பங்குச் சந்தையில் தொடரும் சரிவு

பங்குச் சந்தையில் சரிவு மீண்டும் ஆரம்பமானது. புதன்கிழமை 219 புள்ளிகள் வீழ்ந்ததில் குறியீட்டெண் 14,843 புள்ளிகளாகக் குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையில் 70 புள்ளிகள் குறைந்து குறியீட்டெண் 4,557 ஆனது.

காலையில் வர்த்தகம் தொடங்கியபோது பங்குச் சந்தை ஏறுமுகத்தில் இருந்தது. ஒரு கட்டத்தில் 307 புள்ளிகள் வரை உயர்ந்த வர்த்தகம் பின்னர் சரிவடையத் தொடங்கியது.

பிஎச்இஎல் நிறுவனத்தின் முதல் காலாண்டு லாபம் மற்றும் விப்ரோ நிறுவனத்தின் லாபம் உள்ளிட்ட செய்திகள் சரிவைத் தடுக்கப் போதுமானதாக அமையவில்லை.

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு பிற்பகலில் மும்பை பங்குச் சந்தையைக் கடுமையாக பாதித்ததால் சரிவை தவிர்க்க முடியவில்லை.

அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் மிக அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்ததும் சரிவுக்குப் பிரதான காரணமாக அமைந்தது. இந்நிறுவனங்கள் செவ்வாய்க்கிழமை வரை ரூ. 250.86 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் 1.87 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. இதற்கு அடுத்தபடியாக ஆட்டோமொபைல் நிறுவனப் பங்குகளும், மின்துறை பங்குகளும் சரிவைச் சந்தித்தன.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் 1.60 சதவீதம் சரிந்தது. டாடா கன்சல்டன்ஸி நிறுவனப் பங்குகள் 2.42 சதவீதம் குறைந்து ரூ. 465.85-க்கு விற்பனையானது. இன்ஃபோசிஸ் டெக்னாலஜீஸ் பங்கு விலை 1.23 சதவீதம் குறைந்து ரூ. 1,919.20-க்கு விற்பனையானது.

மருந்து பொருள் தயாரிப்பு நிறுவனங்களின் பங்கு விலை 1.30 சதவீதம் சரிந்தது. வங்கித் துறை பங்குகளும் சரிவிலிருந்து தப்பவில்லை. ஐசிஐசிஐ வங்கி பங்கு 1.44 சதவீதம் சரிவைச் சந்தித்தது. எண்ணெய், எரிவாயு நிறுவனங்களின் பங்குகளும் கணிசமான சரிவைச் சந்தித்தன.

0 comments:

Post a Comment

Related Posts with Thumbnails