே! குற்றம் செய்பவர்களைவிடக் குற்றத்துக்குத் துணை போவதல்லவா அதைவிடத் தவறு?

பொருளாதார மேதையாகவும், கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் போதுமா? தவறைத் தட்டிக் கேட்கவும், தடுக்கவும் திராணி இல்லாதவர்களும் தலைமைப் பதவியில் இருப்பதுபோன்ற ஆபத்து வேறு எதுவும் இருக்க முடியாது. இனியாவது, பிரதமர் சற்று சுதாரித்துக் கொண்டு செயல்பட்டால் அவருக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது!

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails